பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
பாகம் 2 காண இங்கு அழுத்தவும்
-----------------------------------
மார்ச் 29, 1989 அன்று - DCW நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள பாரதிய ஸ்டேட் வங்கியின் கருவூலம் கிளையில், அரசு குத்தகைக்கு
வழங்கியிருந்த 793.39 ஏக்கர் நிலத்திற்கான விலை என்று - 3,91,233.91 ரூபாயினை கட்டியது.
29.3.1989இல் அரசு கருவூலத்தில் DCW நிறுவனம் - தன்னிச்சையாக கட்டிய தொகைக்கான ரசீது
நிலத்தினை விற்கவும் அரசு சம்மதிக்கவில்லை; அதற்கான தொகையையும் அரசு செலுத்த கூறவில்லை. இவ்வாறு இருக்கையில், DCW நிறுவனத்தின்
தன்னிச்சையான இந்த செயல், பிரச்சனையில் மற்றொரு பரிமாணத்தை அறிமுகம் செய்தது.
நிலத்திற்கான விலையை செலுத்திய அதே நாளில், 7 ஆண்டுகளாக (1982 - 89) நிலுவையில் இருந்த குத்தகை வாடகை 1,64,318.21
ரூபாயையும், 8 ஆண்டுகளாக (1981 - 89) நிலுவையில் இருந்த LOCAL CESS வகை 84,506.56 ரூபாயையும், 8 ஆண்டுகளாக (1981 - 89) நிலுவையில் இருந்த LOCAL CESS SURCHARGE வகை 4,69,480.56 ரூபாயையும், 1982 முதல் 1989 வரையிலான குத்தகை வாடகை பாக்கி மீதான வட்டி தொகை 78,872.71 ரூபாயையும் சேர்த்து - 7,97,178.04 ரூபாயை DCW நிறுவனம் செலுத்தியது.
இந்த தொகைகளை செலுத்திய பிறகு, DCW நிறுவனம் - தமிழக அரசின் வருவாய் துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், இதற்கு முன்னர் - 1963
முதல் 1982 வரையிலான காலகட்டத்திற்கு, குத்தகை வாடகை தொகையான 4,46,006.57 ரூபாயையும், LOCAL CESS, LOCAL CESS SURCHARGE
வகைக்கு செலுத்த வேண்டிய 4,17,400.79 ரூபாயையும் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் - DCW நிறுவனம் சார்பில், இந்த நிலங்களுக்கு இனி நிறுவனமே உரிமையாளர் என்பதால், இனி குத்தகை வாடகை உட்பட எந்த வரியும்
அரசுக்கு கட்ட அவசியமில்லை என்றும் - அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. நிலங்களின் உரிமையை நிறுவனத்திற்கு மாற்றி உத்தரவு
பிறப்பிக்கும்படியும் - DCW நிறுவனம் அரசினை கோரியது.
DCW நிறுவனத்தின் தன்னிச்சையான இந்த செயலை அரசு ஏற்கவில்லை.
9.7.1992 தேதிய கடிதம் மூலம் 1969 முதல் 1989 வரையிலான LOCAL CESS, LOCAL CESS SURCHARGE, வட்டி பாக்கி தொகைகளையும், 1989
முதல் 1992 வரையிலான புதிய பாக்கி தொகைகளையும் (15,62,098.15 ரூபாய்) கோரி - திருச்செந்தூர் வட்டாச்சியர் - DCW நிறுவனத்திற்கு நோட்டீஸ்
அனுப்பினார்.
இதனை தொடர்ந்து, 23.7.1992 தேதிய கடிதம் மூலம் - DCW நிறுவனம், தமிழக அரசின் வருவாய் துறை அமைச்சரை அணுகி, வட்டாச்சியர் நோடீசுக்கு தடை விதிக்க கோரியது.
இந்த சூழலில், வருவாய் துறை செயலாளர் - தனது 7.8.92 கடிதம் மூலம், குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்களை தனது உரிமைக்கு கோரி
DCW நிறுவனம் சமர்ப்பித்துள்ள மனு மீது அரசு தரப்பில் முடிவெடுக்கப்படும் வரை, வட்டாச்சியரின் நோடீசுக்கு தடை விதித்தார். இந்த நோடீசுக்கு ஒரு
நாள் முன்னர் (6.8.1992), 10,20,892 ரூபாயினை DCW நிறுவனம் - பாக்கி தொகையாக செலுத்தியதாக தெரிகிறது.
வட்டாச்சியரின் நோடீசுக்கு அரசு தடை விதித்தாலும், நிலங்களை DCW நிறுவனத்திற்கு வழங்க அரசு முடிவெடுக்காததால், அந்நிறுவனம் - சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது [Writ Petition No.8369/1993]. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவச்சலம், DCW நிறுவனத்தின்
மனுவின் மீது - தகுதி அடிப்படையில் - அரசு முடிவெடுக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பினை தொடர்ந்து - DCW நிறுவனம் பல முறை அரசினை அணுகினாலும், இது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசின்
தயக்கத்திற்கு காரணம் என்னவென்று தெளிவாக ஆவணங்களில் இல்லாவிட்டாலும், குத்தகைக்கு வழங்கப்பட்ட அரசு நிலங்களை விற்க தடை விதித்த
1988ம் ஆண்டின் அரசாணை ஒரு முக்கிய காரணம் என்று தெரிகிறது.
1989ம் ஆண்டு முதல் குத்தகை வாடகை பாக்கியுள்ள நிலையிலும், DCW நிறுவனத்திற்கு - 793.39 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்கிய காலம்
1993ம் ஆண்டே நிறைவுற்று குத்தகை புதுப்பிக்கப்படாத நிலையிலும் - அந்நிறுவனம் - அந்நிலங்களை தொடர்ந்து அனுபவித்து வந்தது.
1989ம் ஆண்டு தன்னிச்சையாக நிலத்தின் விலை என அந்நிறுவனம் செலுத்திய தொகையின் அடிப்படையில் நிலங்களை தனது முழு உரிமைக்கு
கோரிய அந்நிறுவனத்தின் மனு நிலுவையில் இருந்துக்கொண்டிருந்த நிலையில், தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர், ஏப்ரல் 19, 2002 தேதிய
கடிதம் ஒன்றினை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார்.
[தொடரும்]
|