1925ம் ஆண்டு தாரங்கதாராவில் (தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள ஊர்) துவங்கப்பட்ட DCW தொழிற்சாலை, 1958ம் ஆண்டு காயல்பட்டினம்
நகரில் தனது காலினை பதித்தது. இந்த பகுதியில் - உப்பின் மூலம் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்திட விரும்பிய இந்நிறுவனத்திற்கு, அப்போதைய
மதராஸ் அரசாங்கம், 1382 ஏக்கர் நிலங்களை - LAND ACQUISITION ACT, 1894 சட்டத்தின் கீழ் ஆர்ஜிதம்
செய்து வழங்கியது.
இந்நிலங்கள் போக, DCW நிறுவனம் - 978.38 ஏக்கர் நிலத்தையும் அரசாங்கத்திடம் கோரியது. அந்த இடங்களை உடனடியாக வாங்கிட தங்களிடம்
நிதியாதாரம் இல்லை என்பதால், அந்நிலங்களை குத்தகைக்கு வழங்கிடும்படியும் அந்நிறுவனம் அரசிடம் கோரியது.
DCW நிறுவனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் - அரசாணை ஒன்று 1959 இல் வெளியானது (G.O. Ms.No.76; 7.1.1959). அதன் முக்கிய
அம்சங்கள் வருமாறு:
(1) அனைத்து நிலங்களையும் - குத்தகை காலத்திற்கு உள்ளோ, அல்லது குத்தகை நிறைவுற்று 6 மாதத்திற்கு உள்ளோ - நிறுவனம் வாங்கிட
வேண்டும்
(2) குத்தகைக்கு விடப்படும் நிலங்களின் மதிப்பு - தற்போதைய சந்தை விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
(3) குத்தகைக்கு விடப்பப்படும் நிலங்களின் தற்போதைய மதிப்பில் - 6 சதவீதம், குத்தகை வாடகை தொகை ஆகும்
(4) ஆரம்பமாக தீர்வை தொகையை விட 20 மடங்கு தொகை - நிறுவனத்திடம் இருந்து வசூல் செய்யப்பட வேண்டும்
(5) குத்தகைக்கு வழங்கப்படும் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு நிதியில் இருந்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும்; நிறுவனம்
அத்தொகையை வழங்கிட நிர்பந்தம் செய்ய தேவையில்லை
இந்த அரசாணையை தொடர்ந்து - 1963ம் ஆண்டு, அந்நிலங்களில் DCW தொழிற்சாலை நுழைந்தது. இருப்பினும், அரசாங்கத்திற்கும், DCW
தொழிற்சாலைக்கும் எந்த ஒப்பந்தமும் - குத்தகை குறித்து - அப்போது கையெழுத்தாகவில்லை.
அந்நிலங்களை DCW நிறுவனம் பயன்படுத்த துவங்கி 10 ஆண்டுகள் கழித்து, 1973ம் ஆண்டு - நிலங்களின் மதிப்பாக (CAPITAL VALUE) 3,91,233
ரூபாய், 91 பைசா நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் 6 சதவீதம் (23, 474 ரூபாய், 3 பைசா) ஓர் ஆண்டிற்கான குத்தகை வாடகை என்றும்,
அந்நிறுவனத்திற்கு - திருச்செந்தூர் வட்டாசியரால் தெரிவிக்கப்பட்டது.
1959ம் ஆண்டின் அரசாணை, குத்தகைக்கான நிலங்களின் விஸ்தீரணம் 978.38 ஏக்கர் என்று தெரிவித்தாலும், 1975ம் ஆண்டு கையெழுத்தான
குத்தகை ஒப்பந்தம், குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலம் 793.39 ஏக்கர் என்று தெரிவிக்கிறது.
1975ம் ஆண்டைய குத்தகை ஒப்பந்தம் (13 பக்கங்கள்)
வருவாய் கிராமங்கள் வாரியாக, குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்களின் விஸ்தீரணம்:
புன்னக்காயல் - 448 ஏக்கர் 6 சென்ட்
சேர்ந்தமங்களம் - 200 ஏக்கர் 90 சென்ட்
காயல்பட்டினம் வட பாகம் - 144 ஏக்கர் 43 சென்ட்
DCW தொழிற்சாலைக்கு அரசு - குத்தகை அடிப்படையில் வழங்கிய புறம்போக்கு நிலங்களின் மதிப்பாக (CAPITAL VALUE) 3,91,233 ரூபாய், 91 பைசா - கீழ்க்காணும் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதாக, காயல்பட்டணம்.காம் வசம் உள்ள ஆவணம் தெரிவிக்கிறது:
645.67 ஏக்கர் நிலம் (ஏக்கர் ஒன்று ரூபாய் 276 ரூபாய் அடிப்படையில்) = 1,78,204.92
1.27 ஏக்கர் நிலம் (ஏக்கர் ஒன்று ரூபாய் 370 ரூபாய் அடிப்படையில்) = 469.90
3.98 ஏக்கர் நிலம் (ஏக்கர் ஒன்று ரூபாய் 2,460 ரூபாய் அடிப்படையில்) = 9,790.80
1.44 ஏக்கர் நிலம் (ஏக்கர் ஒன்று ரூபாய் 3,405 ரூபாய் அடிப்படையில்) = 4,903.20
141.03 ஏக்கர் நிலம் (ஏக்கர் ஒன்று ரூபாய் 1,304 ரூபாய் அடிப்படையில்) = 1,97,865.09
793.39 ஏக்கர் நிலங்களின் மொத்த மதிப்பு - 3,91,233 ரூபாய், 91 பைசா
இது குறித்த ஒப்பந்தமும் - அரசுக்கும், DCW நிறுவனத்திற்கும் இடையில், ஏப்ரல் 21, 1975இல், போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் - 1959 ம் ஆண்டு அரசாணையில் குறிப்பிடப்பட்ட - சில நிபந்தனைகள் உட்பட பல நிபந்தனைகளும், BOARD STANDING ORDER 24-A கூறும் விதிமுறைகளும் இணைக்கப்பட்டது.
குத்தகை காலம் - 1993ம் ஆண்டு (30 ஆண்டுகள் கழித்து) முடிவுறும் என்றும் - அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.
குத்தகை வாடகையுடன், LOCAL CESS, LOCAL CESS SURCHARGE போன்ற வரிகளை, DCW நிறுவனம் செலுத்தவேண்டும் என்றும் ஒப்பந்த விதிமுறைகள் தெரிவித்தன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களிலேயே பிரச்சனைகள் துவங்கியது.
[தொடரும்] |