காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் கால்கோள் நாள் விழா மினி மாரத்தான் போட்டியில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த வாலிபர் முதலிடம் பெற்றுள்ளார். இதுகுறித்து, ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சாகுபுரம் டி.சி.டபிள்யு நிறுவனத்தின் 57வது கால்கோள் தினவிழாவை முன்னிட்டு பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் ஆண்டு தோறும் மினிமாரத்தான் போட்டி நடந்து வருகிறது. சாகுபுரத்தில் இருந்து ஆறுமுகநேரி, பேயன்விளை, ரத்னாபுரி, காயல்பட்டணம் வந்து பைபாஸ் ரோடு வழியாக மீண்டும் சாகுபுரம் வரையிலான 12 கிமீ தூரம் கொண்ட இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இருபிரிவாக நடந்தது. பெண்களுக்கான போட்டியை இந்திய கைப்பந்து கழகஅணி முன்னாள் தலைவர் மங்களா ஜெயபால் துவக்கி வைத்தார். ஆண்களுக்கான போட்டியை அர்ச்சனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் ஆயிரத்து 150 பேரும் பெண்கள் பிரிவில் 120 பேரும் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் என்.புதூரைச் சார்ந்த வாலிபர் ராமமூர்த்தி 34.27 நிமிடத்தில் வந்து முதலிடம் பெற்றார். திண்டுக்கல் கே.ஆர்.கல்லூரி மாணவர் சகாதேவன் 39.28 நிமிடத்தில் வந்து 2வது இடத்தையும், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி மாணவர் ரூபன் டேனியல் 40.23 நிமிடத்தில் வந்து 3வது இடத்தையும் பெற்றனர். அதே கல்லூரி மாணவர் அருண்குமார் 4வது இடத்தையும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் சேர்மபாண்டி 5வது இடத்தையும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் திருநெல்வேலி விவேகானந்தா வித்யாஸ்ரமம் பள்ளி மாணவி சுப்புலட்சுமி 52.01 நிமிடத்தில் வந்து முதலிடம் பெற்றார். திருநெல்வேலி சாரதா கல்லூரி மாணவி ரம்யா 53.02 நிமிடத்தில் வந்து 2வது இடத்தையும், அதே கல்லூரி மாணவி முத்துமாரி 53.40 நிமிடத்தில் வந்து 3வது இடத்தையும் பெற்றார். காட்டுநாயக்கன்பட்டி பள்ளி மாணவி ஜெயபாரதி 4வது இடத்தையும், செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி செல்வி 5வது இடத்தையும் பெற்றனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு 57வது கால்கோள் தின விழாக்குழு தலைவர் - டி.சி.டபிள்யு. நிறுவன நிர்வாக உதவித் தலைவர் (நிர்வாகம்) டாக்டர் மேகநாதன் தலைமை வகித்தார். நிர்வாக உதவித் தலைவர்கள் ஜெயக்குமார், சுபாஷ் டாண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுக்குழு தலைவர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கைப்பந்து கழகஅணி முன்னாள் தலைவர் மங்களர் ஜெயபால், கபடி வீரர் மணத்தி கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினர். பரிசு பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, ரொக்கப்பரிசு மற்றும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர்.
மினி மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் டி.சி.டபிள்யு நிறுவன மூத்த பொது மேலாளர்கள், பொது மேலாளர்கள், மேலாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாக்குழு துணைத் தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையில், 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கால்கோல் நாள் விழா தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
DCW ஆலை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |