டெல்லி சட்டமன்றத் தேர்தலில் - மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதையடுத்து, அங்கு அக்கட்சி ஆட்சியமைக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு:
தேர்தல் வெற்றிக்குப் பின்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் ஆட்சி அமைக்க துணைநிலை கவர்னர் நஜீப் சுங்கை சந்தித்து உரிமை கோரினார்.
புதிய அரசு பதவியேற்பு விழா:
கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவி ஏற்கும் விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று 12.15 மணியளவில் நடைபெற்றது. இதில் டெல்லியின் 8ஆவது முதல் மந்திரியாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சரவை விபரம்:
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் மந்திரிகளாக மனிஷ் சிசோடியா, ஆசிம் அகமது கான், சந்திப் குமார், சத்யேந்தர் ஜெய்ன், கோபால் ராய், ஜிதேந்தர்சிங் தோமர் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
மந்திரிகளுக்கான துறை விவரங்கள் வருமாறு:-
மனிஷ் சிசோடியா - பொதுப்பணி, கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை
ஆஷிம் அகமது கான் - உணவு மற்றும் பொது வழங்கல் துறை
சந்தீப் குமார் - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு துறை
சத்யேந்திர ஜெயின் - சுகாதரத்துறை மற்றும் தொழில்துறை
கோபால் ராய் - போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை
ஜிதேந்திர சிங் தோமர் - சட்டத்துறை மந்திரி
வரலாற்றுச் சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவை காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருப்பதால் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக 12 எல்.சி.டி டிவிக்களும் மைதானத்தில் ஆங்கேங்கே வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை முதல் மந்திரியாக பதவியேற்ற போது டெல்லி மெட்ரோ ரயிலில் வந்தார். ஆனால் இம்முறை அதை தவிர்த்துவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் காரில் வந்தார்.
பதவியேற்பு உரை:
பதவியேற்ற பின் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரை வருமாறு:-
`அன்புள்ள நண்பர்களே...
இன்று நாங்கள் பதவியேற்கவில்லை. டெல்லிவாசிகளாகிய நீங்கள் பதவியேற்றிருக்கிறீர்கள்.
நீங்கள் அனைவரும் எங்கள் மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமான வகையில் செலுத்துவீர்கள் என்று தெரியாது. 70 இடங்களில் 67 இடங்களை எங்களுக்கு நீங்கள் அளித்து இருக்கிறீர்கள்.
அனைவரும் வாக்களித்துள்ளீர்கள்...
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று சீட்டுக்களின் மழை பொழிவது போல எனக்குத் தோன்றியது. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தனர். இந்துக்கள்-முஸ்லிம்கள்-கிறிஸ்துவர்கள்-ஜெயின்கள்- சீக்கியர்கள் என்று அனைத்து மதத்தினரும் எங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். அனைத்து ஜாதியினரும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். ஏழைகள் பெருவாரியாகத் திரண்டு வாக்களித்துள்ளனர். செல்வந்தர்களும் வாக்களித்து இருக்கிறார்கள்.
இறைவன் நிகழ்த்தியிருக்கும் அற்புதம்:
மொத்தம் 70 இடங்களில் 67 இடங்கள் – இது மனிதன் நிகழ்த்துகின்ற செயல் கிடையாது. இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதச் செயலாகும். இறைவன் ஏதோ அற்புதச் செயலை நிகழ்த்தியிருக்கிறான். இதன் மூலம் ஆண்டவன் எதையோ உணர்த்த விரும்புகிறான். ஆண்டவன் எதை நினைத்து இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறான் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இறைவன் எதைக் கூற விரும்புகிறான்? அவன் ஏதோ மிகப்பெரிய காரியத்தை சாதிக்க விரும்புகிறான். நாம் அவனுடைய இச்சையை நிறைவு செய்யும் கருவிகள் மட்டுமே.
சைத்தானுக்கு இடம் கொடுக்க வேண்டாம்!
நாம் மிகவும் அதிருஷ்டசாலிகள். இறைவன் தன்னுடைய திருவுளத்தை நிகழ்த்திக் காட்ட நம்மை தேர்ந்தெடுத்து இருக்கிறான். ஆனால் நண்பர்களே – இத்தனை மகத்தான வெற்றி கிடைக்கும்போது சைத்தான் விழிக்கிறது. மனதில் அகங்காரம் விழித்துக் கொள்கிறது. அப்படி அகங்காரம் விழித்துக் கொள்ளும் போது எல்லாம் முடிந்து எதுவும் மிஞ்சாது. எனவே எங்கள் மந்திரிகள் எம்எல்ஏக்கள் எங்கள் குடும்பங்கள் கட்சியின் நிர்வாகிகள் எப்போதும் அகங்காரம் தங்களை அண்டாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நம்மால் அடைய முடியாது.
சில நாட்களாக எங்கள் கட்சியில் ஒருசிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் வெற்றி பெற்றதும் நாங்கள் மேலும் ஐந்து மாநிலங்களில் போட்டியிடுவோம் என்கிறார்கள். நாங்கள் எங்கெங்கே தேர்தலில் போட்டியிடுவது? ஐந்து அல்லது பத்து மாநிலங்களில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறத்தொடங்குவதில் அகங்காரம் மெல்ல மெல்ல எட்டிப் பார்ப்பதை உணர முடிகிறது. இது நல்லதாக எனக்குத் தோன்றவில்லை.
மக்கள் காங்கிரஸ் கட்சியை ஏன் தோற்கடித்தார்கள்? காங்கிரஸ் கட்சியினரின் மனநிலையில் அகங்காரம் நுழைந்து கொண்டது.
அதே நிலைதான் பாரதிய ஜனதா கட்சிக்கும் நிகழ்ந்தது. கடந்த மே மாதம் அத்தனை பெரிய அளவில் ஆதரவைப் பெற்ற கட்சியை இப்போது மக்கள் ஏன் தோற்கடித்தார்கள்? ஏனென்றால் பாஜகவினர் மனங்களில் அகங்காரம் நுழைந்து விட்டது.
சென்ற ஆண்டு தேர்தலில் 28 இடங்கள் எங்களுக்குக் கிடைத்தன. எங்கள் கட்சியினருக்கும் ஏதோ ஒரு மூலையில் அகங்காரம் வந்து விட்டது. அந்த வெற்றியைப் பார்த்து இந்த நாடு முழுதும் நாம் போட்டியிடுவோம் என்று தீர்மானித்தோம். எங்கள் அகங்காரத்துக்கு இறைவன் தண்டனை அளித்தான். அதில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அகங்காரம் கொள்ளக் கூடாது.
5 ஆண்டுகளுக்கு டெல்லியில் மட்டுமே மக்கள் சேவை:
இறைவன் எனக்குக் கட்டளை இட்டிருக்கிறான். டெல்லியின் மக்கள் எனக்குக் கட்டளையிட்டு இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு அன்பையும் நம்பிக்கையையும் பரிசாக அளித்து இருக்கிறார்கள். நான் இந்த 5 ஆண்டுகளும் டெல்லியில் மட்டுமே தங்கி டெல்லி மக்களுக்கு மட்டுமே சேவை செய்ய உறுதி பூண்டு இருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை உடல் பொருள் ஆவி என அனைத்தையும் சமர்ப்பணம் செய்து உழைப்பேன்.
யாராக இருந்தாலும் நடவடிக்கை!
என்னை சந்திக்க சில மருத்துவர்கள் வந்தார்கள். எங்களிடம் உங்கள் கட்சியின் தொப்பியை அணிந்து கொண்டு சிலர் வருகிறார்கள். எங்கள் மருத்துவமனையில் உள்ளவர்களை மிரட்டுகிறார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் எப்போதும் இது போன்ற காரியங்களில் இறங்க மாட்டார்கள். எங்கள் தொண்டர்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து தங்கள் தொழில்களைத் துறந்து, பணிகளைத் தியாகம் செய்து மக்களுக்காக உழைக்கிறார்கள்.
சில எதிர்க்கட்சியினர் எங்கள் கட்சியின் தொப்பியை அணிந்து கொண்டு எங்களுக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது. யாராக இருந்தாலும் – அது எங்கள் கட்சிக்காரர்களாகவே இருந்தாலும் அல்லது வேறு கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் தொப்பியை அணிந்து கொண்டு தவறான காரியங்களில் ஈடுபட்டாலும் அவர்களை எக்காரணம் கொண்டும் தப்பவிடவேண்டாம். உடனடியாக அவர்களைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இன்று அரசாங்க அதிகாரிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கிறேன்.
அப்படி ஆம் ஆத்மி தொப்பியை அணிந்து கொண்டு தவறான காரியங்களில் ஈடுபடுகிறவர்கள் கண்டிப்பாக எங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி செய்பவர்களுக்கு சட்டத்தில் எத்தனை கடுமையான தண்டனைகள் உண்டோ அனைத்து தண்டனைகளையும் வழங்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்குள் டெல்லி முழு ஊழலற்ற நகராக மாறும்!
எனக்கு இன்றும் நினைவிருக்கிறது – அன்னா ஹசாரே நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டபோது நாங்கள் ஊழலற்ற இந்தியா வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோஷங்களை முழக்கினோம். ஆனால் உண்மையிலேயே இந்தியா ஊழலற்ற நாடாக மாறுமா? என்று உள்ளுக்குள் எங்களுக்கு ஒரு ஐயம் இருந்து கொண்டே இருந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சி டெல்லியில் நடைபெற்றது. இன்று எங்களுடைய கடுமையான விரோதிகளும் ஒப்புக் கொள்வார்கள். அந்த 49 நாட்களில் டெல்லியில் ஊழல் சிறிதளவு குறைந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு எங்கள் உள்ளங்களில் ஊழலை ஒழிப்பதை இனிய கனவாகக் கொண்டிருந்தோம். ஆனால 49 நாட்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்று நடத்திய பிறகு எங்களுக்குள் நம்பிக்கை பிறந்து விட்டது. கண்டிப்பாக 5 ஆண்டுகளுக்குள் டெல்லியில் ஊழலை முற்றாக ஒழித்துக் காட்டுவோம்.
இந்தியாவில் ஊழல் முற்றாக ஒழிந்த மாநிலமாக டெல்லியை உருவாக்க நாம் ஒன்றிணைந்து உழைப்போம்.
லஞ்சம் கேட்போரை விடாதீர்கள்!
கடந்த 22 டிசம்பர் அன்று இதே இடத்தில் நான் அறிவித்த சபதத்தை மீண்டும் இன்று இங்கே அறிவிக்கிறேன். இனி இந்தக் கணத்தில் இருந்து டெல்லியில் உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தர மறுக்காதீர்கள். அவர்களுடன் பேரம் பேசுங்கள். செட்டிங் செய்து கொள்ளுங்கள். உங்கள் பாக்கெட்டுக்குள் கையை விட்டு உங்கள் போனில் அந்த உரையாடலை பதிவுசெய்து கொள்ளுங்கள். லஞ்சம் கேட்பவரின் குரலை பதிவுசெய்து கொள்ளுங்கள். அதை என்னிடம் கொண்டு வாருங்கள். லஞ்சம் கேட்டவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.
லஞ்ச ஒழிப்பு தொலைபேசி எண்:
இதற்காக வெகுவிரைவில் ஏற்கனவே அமலில் இருந்த, எங்கள் 49 நாள் ஆட்சியில் லஞ்சப் பேர்வழிகள் நடுங்கிக் கொண்டிருந்த தொலைபேசி எண்களை மீண்டும் அமல்படுத்துகிறோம்.
அன்னா ஹசாரே தலைமையில் எதற்காக நாம் அனைவரும் இதே ராம்லீலா மைதானத்தில் எதற்காக பேரணியை நடத்தினோமோ – ஜன்லோக்பால் சட்டம் – அந்த சட்டத்தை வெகுவிரைவில் டெல்லியில் நிறைவேற்றிக் காட்டுவோம். ‘
ஊடகங்களுக்கு வேண்டுகோள்:
ஆனால் ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
காரில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே என்னிடம் மைக்கை நீட்டுவார்கள். நீங்கள் கூறுவதை எல்லாம் எத்தனை மணி நேரத்தில் நிறைவேற்றுவீர்கள்? 24 மணி நேரத்திலா? 52 மணி நேரத்திலா? என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். மற்ற கட்சிகள் எத்தனை நாட்களில் செய்ய முடியுமோ – (மற்ற கட்சிகள் எல்லாம் 65 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை) - அதை விட விரைவாக நாங்கள் செய்து முடிப்போம்.
ஆனால் நாங்கள் என்ன செய்தாலும் அதனை உறுதியாகச் செய்வோம். வலிமையாக செய்து காட்டுவோம்.
நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்கள் அமைச்சரவை 24 நேரமும் இடையறாது உழைப்போம். நான் – என்னுடைய அமைச்சர்கள் – என்னுடைய அதிகாரிகள் அனைவரும் 24 நேரமும் வேலை செய்வோம்.
நான் முதல்வராக பொறுப்பை ஏற்பதற்கு முன்பே - தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனே நாங்கள் எங்கள் பணியைத் துவங்கி விட்டோம். எனக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது. இன்றும் குரோசின் மாத்திரை எடுத்துக் கொண்டுதான் இங்கு வந்திருக்கிறேன். ஆனால் எங்கள் உடல், பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்து 24 மணி நேரமும் உழைப்பேன்.
ஆனால் செய்தியாளர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், 1 மணி நேரத்துக்கு மட்டும் எங்களை அரசாங்கம் நடத்தச் சொல்லாதீர்கள். டெல்லி மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகளை அனுமதித்து இருக்கிறார்கள்.
மத நல்லிணக்கம் வலிமையுடன் பேணப்படும்!
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனால் டெல்லியில் வசிப்பவர்கள் மிகவும் கோபமடைந்திருக்கிறார்கள். சில இடங்களில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிகள் நடைபெற்றன. ஒரு சர்ச் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. சில சர்ச்சுகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன.
டெல்லியில் வசிப்பவர்கள் அமைதியை விரும்புகிறவர்கள். கடந்த 35 ஆண்டுகளாக டெல்லியில் இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் பார்த்தது இல்லை. டெல்லிவாசிகள் இதனை எப்போதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். டெல்லியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், ஜெயின்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தீபாவளியும் கொண்டாடுகிறோம். ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சகோதர சகோதரிகளாக அனைத்து கொண்டாட்டங்களையும் ஒன்றாகக் கொண்டாடுகிறோம்.
பிரிவினை அரசியல் செய்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன் – உங்கள் பிரித்தாளும் அரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள். டெல்லிவாசிகள் இதனை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
டெல்லி போலீஸ் நேரடியாக டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வருவது இல்லை. ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. டெல்லி போலீசாருடன் இணைந்து டெல்லியை அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பான நகரமாக மாற்றுவோம். ஒவ்வொரு ஜாதியினரும் பாதுகாப்பாக உணரும் வகையில் இந்த நகரத்தை மாற்றுவோம்.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து தர பிரதமரிடம் வேண்டுகோள்!
நம்முடைய பிரதமரை சந்தித்தபோது – மத்திய அரசுடன் சீரான ஒத்துழைப்பை வேண்டுகிறோம். ஆதரவை வேண்டுகிறோம். மத்திய அரசின் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் நாங்கள் உடனிருப்போம். மத்திய அரசு டெல்லி மாநில அரசுடன் இணைந்து டெல்லியை மிகவும் அழகான, பாதுகாப்பான நகரமாக உருவாக்குவோம் என்று கூறினேன்.
கடந்த 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் டெல்லிக்கு பூரண மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்து வந்தது. மக்களவை தேர்தலுக்கு முன்பும் பாஜக டெல்லி மக்களுக்கு டெல்லியை முழு அளவிலான மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியளித்தது.
நான் பிரதமரிடம் இதைத்தான் கூறினேன். இதை விட அற்புதமான சந்தர்ப்பத்தை ஆண்டவன் எப்போதும் அளிக்க மாட்டான் – டெல்லி அரசாங்கத்தில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது. அதே போல மத்திய அரசிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெருவாரியான பலம் இருக்கிறது. இப்போது நீங்களும் நாங்களும் இணைந்து டெல்லிக்கு பூரண அந்தஸ்தை பெறுவதற்கு முயற்சி செய்வோம் என்று பிரதமரிடம் கூறினேன். பிரதமரும் இது குறித்து நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அவரிடம் நான் இதையும் கூறினேன். பிரதமர் என்ற வகையில் அவருக்கு மிகவும் அதிகமான கடினமான பணிகள் உள்ளன. இந்த தேசம் முழுவதையும் குறித்து அவர் யோசிக்க வேண்டும். அயல்நாடுகளுக்கும் செல்ல வேண்டும். டெல்லியில் சில சம்பவங்கள் நடைபெறும்போது, குற்றங்கள் அதிகரிக்கும்போது டெல்லிக்காக தன்னுடைய நேரத்தை செலவிடுவதற்கு பிரதமரிடம் அதிகமான நேரம் இருக்காது. எனவே டெல்லியை நிர்வாகம் செய்யும் பொறுப்பை டெல்லிவாசிகளிடம் விட்டுவிடுங்கள் என்றும் நீங்கள் இந்த நாடு முழுவதையும் நிர்வாகம் செய்யுங்கள் என்றும் அவரிடம் கூறினேன்.
வாக்களிக்காதவர்களுக்கும் உரிமையுள்ள அரசாங்கம்:
ஆம் ஆத்மியின் அரசாங்கம் அனைவருக்குமான அரசாங்கமாகும். எங்களுக்கு நீங்கள் வாக்கு அளித்திருந்தாலும் அளிக்காவிட்டாலும் நான் உங்கள் அனைவருக்குமான முதல் மந்திரியாக இருப்பேன்.
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறாத அந்த மூன்று தொகுதிகளின் எம்எல்ஏக்களையும் எங்கள் எம்எல்ஏக்கள் என்றுதான் கருதுகிறேன்.
சில கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு எந்தப் பகுதியில் யார் யாருக்கு வாக்களித்து உள்ளார்கள் என்று கணக்கெடுப்பார்கள். அப்படி நாங்கள் செய்ய மாட்டோம். டெல்லியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் எங்கள் வாக்குச்சாவடிகளே. நாம் அனைவரும் இணைந்து டெல்லியை மாற்ற வேண்டும்.
வணிகர்களுக்கு வேண்டுகோள்!
வியாபாரிகளுக்கும் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.
டெல்லியின் வியாபாரிகள் இந்தத் தேர்தலில் எங்களுக்கு மிகுந்த ஆதரவு அளித்தார்கள். அவர்களுக்குத் தெரியும். அரசாங்கத்தை நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே உங்கள் ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு தேவைப்படுகிறது.
உங்களிடம் இருந்து இனி யாரும் லஞ்சம் கேட்க மாட்டார்கள். நீங்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி உங்கள் வியாபாரத்தை தொடருங்கள். உங்கள் வியாபாரம் நன்கு பெருகவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் அனைவரும் தன்னிச்சையாக வரிகளை முழுதாக அரசாங்கத்துக்கு செலுத்துங்கள்.
மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட திருட்டுப் போகாது!
நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதுவரை நீங்கள் அளித்து வந்த வரிப்பணத்தில் ஒரு பகுதி சிலரால் திருடப்பட்டு வந்தது. இனி உங்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசா கூட திருட்டுப்போகாது. நீங்கள் அளிக்கும் வரிப்பணத்தை உங்கள் குழந்தைகளின் கல்விக்கும், பொதுமக்களுக்கான மருத்துவனைகளுக்கும், சாலை வசதிகளுக்கும், உங்கள் மார்க்கெட் பகுதிக்கும், பார்க்கிங் வசதிக்கும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் விநியோகத்தை சீராக்கவும் பயன்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறேன். எனவே மனம் திறந்து வரி செலுத்துங்கள்.
நல்லெண்ணம் கொண்டோர் ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்யலாம்...
அந்த 49 நாட்களில் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். அரசாங்கத்தில் பணத்துக்குக் குறைவே கிடையாது. நிறைய பணம் இருக்கிறது. ஆனால் நேர்மையான மனப்பாங்குக்கு குறைவு உள்ளது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதே பணத்தை வைத்து பல நல்ல காரியங்களை செய்ய முடியும்.
நல்ல மக்கள்!
எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைத்ததும் பல இடங்களில் இருந்து எனக்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது. சிலர் கூறினார்கள் – முப்பது கல்லூரிகள் கட்டப்படும் என்று அறிவித்தீர்கள். அவற்றில் 3 கல்லூரிகளை கட்டுவதற்கு நான் பணம் தருகிறேன் என்றார்கள். சிலர் கூறினார்கள் – ஐயா- இன்னின்ன இடங்களில் பள்ளிக் கூடங்களைக் கட்டுங்கள். நான் நிலத்தை இலவசமாக அளிக்கிறேன் என்றார்கள். சிலர், அரசாங்கத்துக்காக 1000 சிசிடிவி கேமராக்களை நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்றார்கள்.
இந்த நாட்டின் மக்கள் மிகவும் நல்லவர்கள். மக்களை அக்கறையுடன் அணுகுங்கள். இந்த நாட்டை முன்னேற்றுவதற்கான செயல்களில் அவர்கள் பெரும் முனைப்பைக் காட்டுவார்கள்.
விஐபீ கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி!
நாங்கள் டெல்லியில் மற்றும் ஒரு புதிய விஷயத்தைத் துவங்க யோசித்து இருக்கிறோம். உடனடியாக விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தெருவில் யாராவது மந்திரிகள் போகும்போது அந்த சாலையில் ஒரு மணிநேரத்துக்கு போக்குவரத்தை நிறுத்தி வைப்பது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா? தன்னுடைய காரில் சிகப்பு விளக்கை பொருத்திக் கொண்டு எந்த மந்திரியாவது சைரனை அலறவிட்டுச் சென்றதால் உங்களுக்கு நன்றாக இருக்கிறதா? ஐரோப்பாவில் வளர்ந்த நாடுகளில் பிரதம மந்திரிகள் கூட பேருந்துக்காக வரிசையில் காத்து நிற்கின்றனர். அதுபோன்ற ஒரு கலாச்சாரத்தை நம்மால் இங்கு ஏன் கொண்டு வரமுடியாது?
நேரம் எடுக்கும். இதனை எங்கள் 49 நாள் ஆட்சியில் துவங்கினோம். டெல்லி அரசாங்கத்தின் எந்த வாகனத்தின் மீதும் சிவப்பு விளக்கு எரியாது என்று உத்தரவிட்டோம்.
ஊடகங்கள் கேலி செய்யாதீர்!
மீடியா நண்பர்களை இரு கரம் கூப்பி வேண்டுகிறேன். நான் கூறுவதை நீங்கள் கேலி செய்ய வேண்டாம்,.
நாங்கள் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த மாட்டோம் என்று கூறினோம். உடனே மீடியா ஆட்கள் அரசாங்க கார்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூச்சலிட ஆரம்பித்தார்கள். நாங்கள் காரை பயன்படுத்தாமல் வேறு எதனைப் பயன்படுத்த முடியும்?
இன்னும் 3 நாட்களில் இந்த மீடியா கெஜ்ரிவால் பெரிய பங்களாவில் குடியேறிவிட்டார் என்று அலற ஆரம்பித்து விடும்.
ஒருவன் எந்தப் பதவிக்கும் வரட்டும். ஆனால் அவன் தன் தகுதியை மறக்கக் கூடாது என்று ஒரு மகாபுருஷர் என்னிடம் கூறினார். எனக்கு என்னுடைய தகுதி குறித்து தெரியும். நான் மிகவும் சாமானியன். நான் இப்போது வசிக்கும் வீடடில் நான்கைந்து அறைகள் உள்ளன. நான் எங்கு குடியேறினாலும் நான்கைந்து அறைகளுக்கு மேல் உள்ள வீட்டில் குடியேறி எனக்கு என்ன ஆகப்போகிறது?
ஆனால் நான் குடியேறப்போகும் வீட்டில் அறைகள் தவிர அலுவலகத்துக்கும் அவசியம் இருக்கிறது இல்லையா? அலுவலகம் இல்லாமல் ஒரு முதல் மந்திரி எப்படி இயங்க முடியும்? நீங்கள் அனைவரும் என்னை தினமும் சந்திக்க வரும்போது 400 அல்லது 500 பேர் உட்கார இடம் தேவைப்படும். நாற்காலிகளும் தேவைப்படும். இவை இல்லாமல் நான் எப்படி பணியாற்ற முடியும்?
என்னுடைய தேவைகளுக்கு ஏற்ற அளவுள்ள வீட்டில்தான் நான் குடியேறுவேன். மீடியா நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்.
காங்கிரஸ், பாஜகவின் ஒத்துழைப்பும் தேவை:
நான் கிரண் பேடி மீது பெருத்த மதிப்பு வைத்து இருக்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அவர் என்னுடைய மூத்த சகோதரி போன்றவர். மூத்த அதிகாரியான அவருடைய அனுபவம் மற்றும் ஆலோசனைகள் எங்கள் அரசாங்கத்துக்குத் தேவை.
அதே போல காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் அரசாங்கத்துக்காக பல நல்ல கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்த அனுபவம் நிறைந்தவர். அவருடைய ஆலோசனையும் எங்களுக்கு வேண்டும்.
காங்கிரஸ், பாஜக மற்றும் அனைத்துக் கட்சிகளில் உள்ள நல்லவர்களுடன் சேர்ந்து டெல்லியை சிறந்த நகரமாக மாற்றுவோம்.
இன்று டெல்லியின் முதல்வராக நான் பதவியேற்கவில்லை. நீங்கள் அனைவரும் பதவியேற்று இருக்கிறீர்கள். நான் டெல்லியின் முதல்வர் அல்ல. இந்த டெல்லியின் ஒவ்வொரு குடிமகனும் டெல்லியின் முதல்வர். இன்றில் இருந்து நீங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள்.
இதுநாள் வரை இருந்த லஞ்சத்துக்கு இன்றில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கப்படும். 100 சதவிகிதம் முற்றாக ஒழியும் என்று நான் கூறவில்லை. சிறிது சிறிதாக லஞ்சம் ஒழியும். 5 ஆண்டுகளுக்குள் டெல்லியை ஊழலற்ற நகரமாக மாற்றுவோம்.
பிரார்த்திக்கிறேன்...
நான் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். கடவுளே – எங்களுக்கு நல்ல புத்தியை கொடு. எங்கள் மனங்களில் பேராசை குடிகொள்ளக் கூடாது. எங்கள் மனங்களில் வன்முறை எண்ணங்கள் நுழையக் கூடாது. சரியான முடிவுகளை எடுக்கும் மனத்திண்மையை எங்களுக்கு அருளுவாயாக. இந்த நாட்டுக்காக நாங்கள் எப்படி எங்கள் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் தியாகம் செய்து முன்வந்திருக்கிறோமோ இந்த மனநிலையை நாங்கள் என்றும் தொடரும் மன வலிமையை எங்களுக்கு அளிப்பாயாக.
கட்சியின் நிர்வாகிகள் தங்கமானவர்கள். வைர மனம் கொண்டவர்கள். அவர்களின் தியாகங்கள் சில நேரங்களில் எனக்கு கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது. என்னைப் போன்றவர்களுக்கு பதவியும் கௌரவமும் கிடைத்துள்ளது. அவர்களுக்குக் கிடைத்தது என்ன? தங்கள் குடும்பத்தையும் வேலைகளையும் விட்டு கட்சிப்பணிக்காக அவர்கள் உழைத்துள்ளனர். தங்கள் வியாபாரங்களை விட்டு வந்துள்ளனர். முகமறியாத அந்த நண்பர்கள் எங்கள் வெற்றிக்காக கடுமையான உழைப்பை அளித்திருக்கின்றனர். அவர்கள் கெஜ்ரிவாலுக்காக உழைக்கவில்லை, கட்சிக்காக உழைக்கவில்லை. அவர்கள் சுந்தரமான டெல்லி மற்றும் இந்தியாவுக்காக உழைத்திருக்கிறார்கள்.
உலகக் கோப்பை க்ரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வாழ்த்து!
நம்முடைய கிரிக்கெட் வீரர்கள் இந்த முறை கண்டிப்பாக உலகக் கோப்பையை வென்று நமக்குப் பெருமை தேடித்தருவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைப் பாடல்:
இறுதியாக நான் ஒரு பிரார்த்தனைப் பாடலைப் பாட விரும்புகிறேன். என்னுடன் நீங்கள் அனைவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்று சில அரசியல்வாதிகள் மதரீதியான ஜாதிரீதியான அரசியலை நடத்த விரும்புகிறார்கள். நாங்கள் அன்பு மற்றும் அகிம்சை ரீதியான அரசியலை முன்வைக்க விரும்புகிறோம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் பாடல் இது.
மனிதனுக்கு மற்றொரு மனிதன்
மீதான சகோதரத்துவ உணர்வு வேண்டும்
இதுவே என்றும் எங்கள்
நற்செய்தியாக திகழவேண்டும்.
ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்
இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி:
தினத்தந்தி இணையதளம் |