பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட 8 மார்க்க அறிஞர்களும், வாகன ஓட்டுநர் ஒருவரும் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டனர். ஒரு மார்க்க அறிஞர் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்தில் இறந்தோர் மற்றும் காயமுற்றுள்ள ஒருவர் ஆகியோரின் குடும்ப நலனுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அளிக்கப்படவுள்ள மொத்தத் தொகையில் 32 ஆயிரம் ரூபாய் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வழங்கப்படும் என - அண்மையில் நடைபெற்ற காயல்பட்டினம் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரிடம் தொகையும் வழங்கப்பட்டது. இத்தொகையையும் உள்ளடக்கி மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகம் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநில தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரூ. 2 லட்சத்து 82 ஆயிரம் நிதி உதவி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வழங்கினர்.
பள்ளப்பட்டி, ஏப். 16- திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 03-ந்தேதி அதிகாலை நடைபெற்ற விபத்தில் பள்ளப்பட்டியை சேர்ந்த 8 ஆலிம்கள் உட்பட 9 பேர் உயிர் இழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ரூ. 2 லட்சத்து 82 ஆயிரம் நிதி இன்று வழங்கப்பட்டது. பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இந்நிதியை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடை பெற்ற புதிய கட்டட திறப்பு விழா துஆ மஜ்லிஸில் பங்கேற்று விட்டு (ஏப்ரல் 3-ந்தேதி நள்ளிரவு) குவாலிஸ் காரில் பள்ளப்பட்டி திரும்பிக்கொண்டிருந்த சங்கைக்குரிய உலமாபெரு மக்கள் 8 பேர் உள்ளிட்ட 9 பேர் செம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சித்தையன் கோட்டை பிரிவு வீர சிக்கன்பட்டி வளைவில் பால் டேன்கர் லாரியுடன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் மரணமடைந்த உலமா பெருமக்கள் அனைவரும் முப்பது வயதுக்குப்பட்ட இளம் மௌலவிகள் என்பது சமுதாயத்தை மிகப்பெரிய அதிர்ச்சி அடைய செய்தது. மரணமடைந்த அனைவருமே ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பது உலமாக்கள் உலகையே கலக்கியது.
இந்த குடும்பங்களுக்கு தாராளமாக நிதி வழங்குமாறு தமிழக முஸ்லிம் சமுதாயத்தை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டது. இதற்கு மதிப்பளித்து ஜும்மா தொழுகையின் போது தமிழகம் முழுவதும் முஸ்லிம் சமுதாயம் ஆதரவு அளித்து நிதி வழங்கியது. சங்கைக்குரிய உலமாக்களை மதித்து நடக்கும் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கியது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை திரட்டிய நிதி இன்று இரவு வழங்கப்படுகிறது. அதன் தலைவர் ஷெய்ஹுல் ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளப்பட்டி வருகை தருகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதவி இதனிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிலர் முன்வந்து தலைமையிடம் வழங்கிய நிதியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று காலை பள்ளப்பட்டி சென்றார். அவருடன் மாநில பொதுசெயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர்கள் தென்காசி வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், திண்டுக்கல் சபீர் அஹமது, மின்னனு ஊடக ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், முஸ்லிம் யூத் லீக் மாநில இணைச்செயலாளர் தென்காசி முஹம்மது அலி, முதலியார்பட்டி அப்துல் காதர், பேராசிரியர் கே.டி. கிஸர் முஹம்மது, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் மௌலவி கே.கே.ஒ சுலைமான், நகர தலைவர் இப்ராஹிம் ஷா, செயலாளர் தௌபிக் ஹுஸைன், அல்தாப் ஹுஸைன், எஸ்.டி.யூ மாநில பொருளாளர் ஜெய்லானி, பாப்ஜான், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் நூர்முஹம்மது சேட், துணைஅமைப்பாளர் முஹம்மது ஆரிப், இராமநாதபுரம் யாகூப், ஆடுதுறை ஒ. முஹம்மது ஹுஸைன், திருமங்கலக்குடி சுல்தான் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
அவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட தலைவரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான மஞ்சவள்ளி எம். கலீலுர் ரஹ்மான் இல்லத்திற்கு சென்று அவர்களிடம் நலம் விசாரித்து நிலவரங்களை கேட்டறிந்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகளை முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளர் எம்.கே. முஹம்மது யூனுஸ், கரூர் மாவட்ட செயலாளர் எம். மகபூப் அலி, மாவட்ட துணைத்தலைவர்கள் சுல்தான் ரஷாதி, மோதி முபாரக் அலி, நகர தலைவர் கம்பத்து கமால் பாஷா, செயலாளர் அஹமதுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
மக்தூமியா அரபிக்கல்லூரியில் நிகழ்ச்சி
பின்னர் தலைவர் பேராசிரியர் மற்றும் நிர்வாகிகள், மக்தூமியா அரபிக் கல்லூரிக்கு சென்றனர். மறைந்தவர்களின் மஃபிரத்துக்கு துஆ செய்யப்பட்டது. முன்னதாக குர்ஆன் ஓதி ஈஸால்தவாப் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் இரங்கல் உரை நிகழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் மௌலானா முகைதீன் பாஷா ரசாதி, பேராசிரியர்கள் மௌலானா முஹம்மது வலியுல்லாஹ் ரஷாதி, மௌலானா அப்துல் ரஹ்மான், மௌலானா நிசார் அலி, கல்லூரி இணைச்செயலாளர் நூரூல் அமீன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நகர ஜமாஅத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிதி அளிப்பு
உயிர் இழந்த உலமா பெருமக்களான மௌலவி வலியுல்லாஹ், மௌலவி பஜ்ருல்லாஹ், மௌலவி செய்யது இப்ராஹிம், மௌலவி அப்துல் ரஹ்மான், மௌலவி அலி அஹமது, மௌலவி அப்துல் ரஹீம், டிரைவர் மோகன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
சமீபத்தில் திருமணமான மௌலவி தமீமுன் அன்சாரி குடும்பத்தில் அவரது மனைவிக்கு ரூ. 25 ஆயிரமும், தாயாருக்கு ரூ. 25 ஆயிரமும் என ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மௌலவி கலீலுர் ரஹ்மான் சிகிச்சைக்கு ரூ. 32 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிதி அளித்தோர்
இந்த நிதியில் ரூ. 50 ஆயிரம் மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், ஊடக ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோரும் ரூ. 50 ஆயிரம் கரூர் மாவட்ட நிர்வாகிகளும், ரூ. 32 ஆயிரம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளும், ரூ. 35 ஆயிரம் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளும், ரூ. 25 ஆயிரம் , நெல்லை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், ரூ. 25 ஆயிரம் திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பளார் வி.எம் பாரூக், ரூ. 25 ஆயிரம், தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ். ஹமீது ஹாஜியார் உள்ளிட்ட நிர்வாகிகள், ரூ. 25 ஆயிரம் திருவண்ணாமலை ஜே. முஹம்மது ஹனீப், ரூ. 15 ஆயிரம் திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ். ஹம்சா ஹாஜியார் ஆகியோர் வழங்கினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |