காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 19 செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும், கோல்கத்தா CISF அணியும் மோதின.
வெற்றிபெறும் முனைப்புடன் ஈரணிகளுமே துவக்கம் முதல் ஆக்ரோஷமாக விளையாடின. அதன் விளைவாக, நடுவருக்குத் தெரியாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும், தள்ளி விடுவதும், விசாரணைக்குப் பின், அவ்வப்போது மஞ்சள் அட்டை காண்பிக்கப்படுவதும் நடைபெற்றது.
ஆட்டத்தின் முதற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 78ஆவது நிமிடத்தில், கோல்கத்தா அணி வீரர் கோல் காப்பு எல்லைக்குள் பந்தைக் கையால் தடுக்கவே, நடுவர் சென்னை அணிக்கு பெனாலிட்டி கிக் வாய்ப்பளித்தார். சென்னை வீரர் பக்தவர் கான் அதைச் சரியாகப் பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.
அதன்பின், ஆட்ட முடிவு வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று, காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
காலரியில் இருந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என மைதானத்தைக் கலக்கிக் கொண்டிருந்தனர். கருப்பு பேண்டும், வெள்ளைச் சட்டையும், கண்ணுக்குக் கருப்புக் கண்ணாடியும் அணிந்த ஒரு ரசிகர், காலரியிலிருந்தவாறே கோல்கத்தா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். துவக்கத்தில் அவரும் கோல்கத்தா அணியைச் சேர்ந்தவராகவே இருக்கக் கூடும் என்று கருதிய இதர ரசிகர்கள், அவர் உள்ளூர்வாசி என்பதைப் பிற்பாடு அறிந்துகொண்ட பின், அவருடன் இணைந்து கும்மாளமடிக்கத் துவங்கினர். சில நிமிடங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே அவர் ஏற்படுத்திக்கொண்டார்.
ஆனால் பா...வம்! அவர் ஆதரவு தெரிவித்த கோல்கத்தா அணி ஒரு கோல் வாங்கவே, அமர்க்களம் அடங்கிப் போனது. அடுத்த சில நிமிடங்களில் அவர் சென்னை அணிக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப ஆயத்தமானார். ஆனால் அதை மனதாரச் செய்ய இயலாத நிலையில், இறுதி வரை அமைதிகாத்திருந்தார்.
இவரது இந்த மாறுபட்ட நடவடிக்கைகள், காலரியிலிருந்த ரசிகர்களுக்கு புது உற்சாகத்தையளித்தது குறிப்பிடத்தக்கது.
மே 20 புதன் கிழமை மாலை நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியில், பெங்களூரு ASC அணியும், சென்னை SDS அணியும் மோதவுள்ளன.
நடப்பாண்டு பொன்விழா என்பதால், அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப்போட்டியும் - இரவு மின்னொளி போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மின்னொளி விளக்குகளைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பதிமூன்றாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |