அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணக்கத்தை அதிகமாக்கும் பொருட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் “மருத்துவமனை நாள் விழா” ஆண்டுதோறும் நடத்திட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுப்படி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை நாள் விழா நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு மருத்துவமனை நாள் விழா நேற்று (பிப்ரவரி 14 சனிக்கிழமை) 15.30 மணிக்கு, அரசு மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் க.ஜேப்ரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆண்டறிக்கையை, தலைமைச் செவிலி கணபதி செல்வி வாசித்தார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் நலனில் அக்கறை கொண்டு, தன்னார்வத்துடன் செயலாற்றிய – நகர்மன்றத் தலைவரின் தந்தை பாளையம் இப்றாஹீம், அரசு மருத்துவமனையில் நீண்ட காலம் பணியாற்றி, அண்மையில் காலமான காதர் ஆகியோரை நினைவுகூரும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர் பாவநாசகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிங்ஸ்டன், பல் மருத்துவர் ப்ரைட்டன், மருத்துவமனையை உள்ளடக்கிய - 15ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை (சென்னை) கூடுதல் இயக்குநர் (ஓய்வு) மருத்துவர் ஜெ.நல்லதம்பி ஞான திவாகரன் சிறப்புரையாற்றினார்.
உரையாற்றிய மருத்துவர்கள் அனைவரும், நாட்டில் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான காரணங்கள், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாகப் பேசினர்.
மேடையில் அங்கம் வகித்தோருக்கு, அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், அலுவலர்கள், செவிலியர் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மருந்தாளுநர் ஸ்டீஃபன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் நமச்சிவாயம் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இவ்விழாவில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள், உள்நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள், அவர்களது குழந்தைகளின் பாடல், நடனம், பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியில் அங்கம் வகித்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை அலுவலர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
மருத்துவமனை நாள் விழாவை முன்னிட்டு, செவிலியர் அனைவரும் பச்சை நிறத்தில் ஒரே வடிவமைப்பிலான சேலைகளை அணிந்தவாறு விழாவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு (2014ஆம் ஆண்டில்) நடைபெற்ற மருத்துவமனை நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |