நடப்பு மழைக்காலத்தையொட்டி, விஷக் காய்ச்சல்கள் பரவாமல் பாதுகாப்பதற்காக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில், இன்று (டிசம்பர் 18 வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில், பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வினியோகிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பானு, காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் நோய்களின் பாதிப்புகள் குறித்தும், அந்நோய்களைப் பரப்பும் கிருமிகளின் இயக்கத்தைத் தடுக்கும் நிலவேம்புச் சாறு, பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட மூலிகைச் சாறுகளின் மகத்துவம் குறித்தும் விளக்கிப் பேசியதோடு, பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாற்றை கோப்பைகளில் வழங்கி, வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் கே.ஜேஃப்ரீ, சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் நமச்சிவாயம் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாற்றை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, நிலவேம்புச் சாற்றைப் பருகினர். நண்பகல் 12.30 மணியளவில் சிறப்பு முகாம் நிறைவுற்றது.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், அரசு மருத்துவமனை மருந்தாளுநர்களான ஸ்டீஃபன், ராதாகிருஷ்ணன், சித்த மருத்துவப் பிரிவு மருந்தாளுநர் மீனா, செவிலி தனசுந்தரி உள்ளிட்ட - மருத்துவமனை அலுவலர்களும், ஊழியர்களும் முகாம் ஏற்பாடுகளை இணைந்து செய்திருந்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, கே.ஜமால் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
நடப்பு மழைக்காலத்தையொட்டி, பொதுமக்களுக்கு விஷக்காய்ச்சல்கள் பரவாதிருப்பதற்காகவே இச்சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும், முகாம் நிறைவுற்ற பின்னரும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் எல்லா வேலை நாட்களிலும் நிலவேம்புச் சாறு பெற்றுக்கொள்ளலாம் என்றும் முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
ஸ்டீஃபன்
மருந்தாளுநர் - அரசு மருத்துவமனை
கூடுதல் தகவல்கள் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |