கத்தர் காயல் நல மன்றத்தின் 8ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் 22ஆவது பொதுக்குழுக் கூட்டம், திரளான மன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடலுடன் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 8ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் 22ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சிகள், இம்மாதம் 05ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், கத்தரிலுள்ள உம்ஸஈத் பூங்காவில் நடைபெற்றது.
நிகழ்முறை:
மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மூத்த உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஸாலிஹ் உமரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கத்தீபு மாமுனா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மார்க்க சொற்பொழிவு:
அமைப்பின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், வேற்றுமை எண்ணங்கள் களையப்பட்டு, ஒற்றுமையை வலிமைப்படுத்தல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ சிறப்புரையாற்றினார். ‘கவிக்குயில்’ ஏ.எச்.ஃபாயிஸ் இஸ்லாமிய பாடல் பாடினார்.
மன்றப் பொருளாளர் அஸ்லம் நிதிநிலையறிக்கையை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது. செயலாளர் செய்யித் முஹ்யித்தீன், நடப்பு 2014ஆம் ஆண்டின் மன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் அறிக்கையாக சமர்ப்பித்தார்.
தலைமையுரை:
தலைமை தாங்கிய - மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தலைமையுரையாற்றினார்.
உறுப்பினர் சந்தா தொகையை நிலுவையின்றி செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியும், இக்ராஃ - ஷிஃபா அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், தனக்கேயுரிய நகைச்சுவையுடன் அவர் பேசினார்.
சிறப்பழைப்பாளர் வாழ்த்துரை:
திருச்சி எல்.கே.எஸ்.ஜுவல்லர்ஸ் மற்றும் ஃபர்னிச்சர் நிறுவனங்களின் பங்குதாரர் எல்.கே.செய்யித் அஹ்மத் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார்.
கடல் கடந்து வாழ்ந்து வருகிறபோதிலும், பிறந்த மண்ணுக்காக தமது சிந்தனைகளையும், உடல் உழைப்பு மற்றும் பொருள் வளத்தையும் வாரி வழங்கும் காயல் நல மன்றங்களின் சிந்தனை மகத்தானது என்று புகழ்ந்துரைத்த அவர், ஊர் மக்களுக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும், உலக சமாதானத்திற்காகவும் அனைவரும் மனமார பிரார்த்திக்குமாறும், உழைக்க வந்த நாட்டிற்கு உண்மை விசுவாசத்துடன் இருக்குமாறும், செலவினங்களை பகுத்தாய்ந்து அழகுற செலவழிக்குமாறும் அறிவுரைகளை வழங்கினார்.
தலைவர் உரை:
தொடர்ந்து, மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் உரையாற்றினார். மன்றத்தின் நடப்பு மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசிய அவர். வருங்காலப் பணிகளை வடிவமைப்பது தொடர்பாக அனைவருடனும் கலந்தாலோசித்து, கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
திருமண அழைப்பு:
விரைவில் திருமணம் செய்யவுள்ள மன்ற உறுப்பினர்களான வி.எஸ்.டி.தாவூத், பொக்கு ஹல்லாஜ் ஆகியோர் தமது திருமண நிகழ்ச்சியிலும், மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் சோனா முஹ்யித்தீன் தனது மகனது திருமண நிகழ்ச்சியிலும், செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர், எம்.என்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் தம் மருமக்களின் திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.
மன்ற உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட புது மணமக்கள் நல்வாழ்விற்காக அனைவரும் பிரார்த்தித்து, வாழ்த்து கூறினர்.
மொகுதூம் மீரான் நன்றி கூற, ஹாஃபிழ் ஏ.எச்.எஸ்.நஸ்ருத்தீன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
விருந்துபசரிப்பு:
அனைவருக்கும், சோனா முஹ்யித்தீன், வி.எஸ்.டி.தாவூத், பொக்கு ஹல்லாஜ் அனுசரணையில் விருந்துபுசரிப்பு செய்யப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகளை, ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, பொக்கு ஹல்லாஜ், முஹம்மத் முஹ்யித்தீன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
விளையாட்டு:
மதிய உணவைத் தொடர்ந்து, சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், இளைஞர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்ததோடு, வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (21ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |