நடப்பு கோடைப் பருவத்தை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையினர் நல மாவட்டப் பிரிவு மற்றும் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள மஹான் ஜாஃபர் ஸாதிக் அப்பா தர்ஹா அருகில், நீர் - மோர் பந்தல் திறப்பு விழா, இம்மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், அக்கட்சியின் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் மூத்த உறுப்பினர் காயல் மவ்லானா, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நீர் - மோர் பந்தலைத் திறந்து வைத்து, அனைவருக்கும் மோர் மற்றும் பழச்சாறுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில், கட்சியின் பொதுச் செயலாளரும் - தமிழக முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா - வழக்குச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காக மஹான் ஜாஃபர் ஸாதிக் அப்பா தர்ஹாவில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
செய்யது காசிம், என்.பீ.முத்து, அப்துல் காதிர் சின்னத்தம்பி, கணேசன், எஸ்.என்.முஹம்மத் அலீ, என்.எஸ்.நெய்னா உள்ளிட்ட கட்சியினரும், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி ஆகிய நகர்மன்ற உறுப்பினர்களும், கட்சியினர் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 29ஆம் நாளன்று, நகர அதிமுக சார்பில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழாவிலும் அமைச்சர் கலந்துகொண்டு பந்தலைத் திறந்து வைத்ததும், இக்கூட்டத்தில் அக்கட்சியின் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உள்ளிட்டோர் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |