எதிர்வரும் நோன்புப் பெருநாளையடுத்து, காயல்பட்டினம் நகரளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி நடத்தப்படவுள்ளதாக, சிறிய குத்பா பள்ளிக்குட்பட்ட மன்பஉல் பரக்காத் சங்க வளாகத்தில் அமைந்துள்ள காயல்பட்டினம் ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கான கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 19.00 மணியளவில், கூட்டமைப்பின் அலுவலகத்தில், மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் தலைமையில், ஏ.ஆர்.அப்துல் வதூத் முன்னிலையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்புரையாற்றினார்.
அமைப்பின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை, அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் விளக்கிப் பேசினார்.
விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அலுவலகப் பொறுப்பாளர்:
ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு அலுவலகத்தின் அன்றாடச் செயல்பாடுகளை முழு அளவில் செய்திட, தகுதிவாய்ந்த பொறுப்பாளர் ஒருவரைப் பணியமர்த்தி, கவுரவமான மாத ஊதியம் வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டு, பெறப்படும் விண்ணப்பங்களை – ஹாஃபிழ் / ஆலிம் / பட்டதாரி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளித்துப் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - திருக்குர்ஆன் மனனப் போட்டி:
எதிர்வரும் நோன்புப் பெருநாளையடுத்த முதல் வாரத்தில், காயல்பட்டினம் நகரளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியை நடத்தி, வெற்றி பெறுவோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
இப்போட்டியில் பரிசு பெறுவோருக்கு, ஹாஃபிழ்கள் கூட்டமைப்பால் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள தென்மாவட்டங்கள் அளவிலான (அல்லது) மாநிலந்தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்கவும், இதர இடங்களில் பிறரால் நடத்தப்படும் மாநில / தேசிய / சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் பங்கேற்கவும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது.
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்ட ஏற்பாடுகளை, ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், உமர் ஆகியோர் செய்திருந்தனர்.
ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |