குடும்ப அட்டைகளில், 2015ஆம் ஆண்டிற்கான உள்தாள் ஒட்டி, ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
எப்பொருளும் வேண்டாத குடும்ப அட்டைகளை தட்கல் முறையில் இணையதளம் மூலம் எளிதில் கால நீட்டிப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
31.12.2014 நிலவரப்படி நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகள் 01-01-2015 முதல் 31.12.2015 வரை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கும் வகையில் அவற்றில் 2015ஆம் ஆண்டுக்கான உள்தாள் இணைக்கும் பணி 15.12.2014 முதல் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எப்பொருளும் வேண்டாதோருக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிறமுடைய குடும்ப அட்டைகளையும், இருப்பிட முகவரி ஆதாரத்திற்காக ‘தட்கல்’ முறையில் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமுடைய குடும்ப அட்டைகளையும் புதுப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இணையதள முகவரி www.consumer.tn.gov.in ஆகும். இதில் காணப்படும் N Cards Renewl for 2015 என்பதை தெரிவு செய்து மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டி பராமரிக்கும் விதமாக குடும்ப அட்டை கால நீட்டிப்பு பதிவுச் சீட்டு கணிணியில் அச்சடித்து அளிக்கப்படும். இதனை மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய கால நீட்டிப்பு பதிவுச் சீட்டு ஒட்டப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளாக கருதப்படும். இணையதள வசதியை பயன்படுத்த இயலாத குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை வார நாட்களில் (திங்கள் நீங்கலாக) தொடர்புகொண்டு, அதற்கான அத்தாட்சி முத்திரையை குடும்ப அட்டையில் பதிந்து, ‘N‘ அட்டைகளை 31.12.2014-க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் இவ்வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |