காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், 54 பயனாளிகளுக்கு தொழில் செய்ய கருவிகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 10 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 54 பயனாளிகளுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று (பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலக வளாகத்தில் இன்று காலை 11.00 மணியளவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வினியோக நிகழ்ச்சி, குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் தலைவர் ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமையில், ஏ.ஆர்.அப்துல் வதூத், எஸ்.ஏ.ஜவாஹிர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்றுப் பேசினார்.
மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் - வாழ்த்துரை வழங்கினார். அவரது உரைச் சுருக்கம்:-
நாங்கள் ஹாங்காங் நாட்டில் இருந்தபோது, நகர மக்களை ஒருங்கிணைத்து இதுபோன்ற செயல்திட்டங்களையெல்லாம் செய்ய நாடியும் அது நிறைவேறாத நிலையில், இன்றைய இளைஞர்கள் நாங்கள் நினைத்ததை விட சிறப்பான முறையில் அவற்றைச் செய்து வருகின்றனர்.
தன்னலம் பாராமல் அவர்கள் செய்து வரும் இவ்வரிய சேவைகளுக்காக அவர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நிறைவான நற்கூலிகளை வழங்கியருள்வானாக...
இந்த உதவித் திட்டத்தின் கீழ் உதவிப் பொருட்களைப் பெறும் பயனாளிகள், இறையருளால் தம் வாழ்வை இதன் மூலம் வளப்படுத்தி, வருங்காலங்களில் பலருக்கு உதவிடும் வகையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்...
இவ்வாறு அவர் பேசி, துஆ பிரார்த்தனையுடன் நலத்திட்ட உதவிப் பொருட்கள் வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
மாவரைக்கும் இயந்திரங்கள் (க்ரைண்டர்), தையல் இயந்திரங்கள், ஒவன், இட்லி சட்டி, இடியாப்ப சட்டி, அச்சி முறுக்கு செய்யும் பாத்திரங்கள், சரக்கேற்றும் மிதிவண்டி, சரக்கேற்றிச் செல்லும் 3 சக்கர வண்டி, எலக்ட்ரீஷியன்களுக்குத் தேவையான ட்ரில்லிங் மெஷின் உள்ளிட்ட - சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள், 54 பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்ச்சியின்போது முதற்கட்டமாக, சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேடையில் அங்கம் வகித்தோர், தொழிற்கருவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினர்.
ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, பொருளாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட நிர்வாகிகளும், அங்கத்தினரும் செய்திருந்தனர்.
புதிதாகத் தொழில் செய்ய முனைவோருக்கு மட்டுமின்றி, ஏற்கனவே தொழில் செய்து வருவோர் தமது தொழிற்கருவிகள் தேய்மானம் கண்டு - தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்த இயலாத நிலையில், வட்டி அடிப்படையில் கடன் பெற நாடுவதாகவும், அச்சூழலைத் தவிர்த்திடும் நோக்கில், அவர்களையும் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தொழிற்கருவிகள் உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் சார்பாக
எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ
(உள்ளூர் பிரதிநிதி)
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் சார்பில் இதற்கு முன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |