காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 18 திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) அணியும் மோதின.
முதற்பாதியில் மந்தமாக ஆடிய USC அணி, இரண்டாவது பாதியில் முழு உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெற முயற்சி செய்தது. எனினும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று. கடந்தாண்டு USC அணியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தவர்களுக்கு இப்போட்டியில் அவர்களின் ஆட்டம் ஏமாற்றத்தையே அளித்தது.
இரு அணிகளுமே வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடியபோதிலும், சென்னை வீரர் உதயகுமார் ஆட்டத்தின் முதற்பாதியில் 23ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர். உள்ளூர் அணி (USC) விளையாடியதால், ரசிகர்களின் ஆதரவு அவ்வணிக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைத்தது.
இப்போட்டியில், காயல்பட்டினம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பீ.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் பாளையம் ஹபீப் முஹம்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது, அவருக்கு ஈரணியினரும், நடுவர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மே 19 செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும், கோல்கத்தா CISF அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |