சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 87-வது செயற்குழு கூட்டம்
கடந்த 29.05.2015 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப்பிறகு 1:30 மணியளவில், யான்பு நகரில் உள்ள – காயல் இல்லத்தில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல ஏக நாயன் அல்லாஹ்வின் அருட்பெரும் கிருபையினால் சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 87 வது செயற்குழு கூட்டம் கடந்த 29.05.2015 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நிறைவேற்றிய பிறகு 01:30 மணியளவில், யான்புவின் அன்பு சகோ கலவா எம்.ஏ.முஹம்மது அபூபக்கர், சகோ எம்.ஏ.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் காயல் இல்லத்தில் வைத்து நடந்தேறிய செயற்குழு கூட்டதிற்கு சகோ. எஸ்.எல். முஹம்மது நூஹு ஹாஜி தலைமை பொறுப்பினை ஏற்று நடத்த, சகோ எம்.டபிள்யு ..ஹாமீத் ரிபாய் நிகழ்வை நெறிபடுத்த சகோ.ஹாபிழ் எம்.எஸ்.முஹம்மது இப்ராஹிம் ஆலிம் புஹாரி இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது, தொடர்ந்து வந்திருந்த அனைவரையும் அகமகிழ அன்புடன் வரவேற்றார் சகோ. கலவா எம்.ஏ.முஹம்மது இப்ராஹீம்.
முன்னதாக ஏற்பாடு செய்தபடி காலை 8-30 மணியளவில் மக்கா மற்றும் ஜித்தா சார்ந்த செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள் ஷரபிய்யா, ஆர்யாஸ் உணவகம் அருகில் ஒன்று கூட மொத்தம் நான்கு வாகனத்தில் சிறுவர்கள் உட்பட சுமார் 25 நபர்கள் மட்டில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யான்பு நகர் நோக்கி பயணமாகி இடைவெளியில் ஓய்வுக்காக நிறுத்தப்பட்டு காயலின் சுவைமிகு வடை தேநீர் சிற்றுண்டி சாப்பிட்டு பின் புறப்படவும் சரியாக ஜும்மா தொழுகைக்கு போய் சேர்ந்து கொண்டோம் அல்ஹம்துலில்லாஹ்.
தலைமையுரை:
சிறந்த ஒரு மகத்தான சேவைக்காக நாம் இங்கு ஓன்று கூடியுள்ளோம் அல்லாஹ் நமக்களித்த நிஹ்மத்துக்கு நன்றி சொல்லணும், அண்டை அயலாரை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகள், ஏழைகளின் துயர் நீக்க நாம் உதவும் மனப்பான்மை, வல்ல நாயனுக்காக செய்யும் இந்த பணிகளின் பிரதிபலன் நமக்கு நாளை மறுமையில் கிடைக்கும். எனவே இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி நாம் தொடர்ந்து இந்த நல்ல காரியத்தை ஒற்றுமையுடன் செய்து வருவோமாக என்று தனது தலைமையுரையை நிறைவு செய்தார். தலைமை பொறுப்பு வகித்த சகோ எஸ்.எல்.முஹம்மது நூஹு ஹாஜி.
மன்றத்தின் செயல்பாடுகள்:
கடந்த செயற்குழுவில் நடந்த நிகழ்வுகளையும், வழங்கிய மருத்துவ உதவிகளையும், நிறைவேற்றிய தீர்மானங்களையும் கோடிட்டு காட்டி, இம்மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார் மன்ற செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
அடுத்து பேசிய செயலாளர் சகோ.எம்.ஏ.செய்து இப்ராஹீம் உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபாவின் செயல்பாடுகள், மற்றும் உலக காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான இக்ராவின் செயல்பாடுகள், எந்த நிலையில் செயல்வடிவம் பெற்று தன்னலமற்ற சிறந்த சேவை செய்து வருகிறது என்பதனையும், நமதூர் KMT மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவ பணியாளர்கள் இரவு வேளையில் அவசர சிகிச்சைக்கு அமர்த்துவது சம்பத்தப்பட்ட விசயமாக மற்ற மன்றங்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவமனை நிர்வாகத்துடன் கலந்து பேசி வருவதையும் சுற்றிக்காட்டி, நம் மன்றம் மூலம் கூட்டு முயற்சியின் வாயிலாக வறியோர்க்கு உதவும் ஓர் அறிய வாய்ப்பு நம் எல்லோருக்கும் கிடைத்து இருக்கிறது.
மறுமையின் பலனை எதிர்பார்த்து இஹுலாசுடன் நாம் உதவினால், அல்லாஹ்வின் திருப்தி நமக்கு கிடைப்பதுடன், உதவி பெறுபவர்களின் உளப்பூர்வமான பிராத்தனையால் நாம் சிந்தக்கூடிய நமது வியர்வை வீண் போகாது ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு நற்கூலி கிடைக்கும். ஆதலால் அல்லாஹுவின் பொருத்தத்தை நாடி பணிகள் செய்து நாம் நன்மை செய்வோர்களின் கூட்டத்தின் முன்னணியில் இருப்போம் என்று நல்ல பல கருத்துக்களை பதிவு செய்தார்.
நிதி நிலை:
கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கம், அன்றைய சந்தாக்களின்
வரவு தொகை போக மீதி நிதியின் இருப்பு மற்றும் சந்தாவின் தேவையை வலியுறுத்தி சுருக்கமாக கருத்து கூறி அமர்ந்தார் சகோ.எம்.எம்.மூஸா சாஹிப்.
கருத்துரை:
நம் மன்றத்தின் நோக்கம் ஏழைகளின் கஷ்டங்களில் பங்கு கொள்வதே, அந்த இலக்கின் பயணத்தில் நம் மன்றம் பீடு நடை போடுகிறது. நம் மண்ணில் நாம் செய்யும் மனித நேய பணிக்காக யாவரும் இணைந்துள்ளோம். தர்மம் செய்தால் இறைவனின் கோபம் அணையும், நோயாளிகளை நலம் விசாரித்தல், அவர்களின் தேவை அறிந்து உதவி செய்தல்,நாம் செய்யும் தர்மத்தால் நாளை மறுமையில் சொர்க்கத்தின் கனியை சுவைக்கலாம் என்று நினையூட்டவே வந்துள்ளோம். ஆகவே தர்மம் செய்து வல்ல அல்லாஹுவின் திருப்பொறுத்ததை நாம் அடைவோம் எனும் கருத்தை கூறி நிறைவு செய்தார் சகோ. எஸ். ஹெச். ஹூமாயூன் கபீர்.
சகோ.ஏ.எம்.செய்யது அஹ்மது ஒற்றுமையுடன் இருந்து நல்ல பணிகளை நம் ஊருக்காக செய்வோம் எனவும் யான்புவிற்கு வருகை தந்த நோக்கம் பற்றியும் இரத்தின சுருக்கமாக கூறினார்.
நம் நகரின் தேவைகளை நிறைவேற்ற நாம் ஓன்று கூடியுள்ளோம்,நம் சொந்த வாழ்வில் பல கஷ்ட நஷ்டங்களை கடந்து நாம் வந்துள்ளோம். இந்த நிலை மற்றவர்களுக்கும் வராமல் இம்மன்றத்தின் மூலம் நாம் கை தூக்கி விட வேண்டும். நமது பங்களிப்பை நாம் அதிகம் செய்து, இம்மையில் நாம் செய்யும் உதவியின் பொருட்டால் அதன் பலனை மறுமையில் அடைவோம் என்று தனது கருத்தை பதிவு செய்தார் சகோ பொறியாளர் எஸ்.ஏ.நெய்னா முஹம்மது.
கடந்த 13 வருடங்களாக நாம் இம்மன்றம் மூலம் பல உதவிகளை நம் மக்களுக்கு செய்து வெற்றியாக பயணித்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்! வல்ல ரஹ்மான் நமக்கு இன்னும் வெற்றியாக்கித் தருவானாக, நாம் செய்யும் தர்மம் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது அந்த அடிப்படையில் நாம் பணியாற்றி வருகிறோம். மேலும் நல்ல பல சேவைகள் செய்து பணியாற்ற தங்களின் மேலான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தி தனதுரையை நிறைவு செய்தார் சகோ.எஸ்.எஸ்.ஜாபர் ஸாதிக்.
மருத்துவ உதவி:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பு மூலமாக வந்த விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு முறையே, குழந்தையின் கால் எலும்பு அறுவை சிகிச்சை, சிறுவனின் கை விரல் துண்டாகி அதை பொறுத்துதல், தொண்டையில் கட்டி, கர்ப்பப்பை அறுவை சிகிச்சை, 12 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை, ஐந்து பயனாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை மற்றும் தீ காயம், ஆஸ்துமா, ஆகிய 12 பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு, அனைவரின் பரிபூரண உடல் நலத்திற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
1. நமதூரின் கல்விச்சாலைகளில் இவ்வருடம் 10 மற்றும் +2 வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான மாணவ மாணவிகளுக்கும், நல்ல சீரிய முறையில் பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களுக்கும், நல்ல உயர் கல்விக்கு வித்திட்ட கல்விகூடங்களுக்கும் இம்மன்றம் மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிக்கின்றது.
2. இக்ரா கல்வி சங்கத்தின் இவ்வாண்டு சுழற்சி முறையில் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கத்தார் காயல் நல மன்ற தலைவர் சகோ,எஸ்.ஏ.எஸ். பசுல் கரீம் அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
3. மன்றத்தின் 88-வது செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூலை மாதம் 03-ம் திகதி வெள்ளிகிழமை மாலை புனித ரமலான் இப்தார் நிகழ்வுடன் நடைபெறும்.
நன்றி நவிலல்:
சகோ. எஸ். ஹெச். அப்துல்காதர் நன்றி நவில, சகோ. ஹாபிழ் எம். எஸ். முஹம்மது இப்ராஹிம் ஆலிம் புஹாரி துஆ கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறையுற்றது அல்ஹம்துலில்லாஹ். சகோ . பொறியாளர் நெய்னா முஹம்மது அனுசரணையுடன் நாவுக்கினியகாயல் களரிசாப்பாடு பரிமாறப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை யான்பு சகோதரர்கள் மிக சிறப்புடன் செய்து இருந்தார்கள்.
தகவல்:
எஸ். ஹெச். அப்துல்காதர்,
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
புகைப்படங்கள் :
எஸ்.எம்.முஹம்மது உமர்
பொறியாளர் டி.எம்.ஏ.சி.முஹம்மது லெப்பை.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
04.06.2015.
|