கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி மையவாடிக்கு இடம் வாங்கும் வகைக்கு நிதி திரட்ட, அதன் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தனிக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து பொதுமக்களிடமும் பங்களிப்பைப் பெற்றிட சிறப்புத் திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் முஸ்லிம்களுள் மரணிப்போரை, இதுநாள் வரை குருவித்துறைப் பள்ளி மையவாடியிலேயே அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட தொலைவு, மழைக்கால அவதிகளைக் கருத்திற்கொண்டு, பள்ளியையொட்டிய நிலத்தை மையவாடிக்காக வாங்கிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, அதற்கான நிதி திரட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை மற்றும் நகரப் பிரமுகர்கள் பலர் இவ்வகைக்காக நன்கொடையளிக்க உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளியின் நிர்வாகிகள் கூட்டம், இம்மாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 17.00 மணியளவில், பள்ளி அலுவலக வளாகத்தில், என்.டீ.ஷெய்கு மொகுதூம் தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் என்.டீ.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ வரவேற்றுப் பேசினார். கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ விளக்கிப் பேசினார்.
பள்ளியையொட்டியுள்ள காலி மனையை மையவாடிக்காக பணம் கொடுத்து வாங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், போதிய நிதியைத் திரட்டுவதற்காக எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஸ்டார் எம்.எஸ்.அப்துல் காதிர் ஆகியோர் தலைமையில் நிதி திரட்டும் சிறப்புக் குழுவை நியமிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இப்புனிதப் பணிக்காக - நகர பொதுமக்கள் அனைவரிடமிருந்தும் சிறிதளவேனும் நன்கொடைகளைப் பெற்றிடுவதற்காக - ஒரு சதுர அடிக்கு ஆகும் செலவுத் தொகையைக் கணக்கிட்டு, நன்கொடைச் சீட்டு அச்சடித்து, பொதுமக்களிடம் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், வழமை போல - முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி நிகழ்ச்சிகளை இம்மாதம் 22ஆம் நாளன்று நடத்திடவும், பொதுமக்களின் மார்க்க அறிவை மேம்படுத்தும் நோக்குடன் வினா-விடை போட்டி நடத்தி, பரிசுகளை வழங்கிடவும் தீர்மானிக்கப்பட்டது.
கந்தூரி விழா மற்றும் வினா-விடை போட்டித் தகவல்கள் அடங்கிய பிரசுரம் வருமாறு:-
பள்ளி தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |