காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் நடைபெறும் இப்பணிகளை எதிர்த்து, சகாயமாதா
மீனவர் சங்கம், கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் (WP [MD] 7730/2015), மே 13 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மனுவில் உள்ள விஷயங்கள் பிரதானமாக - சுற்றுச்சூழல் சம்பந்தமாக இருப்பதால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுமாறு தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து - இந்த வழக்கு (Appeal No.100/2015 [SZ]) இன்று நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில், முதலாவது வழக்காக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் டி.மோகன் மற்றும் வழக்கறிஞர் ஏ.யோகேஸ்வரன் ஆகியோர் ஆஜரானர்.
வழக்கின் விபரங்களை சுருக்கமாக வழக்கறிஞர் டி.மோகன் எடுத்து கூறினார். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட்டப்பின் - சர்வே எண் 278 இடத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை - அடுத்த ஆணை பிறப்பிக்கப்படும் வரை நிறுத்தும்படி (STATUS QUO AS ON DATE), காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கும், ஒப்பந்தபுள்ளி பெற்று பணிகளை செய்து வரும் S.K. & Co. நிறுவனத்திற்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த 10 பேர்களுடன், புதிதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சக செயலாளரும் இன்றைய வழக்கில் - எதிர் மனுதாரராக இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |