பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
பாகம் 2 காண இங்கு அழுத்தவும்
பாகம் 3 காண இங்கு அழுத்தவும்
-----------------------------------
முந்தைய பாகத்தில் - 9.7.1992 தேதிய கடிதம் மூலம் 1969 முதல் 1989 வரையிலான LOCAL CESS,
LOCAL CESS SURCHARGE, வட்டி பாக்கி தொகைகளையும், 1989 முதல் 1992 வரையிலான புதிய பாக்கி தொகைகளையும் (15,62,098.15 ரூபாய்)
கோரி - திருச்செந்தூர் வட்டாச்சியர் - DCW நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார் என்ற தகவலை கண்டோம். மேலும் - அந்த நோடீசுக்கு தடை
விதித்து, வருவாய்த் துறை அரசு செயலாளர் உத்தரவிட்டார் என்ற செய்தியையும் முந்தைய பாகத்தில் கண்டோம்.
ஏப்ரல் 19, 2002 அன்று தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதம் மூலம் - வட்டாச்சியரின்
நோடீஸ் மீதான தடையினை நீக்கினார். மேலும் - நிலுவையில் உள்ள பாக்கி தொகையை DCW நிறுவனத்திடம் இருந்து வசூல் செய்து, அரசுக்கு
தகவல் தரும்படியும் தெரிவித்தார்.
அரசு செயலாளரின் இந்த உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து - DCW நிறுவனம், 21.05.2002 தேதியிட்ட கடிதத்தினை அனுப்பியது. அதற்கு எந்த
பலனும் இல்லை.
திருச்செந்தூர் வட்டாச்சியர், ஜூலை 27, 2002 தேதிய கடிதம் மூலம் - DCW நிறுவனத்தின், 1989 முதல் 1993 வரையிலான பாக்கி தொகை
விபரங்களை அனுப்பி - 15 தினங்களுக்குள் அத்தொகையை கட்டவேண்டும் என்றும், அல்லது REVENUE RECOVERY ACT மூலம், அந்த தொகையினை
வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அந்த நோடீசில் உள்ள விபரப்படி, DCW நிறுவனம் - 1989 - 1993 காலகட்டத்திற்கு, குத்தகை வாடகையாக 1,17,370 ரூபாயும், LOCAL CESS வகைக்கு 62,498
ரூபாயும், LOCAL CESS SURCHARGE வகைக்கு 1,79,868 ரூபாயும், காலதாமதத்திற்கான வட்டியாக 7,76,475 ரூபாயும் என ஆக மொத்தம் 12,49,768 ரூபாய் செலுத்த
வேண்டும் (27.7.2002 நிலவரப்படி).
இந்த சூழலில் DCW நிறுவனம் - நீதிமன்றத்தின் உதவியை நாடியது. இது குறித்து DCW நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை [Writ Petition
No.33008/2002] விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம், மார்ச் 13, 2003 தேதிய தீர்ப்பின் மூலம், வட்டாச்சியரின் நோடீசுக்கு தடை
விதித்தார். மேலும் - குத்தகை நிலங்களை தனக்கு வழங்கக்கோரும் DCW நிறுவனத்தின் மனு குறித்து முடிவெடுக்கும்படியும் அரசுக்கு
தெரிவித்தார்.
இந்த தீர்ப்புக்கு பிறகும் - தமிழக அரசு, இது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.
DCW நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டறிக்கை (2013-14) - குத்தகை நிலத்தை அரசு இதுவரை தனக்கு வழங்கவில்லை என்று
தெரிவிக்கிறது
DCW நிறுவனம் - தனது தரப்பு வாதமாக, நீதிமன்றத்திலும், மனுக்களிலும் - குத்தகைக்கு நிலம் தந்து வெளியான அரசாணைப்படி, அந்த நிலங்களை
- அரசு தனக்கு விற்க வேண்டும் என்பது கட்டாயம் எனக்கூறுகிறது. இந்த அரசாணையையும், குத்தகை ஒப்பந்தத்தையும் பார்வையிட்ட சட்ட
வல்லுனர்கள், குத்தகை காலம் முடிந்தப்பின் அந்த நிலங்களை வாங்க எவ்வாறு DCW நிறுவனத்தை அரசினால் வலியுறுத்த முடியாதோ, அது போல
- குத்தகை காலத்திற்குள், அந்த நிலங்களை விற்க - DCW நிறுவனம், அரசினை நிர்பந்திக்க முடியாது என காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவிக்கிறார்கள்.
மேலும் - குத்தகையில் வழங்கப்பட்ட 793 ஏக்கர் நிலத்தையும், 1959ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட சந்தை விலைக்கே, அரசு வழங்க
வேண்டும் என, அரசாணையை மேற்கோள் காட்டி, DCW நிறுவனம் கூறிவருகிறது. இதுவும் தவறான வாதம் என சட்ட வல்லுனர்கள்
தெரிவிக்கிறார்கள்.
அரசாணையில் - நிலங்களின் அப்போதைய சந்தை விலை கணக்கிடப்பட தெரிவிக்கப்பட்டதற்கான காரணம், (சந்தை மதிப்பில் 6
சதவீதம் என) குத்தகை வாடகை நிர்ணயம் செய்யப்படவே; மேலும், குத்தகை முடியும் 1993ம் ஆண்டு - DCW நிறுவனம் அந்த நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்தால்,
அவ்வேளையில் 1959 ம் ஆண்டு சந்தை விலைக்கே அந்த நிலங்களை, அரசு தர வேண்டும் என அரசாணையை புரிந்துக் கொள்வது, நகைப்புக்குரியது
என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
1963ம் ஆண்டு குத்தகை நிலங்களை அனுபவிக்க துவங்கிய DCW நிறுவனம், 26 ஆண்டுகளுக்கே (1989), குத்தகை வாடகையை செலுத்தியுள்ளது.
அதன் பிறகு - 26 ஆண்டுகளாக, குத்தகை வாடகை எதுவும் செலுத்தாமல், அந்த நிலங்களை அனுபவித்து வருகிறது.
மேலும் - 1993ம் ஆண்டே, குத்தகை காலம் நிறைவுற்றுவிட்டது. அதன் பிறகு, குத்தகை புதுப்பிக்கப்படவும் இல்லை. 22 ஆண்டுகளாக, குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையிலேயே, தற்போது வரை, DCW நிறுவனம் - 793 ஏக்கர் நிலங்களை அனுபவித்து வருகிறது.
இதனால் - அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் - ஒவ்வொரு ஆண்டும் - ஏற்பட்டு வருகிறது.
DCW நிறுவனம், 1989ம் ஆண்டு நிலத்திற்கான தொகை என்று வங்கியில் தன்னிச்சையாக செலுத்திய பிறகும், தொடர்ந்து - குத்தகை வாடகை தொகையை செலுத்த கூறி, அனுப்பிய நோடீஸ்கள் மூலம், DCW நிறுவனத்தின் கோரிக்கையை அரசு - மறைமுகமாக - நிராகரித்து விட்டது என்று அறிய முடிகிறது.
இதனை - தெளிவாக அந்நிறுவனத்திற்கு தெரிவிக்க, வருவாய் துறை ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது, 26 ஆண்டுகளாக, புரியாத புதிராக இருந்து வருகிறது.
[முற்றும்]
|