சாலை விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியளிக்கவும், இவ்வகைக்காக மேலதிகமாக பங்களிப்பு செய்திட உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பவும் - துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சாலை விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்களுக்கு மன்றத்தின் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பது என்றும், இதுபோக தனிப்பட்ட முறையில் மன்ற உறுப்பினர்கள் பங்களிப்பு செய்ய கடிதம் அனுப்புவது என்றும் கடந்த 08.05.2015 வெள்ளியன்று நடந்த துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாலை 5 மணியளவில் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.எம். அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னதாக செயற்குழு உறுப்பினர் எஸ்.எல். காஜா அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் ஊர் நலனுக்காக பல உதவிகளைக் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இமாம்கள், முஅத்தின்களுக்கு உதவித் தொகை
நமதூர் மஸ்ஜித்களில் அரும்பணியாற்றி வரும் இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் ரமழானில் உதவித் தொகை வழங்க ஏனைய மன்றங்கள் முடிவு செய்திருப்பதால், துபை காயல் நல மன்றத்தின் பங்காக ரூ. 50,000 அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
கடற்கரையைத் தூய்மைப்படுத்த நிதியுதவி
நமதூர் கடற்கரையைத் தூய்மைப்படுத்த துபை காயல் மன்றம் தூண்டுகோலாக இருந்து பெரும் முயற்சிகளைச் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் அந்தத் திட்டத்திற்கு மன்றத்தின் பொது நிதியிலிருந்து ரூ. 60,000 வரை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
காயல் துபை பேரவை
துபை காயல் நல மன்றத்தின் அடுத்து புதிய முயற்சி இது. அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு நிரந்தரமாக திரும்புவோருக்காக இந்தப் பேரவை ஆரம்பிக்கப்படுகிறது. அதன் செயற்பாடுகளை உற்சாகத்துடன் துவங்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் காயல் பெருநகரில் ஒரு நாள் சங்கமம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தச் சங்கமத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதுடன், பயனுள்ள வகையிலும் கழிக்கும் விதமாக நமது வாழ்க்கைப் பாணி (Life Style) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஜக்காத் நிதி ஒதுக்கீடு
மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஜக்காத் நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
சந்தா வசூலை நெறிப்படுத்துதல்
சந்தா வசூலிக்கும் முறையை நெறிப்படுத்தும் விதமாக கலந்தாலோசிக்கப்பட்டது. உறுப்பினர்களின் சந்தா வசூல் பட்டியலை நான்கு பிரிவாகப் பிரித்து நான்கு பொறுப்பாளர்களிடம் பகிர்ந்து கொடுத்து, சந்தா வசூலை இன்னும் முறைப்படுத்தி துரிதப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மர்ஹூம் பீர் முஹம்மது மறைவுக்கு இரங்கல்
டாக்டர் செய்யது அஹமது அவர்களின் தந்தையார் மர்ஹூம் பீர் முஹம்மது அவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் இறைப்பிரார்த்தனையுடன் இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஈஸா
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |