சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட காரியங்களில் ஒன்றாகும். இதற்காக பிரத்தியேக சட்டம் - THE PUBLIC GAMBLING ACT, 1867 - நாட்டில் நடைமுறையில் உள்ளது. சட்டம் இதற்குத் தடையாக இருந்தாலும், சூதாட்டம் நாட்டில் பரவலாக நடைபெற்றே வருகிறது என்பதற்கு அண்மைச் செய்திகள் பல உள்ளன.
தமிழக அரசின் ஓர் அறிக்கை, 2011ஆம் ஆண்டில், மாநிலத்தில் பதிவான Special and Local Laws (SLL) என்ற தலைப்பிலான குற்றங்களில் - சூதாட்டம் குற்றம் - 1.64 சதவீதம் இருந்ததாக தெரிவிக்கிறது. அவ்வாண்டு மாநிலத்தில் - 8,618 சூதாட்ட வழக்குகள் பதிவாயின.
காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளாக - அங்கொன்றும், இங்கொன்றுமாக சூதாட்டம் நடந்துள்ளது என்று பலரும் கூறுவது உண்டு. தற்போது இந்நிலை மாறி, விவகாரம் தீவிரமடைந்துள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.
நகரில் குறைந்தது மூன்று இடங்களில் தொடர்ச்சியாக சூதாட்டம் நடத்தப்படுவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓடைக்கரைக்கு அருகில் உள்ள கடற்கரையோரத்தில், சூதாட்டத்திற்கென்றே குடிசை ஒன்று அமைக்கப்பட்டு, ஜாதி - மத வேறுபாடின்றி பலரும் பங்கேற்கும் விதமாக பல மாதங்களாக நடைபெற்று வருவதாகவும், பலத்த பாதுகாப்புடன் நடக்கும் இந்த நிகழ்வுகளில் - பணம் தேவைப்படுவோருக்கு 1000 ரூபாய்க்கு, 500 ரூபாய் வட்டி அடிப்படையில் அந்த இடத்திலேயே ‘கடனுதவி’யும் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இவ்விடம் தவிர, நகரில் கீழ் நெய்னார் தெருவில் ஓர் இடத்திலும், அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் ஏற்பாட்டில் நகரின் மற்றோர் இடத்திலும் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|