சஊதி அரபிய்யா - மதீனா முனவ்வராவில் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது புனித ரவ்ழா ஷரீஃப் அருகிலிருந்தவாறு திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதவும், அதன் சட்டங்களைப் பேணவும் பயிற்றுவிக்கும் - ஹளரத் மவ்லானா அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அல்காரீ அஷ்ஷெய்க் முஹம்மத் இப்றாஹீம், இன்று காயல்பட்டினம் வருகை தந்துள்ளார்.
இன்று காலை 06.30 மணி முதல் 08.00 மணி வரை - காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில் - மார்க்க அறிஞர்களான உலமாக்கள், திருமறை குர்ஆனை மனதில் பதிந்துள்ள ஹாஃபிழ்கள், அதை அழகுற ஓதும் காரீகள், அதற்கு நாட்டமுள்ள கிராஅத் ஆர்வலர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடியதோடு, திருக்குர்ஆனைப் பிழையின்றியும், இனிமையாகவும், தஜ்வீத் கலையைப் பேணியும், பொருளறிந்தும் ஓத வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்புரையும் ஆற்றி, நீண்ட துஆ பிரார்த்தனையுடன் உரையை நிறைவு செய்தார்.
“சாதாரண உச்சரிப்புப் பிழைதானே...?” என்று கருதி அலட்சியமாக ஓதப்படுகையில், சில வசனங்களின் பொருளே நேர்முரணாக மாறி, நன்மைக்குப் பகரமாக பாவத்தைச் சம்பாதிக்கக் காரணியாகிவிடும் என அவர் - தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
ஷாதுலிய்யா தரீக்காவின் ஃகலீஃபத்துல் ஃகுலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன், ஜாவியா அரபிக் கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியரும் - மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஹிதாயத்துல்லாஹ் பாக்கவீ உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இன்று நண்பகல் 12.20 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் குத்பா உரையாற்றி, தொழுகையை வழிநடத்துகிறார்.
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |