காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 22 வெள்ளிக்கிழமை மாலையில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. துவக்கமாக, வான வேடிக்கை முழங்க, பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க, மைதானத்தின் பந்திளவல்கள் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா சிறப்புக் கொடியை ஆளுக்கொரு முனையாக விரித்துப் பிடித்தவாறு, அரங்கில் வலம் வர, அவர்களைத் தொடர்ந்து - போட்டி நடுவர்களும், ஈரணி வீரர்களும் அணிவகுத்து, மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்து, தத்தம் நிலைப் பகுதிக்குப் பிரிந்து சென்ற காட்சி ரசிகர்களின் கண்களுக்கு சர்வதேச போட்டிகளை நினைவுகூரச் செய்து, விருந்து படைத்தது.
நடைபெற்ற போட்டியில், BDFA பெங்களூரு அணியும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அணியும் மோதின.
ஆட்டம் துவங்கியது முதல் ஈரணி வீரர்களும் சிறிதும் சோர்வின்றி இரு முனைகளிலிருந்தும் பந்தைக் கடத்திச் சென்று கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். எனினும், ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் எதுவும் அடிக்காததால், போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர் சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில், 4-3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர். ஐக்கிய விளையாட்டு சங்க வரலாற்றிலேயே மின்னொளி ஏற்பாட்டில் நடத்தப்படும் முதல் போட்டி இது என்பதால், நகர மக்களிடையே இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இளைஞர்கள் முதல் முதியோர் வரையிலான கால்பந்து ஆர்வலர்கள் அனைவரின் நேற்றைய உரையாடல்களும் இதைப் பற்றியதாகவே இருந்தன.
உள்ளூரில் மின்னொளிப் போட்டி அளித்த புது அனுபவம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. மாலை நேரங்களில் நடக்கும் கால்பந்துப் போட்டிகளில் - கடை வைத்திருப்போர், டியூஷன் உள்ளிட்ட கல்வித் தேவைகளுக்காகச் செல்வோர், வணிகம் புரிவோர் பெருமளவில் கலந்துகொள்வது சாத்தியமற்றதாக இருக்க, இத்தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட இரவு வேளையில் போட்டியை ரசிக்க வாய்ப்பு கிடைத்தது அவர்களிடையே மிகுந்த உற்சாகத்தையளித்துள்ளதை, நேற்றைய போட்டிக்கு வந்த ரசிகர் கூட்டம் நன்கு உணர்த்தியது.
ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே காலரி ‘ஹவுஸ் ஃபுல்’ ஆனது. இதன் காரணமாக, நுழைவுச் சீட்டுகள் வினியோகம் நிறுத்தப்பட்டு, தரைப்பகுதிக்கு அனைவரும் திருப்பி விடப்பட்டனர். சிறுவர் தரைப்பகுதியோ வழமைக்கு மாற்றமாக நிறைந்து காணப்பட்டது.
இப்போட்டியில், சென்னை - தி.நகர் எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ் அதிபர் எஸ்.அக்பர்ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது அவருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
மே 23 சனிக்கிழமை (இன்று) இரவு இச்சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, மின்னொளியில் நடைபெறவுள்ளது. பெங்களூரு ASC அணியும், MSU சென்னை அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
Twitter update:
ஹாரூன் மீரான்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பதினாறாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |