காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 21 வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், ASC பெங்களூரு அணியும், மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) சென்னை) அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதி இரு அணியினரும் அமைதியும், அவ்வப்போது வேகமும் என குணம் மாறி மாறி விளையாடினர். 2ஆவது பாதியில் ஆட்டம் சூடு பிடித்தது. 77ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டி.டீ.பூட்டியா என்ற வீரர் தனதணிக்காக ஒரு கோல் அடித்ததையடுத்து, ஈரணியினரும் மூர்க்கத்துடன் விளையாடத் துவங்கினர்.
இந்த மூர்க்கப்போக்கு அடிதடி வரை சென்றது. ஈரணியினரும் ஓரிடத்தில் குவிந்து, ஒருவரையொருவர் தாக்கத் துவங்கினர். நடுவர்கள் அவர்களை அமைதிப்படுத்த முனைந்தும் பயனளிக்காததால், சுற்றுப்போட்டிக் குழுவினர், முதலுதவிக் குழுவினர் உள்ளிட்டோரும் வீரர்களை அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக அவர்கள் அமைதியாயினர்.
நிறைவில், ஒரு அணியில் 3 வீரர்கள், மறு அணியில் 4 வீரர்கள் என மொத்தம் 7 வீரர்களுக்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து, மைதானத்தை விட்டும் வெளியேற்றினார்.
வீரர்களின் சண்டை நிறைவுற்ற சில நிமிடங்களில், ரசிகர்களில் சிலர் காலரி படிக்கட்டின் அடியில் பட்டாசு வெடித்ததால், அங்கு வாக்குவாதமும், சண்டையும் மூண்டது. சுற்றுப்போட்டிக் குழுவினர் அங்கு நேரடியாகச் சென்று, அது தொடர்பானவர்களை எச்சரித்ததையடுத்து, பிரச்சினை அமைதிக்கு வந்தது.
ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக செயலாளரும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இடைவேளையின்போது அவர்களுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
மே 22 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு இச்சுற்றுப் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி, மின்னொளியில் நடைபெறவுள்ளது. பெங்களூரு BDFA அணியும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
Twitter update:
ஹாரூன் மீரான்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பதினைந்தாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |