கடையநல்லூர் ஃபைழுல் அன்வார் அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பல ஊர்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த முதிர் இளைஞரும் ‘ஆலிம் ஃபைஜீ’ ஸனது (பட்டம்) பெற்றுள்ளார். அவருக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் - திரளானோர் பங்கேற்க, பாராட்டு விழாவும் நடைபெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ஃபைழுல் அன்வார் அரபிக் கல்லூரியின் 36ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இவ்விழாவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் இமாம் - தீவுத்தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் (தொடர்பு எண்: +91 93442 48787) உட்பட 24 மாணவர்கள் ‘ஆலிம் ஃபைஜீ’ பட்டமும், 6 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும் பெற்றுள்ளனர்.
20 வயது அல்லது அதற்கும் கீழுள்ள 23 மாணவர்களுடன், 62 வயதுடைய இவரும் பட்டம் பெற்றுள்ளது, அவ்விழாவில் பங்கேற்ற அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
இளம் வயதிலேயே திருமறை குர்ஆனை மனனம் செய்து ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்ற இவர், அதனைத் தொடர்ந்து - காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி உட்பட தமிழகத்தின் சில அரபிக் கல்லூரிகளில், அனுபவ முதிர்ச்சி பெற்ற பல மார்க்க அறிஞர்களிடம் கல்வி பயின்று வந்த நிலையில், ஒரே ஆண்டில் அவரது தந்தையும், மூத்த சகோதரரும் அடுத்தடுத்து மரணமடைந்த காரணத்தால், குடும்ப பாரம் இவர் பொறுப்பில் வர, மத்ரஸா கல்வியை இடைநிறுத்தம் செய்துவிட்டு, பள்ளிக் கல்வியைத் தொடர்ந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக திருமணமும் நடைபெற்றுவிட்டதால் மத்ரஸா கல்வியை இவரால் தொடர இயலாமலேயே போய்விட்டது.
குருவித்துறைப் பள்ளியின் இமாமாக இருந்து வந்த மர்ஹூம் அல்ஹாஜ் தை.மு.க.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள் காலமான பிறகு, அப்பொறுப்பில் இவர் பணியாற்றத் துவங்கினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஆலிம் கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்கவே, ‘அஃப்ஸலுல் உலமா’ தேர்வை இமாமாக இருந்த நிலையிலேயே எழுதித் தேர்ச்சி பெற்றார். பி.எச்டி. படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரையும் தொகுத்து வருகிறார்.
இவ்வாறிருக்க, தன் வயது முதிர்வைச் சிறிதும் பொருட்படுத்தாமல் - கடையநல்லூர் ஃபைழுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மாணவராக இணைந்த இவர், அங்கு நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வில் பங்கேற்று, திறம்பட தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில், ‘ஆலிம் ஃபைஜீ’ பட்டம் பெறத் தகுதிபெற்று, அதனடிப்படையில் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
குருவித்துறைப் பள்ளியின் இமாமாக இருந்த நிலையில் ஆலிம் பட்டம் பெற்றுள்ளமையால், அவரைப் பாராட்டும் முகமாக, அப்பள்ளியில் இம்மாதம் 02ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 20.30 மணியளவில் பாராட்டு விழா - பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, அவரைத் தொடர்ந்து மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
‘ஆலிம் ஃபைஜீ’ பட்டம் பெற்ற - பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ ஏற்புரையாற்றினார்.
தன் இளமைப் பருவத்து கல்வி அனுபவங்கள், மத்ரஸா கல்வியின் துவக்கம் முதல் இறுதி வரை அவருக்கு மார்க்க அறிவூட்டிய ஆலிம் பெருமக்களை நினைவுகூர்ந்தும், அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்தும் அவர் பேசினார்.
துஆவுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும், ஆலிமுடன் கைலாகு செய்தும், கட்டியணைத்தும் தமது மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
படங்களில் உதவி:
K.S.M.புகாரீ
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |