அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தேமுதிக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களான பாண்டியராஜன், சுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் பங்கேற்றனர்.
அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்த பிறகு, ஓ.பன்னீர் செல்வம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு, தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தமது முதல்வர் பதவி விலகலுக்கான கடிதத்தை வழங்கினார்.
முதல்வர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய அமைச்சர்களின் பட்டியலை வழங்குமாறு ஜெயலலிதாவை ஆளுநர் ரோசய்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது தலைமையிலான அமைச்சரவையை அமைப்பதற்கும், பேரவை கட்சித் தலைவராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்து அனுமதி கோருகிறார்.
இதன்பின்னர் நாளை 5-வது முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார்.
தகவல்:
தினமணி |