காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் – KCGC சார்பில், மாணவர்களுக்கான சைக்கோமெட்ரிக் தேர்வு, ‘திறனாய்வுச் சோதனை’, ‘மதிப்பாய்வுரை’ என இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டு, பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பிற்குரிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் வல்லோன் அல்லாஹ்வின் கிருபையால் சென்ற 07.12.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று “சைக்கோமெட்ரிக் தேர்வு” எனப்படும் திறனாய்வுச் சோதனை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் (மதிப்பாய்வுரை) அமர்வு (Review Session) சென்ற 13.12.2014, சனிக்கிழமை அன்று காலை 10:30 – 02:30 மணி வரை சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.கே.பில்டிங் மூன்றாம் தளத்தில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்ச்சிக்கு கே.சி.ஜி.சி-யின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் எஸ். எச். அப்துல் சமது அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல புகழ்பெற்ற கார்ப்ரேட் நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை மேலாளரும், Thomas International Assessment நிறுவனத்தின் Global Certified Trainer - மதிப்பிற்குரிய சகோதரர் ஆர். பிரசன்னா வெங்கடேஷ் B.E , M.B.A அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
நிகழ்வின் ஆரம்பமாக, சிறப்பு விருந்திரை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் முஹம்மது முக்தார் அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் கே.சி.ஜி.சி-யின் பணிகள், அதன் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி சிறப்பு விருந்தினருக்கு சுருக்கமாக தெரிவித்தார்.
பின்னர் மதிப்பிற்குரிய சகோதரர் ஆர். பிரசன்னா வெங்கடேஷ் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற துவங்கினார்.
தனது உரையின் முன்னோட்டமாக மதிப்பாய்வுரை நிகழ்வு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற விதி அல்ல, மாறாக அனைவரும் எப்பொழுதும் போல் சாதாரணமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாய் மூடி இருக்கக் கூடாது. அமைதியாகவே இருந்து நேரத்தை கடத்தக்கூடாது. அனைவரும் பேச வேண்டும். கேள்விகளை கேட்க வேண்டும், இப்படித்தான் கேட்க வேண்டுமென்ற எந்த விதியுமில்லை. அதே நேரத்தில் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருத்தல் அவசியமானதாகும். இத்தேர்வின்/அமர்வின் அடிப்படையே இதுதான் என்றார்.
அதன்பின் முதல் அமர்வில் நடத்தப்பட்ட 1.Psychometric test 2.DISC personality test 3.Personality Style Test ஆகிய தேர்வுகளின் அடிப்படை சாரம்சத்தை ஒவ்வொன்றாக மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மிகவும் இயல்பாக, நகைச்சுவை கலந்த யதார்த்தத்துடன் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் மூலமாக விளக்கமளித்தார்.
'சைக்கோமெட்ரிக் டெஸ்ட்' எனும் உளவியல் ஆய்வு இன்று பணியிடத் தேர்வு முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த 'சைக்கோமெட்ரிக் டெஸ்ட்’ பெரும்பாலும் இவை 'ஆளுமை' பற்றிய கேள்விகளுக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' என பதிலளிக்கும் தேர்வுகள் என்றுதான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.! உண்மையில் - சைக்கோமெட்ரிக் தேர்வுக்கு நீங்கள் தயார் ஆக முடியாது; யாரும் உங்களை தயார் செய்யவும் கூடாது. நாம் அனைவருமே ஒரே மாதிரியான சுபாவம் கொண்டவர்கள் அல்லர். எனவே நீங்கள், நீங்களாகவே இருத்தல் வேண்டும். எனினும் உங்களது சில நடவடிக்கைகளை சரிசெய்து கொள்வதன் மூலம் உங்களது செயல்களை சிறப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்றார்.
அடுத்து சகோதரர் எஸ். எச். அப்துல் சமது அவர்கள், இதுவரை நமது சிறப்பு அழைப்பாளர் ஆற்றிய உரையில் நீங்கள் அறிந்துக்கொண்டது என்ன? இதிலிருந்து நீங்கள் பெறபட்டவை என்ன? என்ற வினாவோடு தனது உரையை துவக்கினார். அப்போது பல மாணவர்கள் பலவித கருத்துக்களைத் தெரிவித்தனர். இறுதியில் அவர் கூறுகையில் இன்றைய உரையின் சாரம்சம் என்பது “என்னை அறிந்தால்” அதாவது ஒவ்வொருவரும் தன்னை அறிந்துக்கொள்ள வேண்டும். தன்னை அறிந்துக்கொள்வதன் மூலம் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய இயலும், வாழ்வில் வெற்றி பெறமுடியும். எனவே ஒவ்வொருவரும் தனக்குரிய பங்கை திறம்பட செய்து, உயர்ந்த இலக்கை அடைய வாழ்த்துக்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இத்துடன் இந்நிகழ்வின் முதல் பகுதி நிறைவுச் செய்யப்பட்டு அனைவருக்கும் உடல் இளைப்பாற தேனீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியாக, முதல் அமர்வில் (07.12.2014) மேற்கொண்ட மூன்று தேர்வுகளின் (Psychometric test, .DISC personality test & Personality Style Test) மதிப்பாய்வுரை (Review Session) அமர்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக அழைக்கப்பட்டு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவருடைய ஆய்வறிக்கையை (Reports) பரிசீலித்து, தேவையான தகவல்களை கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட மாணவருடைய கூடுதல் (பிளஸ்), குறைவு (மைனஸ்), தனித்தன்மைகள், திறன்கள், தவிர்க்கப்பட வேண்டியவைகள், ஏற்படுத்திக்கொள்ள வேண்டியவைகள், எத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் சிறப்பானது, தன்னுடைய ஆற்றல், திறன் போன்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தகவல்களும் பயிற்சியாளரால் வழங்கப்பட்டது.
இதனிடையே மற்றொரு நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட, மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் விதமாக நாட்டில் இருக்கும் பிரச்சனை தொடர்பான ஒரு தலைப்பைக் கொடுத்து அதில் தங்களது கருத்தை ஆங்கிலத்தில் சொல்ல முயற்சிக்க வேண்டுமென்ற விதியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு தனிநபர் ஆய்விற்குப் பிறகும் மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொண்ட தேர்வின் ஆய்வறிக்கைகள் (பைண்டிங் செய்யப்பட்டது) மற்றும் நிகழ்வில் பங்கேற்றதற்கான KCGC-ன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இறுதியில் நிகழ்ச்சியின் நிறைவாக சிறப்பு விருந்தினர் மற்றும் பயிற்சியாளர் சகோதரர் ஆர். பிரசன்னா வெங்கடேஷ் அவர்களுக்கு கே.சி.ஜி.சி-யின் தலைவர் எஸ்.எஸ். அஹமது ரிஃபாய் அவர்கள் நினைவு பரிசை வழங்கி கௌரவித்து நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்குக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் வருங்காலத்தை வளமானதாக, சிறப்பானதாக அமைய வாழ்த்து தெரிவித்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
எங்களது அழைப்பை இன்முகத்துடன் ஏற்று, இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கண்டு, மாணவர்களுக்கு தேவையான தகவல்களை தனது உரை மற்றும் பயிற்சியின் மூலம் வழங்கிய பிரபல புகழ்பெற்ற கார்ப்ரேட் நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை மேலாளரும், Thomas International Assessment நிறுவனத்தின் Global Certified Trainer - மதிப்பிற்குரிய சகோதரர் ஆர். பிரசன்னா வெங்கடேஷ் B.E, M.B.A அவர்களுக்கும்;
இந்நிகழ்ச்சியின் இரு அமர்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் சகோதரர் முஹம்மது முக்தார் மற்றும் அவரது நண்பர் சகோதரர் சூஃபி ஆகியோருக்கும், அனைத்து உள்கட்டமைப்புக்கு வசதிகளையும் செய்து கொடுத்த அயீசரா ஜுவல்ஸ் நிறுவனத்தாருக்கும், ஒத்துழைப்பு நல்கிய அதன் பணியாளர்களுக்கும். நிகழ்ச்சியை வழிநடத்தி கொடுத்து, நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்விலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும்; நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எமது கே.சி.ஜி.சி-யின் நிர்வாகம் உள்ளார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. ஜஸாக்கல்லாஹூ கைரன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |