சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம ஒன்றுகூடலை விமரிசையாக நடத்திடுவதற்காக, அதன் செயற்குழுவில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் குடும்ப சங்கம ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளும், அவற்றுக்கு முன்னோடியாக - பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டில் இந்நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்திடுவது குறித்து விவாதித்து, பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்காக, மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமை 19.45 மணி முதல் 21.30 மணி வரை, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
சிறப்பழைப்பாளர் உரை:
இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகப் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினார். அவரது உரைச் சுருக்கம்:-
இந்த அருமையான கூட்டத்தில் பங்கேற்று, நமதூர் மக்கள் யாவரையும் ஒரே இடத்தில் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நமது தாய்நாட்டைத் தாண்டி, நாம் வசிக்கும் நாட்டின் வரலாறு, மகத்துவம் உள்ளிட்டவற்றை நாம் தெளிவுற அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த சிங்கப்பூர் நாட்டின் வரலாற்றை இங்குள்ள காயலர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்நாட்டில் நடைபெறும் மக்கள் நல செயல்பாடுகளில் இங்குள்ள காயலர்களும் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்.
பெண்களுக்கு கல்வியறிவு மிக அவசியம். இம்மன்றத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது, மகளிருக்காக வினாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளதையறிந்து மகிழ்ச்சி. அத்தோடு, சமையல், தகவல் தொடர்பு மேலாண்மை தொடர்பான போட்டிகளையும் அவர்களுக்காக நடத்தலாம். கணவன்கள் தமது மனைவியரை இதுபோன்றவற்றுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்த்துப் பயனடையச் செய்யலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய காயலர் அறிமுகம்:
சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடி காயல்பட்டினத்திலிருந்து வருகை தந்துள்ள - மன்றத்தின் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய், அங்கத்தினரான முஹம்மத் உமர் ரப்பானீ, மஹ்மூத் மானாத்தம்பி ஆகியோரின் மச்சான் முஹம்மத் அனஸுத்தீன் இக்கூட்டத்தில் தன்னை அறிமுகப்படுத்திப் பேசியதோடு, தனது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு விரைவாக அமைந்திட அனைவரது ஒத்துழைப்புகளையும் வேண்டினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த மன்ற உறுப்பினர் ஷேக் ஷீத் சிற்றுரையாற்றினார். சிங்கையில் தனா் வேலைவாய்ப்பு பெற்ற அனுபவம், அதற்கு மன்ற உறுப்பினர்கள் அளித்த மனமார்ந்த ஒத்துழைப்புகள் குறித்து மகிழ்ந்து பேசிய அவர், மன்றத்தால் நடத்தப்படும் - ஏழைகளுக்கான உதவிகள் உள்ளிட்ட நகர்நலத் திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட - உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் யாவும் தன்னை பெரிதும் மகிழச் செய்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 01ஆம் நாளன்று நடைபெறவுள்ள தனது திருமண நிகழ்ச்சியில் அனைவரும் அவசியம் பங்கேற்குமாறு அவர் அழைப்பும் விடுத்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதலைப் பெற்றதோடு, 2014-2015 பருவத்திற்கான நிதிநிலை முன்னறிக்கை குறித்தும் தகுந்த ஆவணங்களுடன் விளக்கிப் பேசினார்.
செயலர் உரை:
மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
சிங்கப்பூரில் சிறப்புற செயல்பட்டு வரும் இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் (FIM) அண்மைக் கூட்டத்தில் பங்கேற்ற தனது அனுபவத்தையும், அவ்வமைப்பின் பொருளாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.
இதைக் கேள்வியுற்ற உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன், அவரது பணி சிறக்க வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
வருடாந்திர ஒன்றுகூடலுக்கான ஆயத்தப் பணிகள்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை வரும் மார்ச் மாதம் 28ஆம் நாளன்றும், குடும்ப சங்கம ஒன்றுகூடலை வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் நாளன்று நடத்திட உத்தேசமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், குழந்தைகள் - மகளிர் - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ள பல நிகழ்ச்சிகளை நடத்திடுவதற்காக இப்போதிலிருந்தே ஆயத்தமாக வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேட்பு மனுக்கள் வரவேற்பு:
வருடாந்திர பொதுக்குழுவில், மன்றத்திற்கான புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால், பொறுப்புகளை ஏற்று செயல்பட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் முன்வந்து, வேட்பு மனு தாக்கல் செய்யுமாறும், வேட்பு மனு படிவத்தை மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் அனுப்பி வைப்பார் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்புக் குழு:
வருடாந்திர பொதுக்குழு மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளை சிறப்புற செய்திடுவதற்காக, ஃபழ்ல் இஸ்மாஈல், ஜவஹர் இஸ்மாஈல், செய்யித் இஸ்மாஈல் ஆகியோரடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மன்ற அங்கத்தினருக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பொறுப்புகள் குறித்து இவர்கள் கண்காணித்து, அவற்றைத் துரிதப்படுத்தி செய்து முடிக்கும் பணியைச் செய்வதற்கு கூட்டத்தில் பொறுப்பளிக்கப்பட்டது.
முதியோர் இல்லம் செல்லல்:
மன்றம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சிறப்பு மலர் வெளியிடுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருடாந்திர பொதுக்குழு நிகழ்வுகளில் ஒன்றாக, சிங்கையிலுள்ள முதியோர் இல்லம் சென்று, உணவுப் பொருட்களை வழங்கி உபசரித்திட தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தின் ஒருநாள் ஊதிய நன்கொடைத் திட்டத்தின் கீழ், தாமாக முன்வரும் உறுப்பினர்களிடமிருந்து வரும் மார்ச் 06ஆம் நாளன்று நன்கொடை நிதி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு, நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகள் குறித்து உறுப்பினர் முஹம்மத் உமர் ரப்பானீ விளக்கிப் பேசினார். போட்டிகள் அனைத்தையும் சிறப்புற நடத்திடுவதற்கான அனைத்து ஏற்பாட்டுப் பணிகளையும் உறுப்பினர் எம்.எம்.அப்துல் காதிர் துணையுடன் தான் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மகளிருக்கு கூடுதல் போட்டிகள்:
மகளிருக்கு பவுலிங், பாட்மிண்டன் உள்ளிட்ட கூடுதல் போட்டிகளையும் நடத்தப்படும் எனவும், சிறப்பழைப்பாளர் எம்.எஸ்.ஷாஜஹான் அவர்கள் கூறிய ஆலோசனையின் படி சமையல் பயிற்சி வகுப்புகள், ஆங்கில பேச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றையும் மகளிருக்காக நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
உண்டியல் வினியோகம்:
உண்டியல் மூலம் நன்கொடை சேகரிக்கும் மன்றத் திட்டத்தின்படி, மன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அபுல்காஸிம், ஜெ.அபுல்காஸிம் ஆகியோர் அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டியல் வினியோகிப்பர் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பி.எஸ்.ஏ.ரஹ்மான் மறைவுக்கு இரங்கல்:
சிறந்த தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சேவை நிறுவனங்களின் நிறுவனருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் அவர்கள் அண்மையில் காலமானதற்கு, இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், அன்னாரின் பாவப் பிழை பொறுப்பிற்காகவும், மண்ணறை - மறுமை நற்பேறுகளுக்காகவும் துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி உபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |