சஊதி அரபிய்யா - மதீனா முனவ்வராவில் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது புனித ரவ்ழா ஷரீஃப் அருகிலிருந்தவாறு திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதவும், அதன் சட்டங்களைப் பேணவும் பயிற்றுவிக்கும் - ஹளரத் மவ்லானா அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அல்காரீ அஷ்ஷெய்க் முஹம்மத் இப்றாஹீம், இன்று காயல்பட்டினம் வருகை தந்துள்ளார்.
இன்று காலை 06.30 மணி முதல் 08.00 மணி வரை - காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில் அவர் சிறப்புரையாற்றி, துஆ பிரார்த்தனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று நண்பகல் 12.20 மணியளவில், காயல்பட்டினம் ஜாவியா குழுவினர் அரபி பைத் பாடி காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர், “கல்வியின் சிறப்பு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பள்ளியின் கத்தீபும், ஜாவியா – அரூஸுல் ஜன்னஹ் அரபிக்கல்லூரிகளின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ அவரது அரபி மொழியிலான உரையை தமிழாக்கம் செய்தார்.
ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, அஷ்ஷெய்க் முஹம்மத் இப்றாஹீம் நீண்ட துஆ பிரார்த்தனை செய்தார். பின்னர் அனைவரும் வரிசையில் நின்று அவருடன் ‘முஸாஃபஹா’ - கைலாகு செய்துகொண்டனர்.
நிகழ்ச்சிகள் மற்றும் ஜும்ஆ தொழுகையில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த இவர், சஊதி அரபிய்யா - மதீனா முனவ்வராவில் திருக்குர்ஆன் ஆசிரியராகப் பணியாற்றி வருவதும், தனக்குக் கிடைத்த 40 நாட்கள் விடுமுறையை இந்தியாவில் கழிக்க அவர் திட்டமிட்டுள்ளதும், இந்தியப் பயண வரிசையில் காயல்பட்டினம் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |