தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றுள்ளது. விபரம் வருமாறு:-
19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டி, தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி அணியை வென்றதன் மூலம் மாவட்ட அளவிலான போட்டியிலும்,
அதே மாதத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி அணியை வென்று மண்டல அளவிலான போட்டியிலும்,
தொடர்ந்து நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில், டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா பள்ளி அணியை வென்று மாநில அளவிலான போட்டியில் விளையாட காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தகுதி பெற்றிருந்தது.
இம்மாதம் 07ஆம் நாளன்று நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து முதல் சுற்றுப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, ராமநாதபுரம் டி-ப்ரிட்டோ மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்தாடி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது. எல்.கே.பள்ளி வீரர்கள் சுலைமான், ஃபயாஸ் ஆகியோர் தமதணிக்கான 2 கோல்களை அடித்திருந்தனர்.
இம்மாதம் 08ஆம் நாளன்று காலையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், திருச்சி காம்பியன் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடி, 3-1 என்ற கோல் கணக்கில் எல்.கே. பள்ளி அணி வென்று, அரையிறுதிக்குள். அந்த அணியின் சுலைமான், அஹ்மத், ஃபயாஸ் ஆகியோர் அந்த கோல்களை அடித்திருந்தனர்.
அன்று மாலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியுடன் விளையாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 2-3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது. எல்.கே.பள்ளி அணியின் கோல்களை அஸாரூத்தீன், ஃபயாஸ் ஆகியோர் அடித்திருந்தனர்.
அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி - 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் நான்காமிடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் கடைசி கட்ட போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஜமால்
உடற்கல்வி ஆசிரியர் - எல்.கே.மேனிலைப்பள்ளி
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |