உகாண்டா நாட்டில் இருந்து காயல்பட்டினத்துக்கு வந்த வாலிபருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு எபோலா நோய் பாதிப்பு உள்ளதா என்பது பற்றி பரிசோதனை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் பாபா காசிம். இவர் உகாண்டா நாட்டுக்கு வேலைக்காக சென்று இருந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபா காசிம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள மனைவியின் வீட்டுக்கு வந்து இருந்தார்.
அவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை.
எபோலா பாதிப்பா?
இதை தொடர்ந்து அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது எபோலா என்ற நோய் பரவி பலர் உயிர் இழந்து உள்ளனர். அதனால் இந்த வாலிபருக்கும் எபோலா நோய் தாக்கி உள்ளதா? என்று ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதே நேரத்தில் காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் துளசிராம் கூறுகையில், ‘‘அந்த வாலிபருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்ளது தெரியவந்து உள்ளது. எபோலா நோய் அவருக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.
சுகாதாரத்துறை நடவடிக்கை
இதற்கிடையே ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சுகாதாரத்துறை சார்பில், எபோலா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் எபோலா நோய்க்கான அறிகுறிகள், அந்த நோய் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross