பொதுமக்கள், வாக்காளர் பட்டியலிலுள்ள தமது பெயருடன் ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை ஆன்லைன் முறையிலும், பொதுச் சேவை மையங்கள் மூலமும் இணைத்துக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிபடுத்தும் திட்டம் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக செயல்படுத்தப்படவுள்ளது.
>>> வாக்காளர் பட்டியலில்; உள்ள வாக்காளர்களை ஆதார் எண் மூலம் உறுதிப்படுத்துதல்
>>> வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை நீக்குதல்.
>>> வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்தல்
>>> வாக்காளர்களின் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பெற்று வாக்காளர் பட்டியல் அடிப்படை புள்ளி விவரங்களுடன் இணைத்தல். அதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் தொடர்பான செய்திகளை வாக்காளர்களுக்கு அனுப்புதல்
வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளர் குறித்த விபரங்களை அதற்கான படிவங்களில் வாக்காளர்களிடம் பெறுவார்கள். ஆதார் எண் இல்லாதவர்களிடம் வாக்காளர் குறித்த ஏனைய விபரங்கள் பெறப்படும்.
மேலும் வாக்காளர் குறித்த விபரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின், அதனை சரி செய்திட படிவம்-8ஐப் பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெற்றிருப்பின் அதனை நீக்கம் செய்திட படிவம் – 7ஐப் பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் மின் ஆளுமைத் திட்ட பொதுச் சேவை மையங்களில் கட்டணமின்றி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அனைவரும் இதைப் பயன்படுத்தி, தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் விளக்கமளித்தார்.
ஏற்கனவே பதிவில் உள்ள கணக்கெடுப்பின் படியே ஆதார் பதிவுகள் செய்யப்படுவதாகவும், அக்கணக்கெடுப்பில் பெயர் விடுபட்டுப் போனவர்களுக்கு ஆதார் அட்டை பெற என்ன வாய்ப்பு உள்ளது என்றும் செய்தியாளர்கள் கேட்டதற்கு,
ஏற்கனவே பதிவில் பெயர் இருந்து இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள், முறைப்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்; பெயர் விடுபட்ட வாக்காளர்களுக்காக வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய படிவம் வெளியிடப்படும்; அப்படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்து, ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |