இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக, கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இறையருளால் 28.05.2015 வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் இக்ராஃ அலுவலகத்தின் எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா அரங்கில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவரும், தம்மாம் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி டாக்டர் முஹம்மது இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்ராஃ துணைத்தலைவரும் - ஜித்தா காயல் நல மன்ற தலைவருமான ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன், கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஏ .ஆர் .எம்.எம்.கத்தீப் மாமுனா லெப்பை கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
ஆண்டறிக்கை:
இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், இக்ராஃவின் 2014-2015 பருவத்திற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஆண்டறிக்கையின் சுருக்கம் வருமாறு:-
கல்வி உதவித்தொகை:
>>> காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன் இக்ராஃ கல்விச் சங்கம் வழங்கி வரும் கல்வி உதவித்தொகை அனுசரணையாளர்கள் (Sponsors) பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டு, உதவித்தொகை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை, அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்கள் பற்றி விளக்கப்பட்டது.
>>> கடந்த 2014-15 கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.உள்ளிட்ட படிப்புகளுக்கு, 21 மாணவர்கள், 24 மாணவியர் என மொத்தம் 45 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுள் 4 மாணவர்கள்; 3 மாணவியருக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
>>>கடந்த ஆண்டில் முதலாண்டு 45 மாணவ-மானவியர் உட்பட இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ -மாணவிகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்ட கல்வி நிதியுதவி ரூபாய் 7,20,500/-
>>> கடந்த 2014-15 கல்வியாண்டில் ஜகாத் நிதியின் கீழ் கிடைக்கப்பெற்ற தொகை ரூபாய் 2,27,000/-. அனைத்து வகை மேற்படிப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த ஜக்காத் நிதி வழங்கப்பட்ட மாணவ-மாணவியர் - 22 பேர். அவர்களுள் மாணவர்கள் - 19, மாணவியர் - 3 பேர்.
>>> கடந்த கல்வியாண்டில் (2014-15) இக்ராஃ மூலம் வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவித்தொகை (ஜகாத் நிதி உட்பட) ரூபாய் 9,47,500/-
>>> கடந்த 9 ஆண்டுகளாக (2006 முதல் 2014 வரை) - உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன் 556 மாணவ-மாணவியருக்கு 69 லட்சத்து 4 ஆயிரத்து 300 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014 நிகழ்ச்சியறிக்கை:
‘தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட்’, ‘இக்ராஃ கல்விச் சங்கம்’ இணைந்து, கடந்த ஆண்டு காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடத்திய ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014’ நிகழ்ச்சி தொடர்பான விபரங்கள்,இந்த நிகழ்ச்சியின் செலவினங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விபரங்கள்,மற்றும் வரவு-செலவு கணக்கு விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
கல்வி ஒளிபரப்பு:
வழமை போல நடப்பாண்டும், ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் நலனுக்காக கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சி, ஐ.ஐ.எம். டீவி, சேனல் 7 ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட விபரம் தெரிவிக்கப்பட்டது.
எல்லா ஆண்டுகளையும் போல நடப்பாண்டிலும் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தித் தந்த ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்களுக்கும் கூட்டத்தில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பதிவுப் பணிகள் நிறைவு:
2013-2014 பருவத்திற்கான இக்ராஃவின் அரசுப் பதிவுப் பணிகள் (Renewal ), கணக்குத் தணிக்கை அனைத்தும் முறைப்படி நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.
சொந்த நிலம் பத்திரப் பதிவு:
கடந்த வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய படி, இக்ராஃவுக்கான சொந்த நிலம் 09.10.2014 அன்று முறைப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்ட விபரங்கள், அதற்கு ஆன செலவுகள் குறித்து விளக்கப்பட்டதுடன், இதுகுறித்த பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
இக்ராஃ உறுப்பினர்கள்:
இதுவரை 454 பேர் இக்ராஃவின் உறுப்பினர்களாக உள்ளனர். நடப்பாண்டில் 21 பேர் இக்ராஃவின் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். (புதிய உறுப்பினர்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.)
இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக இதுவரை 111 பேர் இணைந்துள்ளனர். அவர்களுள் 83 பேர் - அதற்கான ரூபாய் 15 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளனர். இவ்வகையில் பெறப்பட்ட தொகை 12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுவரை பணம் செலுத்தாத ஆயுட்கால உறுப்பினர்களுக்கு முறைப்படி நினைவூட்டப்பட்டுள்ளது.
துணை அலுவலர்:
இக்ராஃ நிர்வாகியின் பணிப்பளுவைக் கருத்திற்கொண்டு, அவருக்குத் துணையாக கூடுதலாக ஓர் அலுவலரை நியமிக்க, 31.07.2014 அன்று நடைபெற்ற இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், - ஊதிய அடிப்படையில் ஒருவர் துணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2015-2016 பருவத்திற்கான நிதிநிலையறிக்கை:
2015-2016 பருவத்திற்கான இக்ராஃவின் - எதிர்பார்க்கப்படும் செலவினங்கள் குறித்த நிதிநிலையறிக்கை வாசிக்கப்பட்டது. மொத்தம் 4 லட்சத்து 76 ஆயிரத்து 200 ரூபாய் தொகை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வருடாந்திர நிர்வாகச் செலவினம்:
இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்காக காயல் நல மன்றங்கள் மற்றும் தனி நபர்ககள் வழங்கிய நன்கொடை விபரங்கள் வாசிக்கப்பட்டது.
(அப்போது கருத்து தெரிவித்த ஜித்தா காயல் நல மன்றத் தலைவரும், இக்ராஃ துணைத்தலைவருமான குளம் அஹ்மத் முஹ்யித்தீன், இவ்வகைக்காக, காயல் நல மன்றங்களை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிராமல், ஏற்கனவே கூட்டங்களில் பேசப்பட்டது போல - உள்ளூரில் மகளிரிடமிருந்தும், வணிக நிறுவனங்களிடமிருந்தும் நிதி திரட்ட செயல்திட்டங்களை விரைந்து வகுக்குமாறு வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, ''இக்ராஃவின் மகளிர் தன்னார்வக் குழுவினரை முறைப்படி பதிவுசெய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, நிதி திரட்டும் திட்டம் உள்ளதாகவும், பணிப்பளு காரணமாக அதை உடனடியாக நிறைவேற்ற இயலாமல் போனதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்'' என்றும் கூறினார்).
கல்வி உதவித்தொகை விளக்கப் பிரசுரம்:
இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று, வழமை போல பிரசுரம் வெளியிடப்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட பிரசுரமும் காண்பிக்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை கோரி இதுவரை 65 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.05.2015 வரை பெறப்படும்.
இறுதியாக இக்ராஃவின் தலைவரும், ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் அவர்கள் அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட்டது.
(அதில் குறிப்பாக ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்டம், நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இக்ராஃவுக்கான சொந்த கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு விளக்கமளித்து பேசிய இக்ராஃ நிர்வாகி, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்டம் (Unified Scholarship scheme) நடைமுறைப்படுத்துவதற்கு முன் அதில் உள்ள சாதக-பாதகங்கள், நடைமுறை சட்ட சிக்கல்கள் குறித்து தீர ஆலோசித்துதான் செய்ய வேண்டியுள்ளது என்றும், எனினும் இறையருளால் இந்த வருடம் இதனை நடைமுறையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இரண்டாவது கூறப்பட்ட நிதி சேகரிப்பு குறித்து தகுந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மூன்றாவதாக கூறப்பட்ட இக்ராஃவுக்கான சொந்தக்கட்டிடம் கட்டுவது குறித்த முயற்சிகளைப் பற்றி கூறும்போது, தற்போதைய தலைவரான ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இது விசயமாக அடிக்கடி தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகுந்த ஆர்வமுடன் பேசி வந்ததாகவும், கட்டிட வரைபடம் (புளூ பிரிண்ட்) கூடிய விரைவில் தயாரித்து தமது பார்வைக்கு அனுப்பித்தருமாறு கேட்டுக்கொண்டதாகவும்,, ரியாத் காயல் நல மன்றத்தின் நிர்வாகக் காலத்திலேயே இக்ராஃ வின் சொந்தக் கட்டிடத்திற்கான பணிகளில் பாதியேனும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் ஆவல்கொண்டதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக தனது தாயார் மற்றும் தனது உடல் நலக் குறைவு மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக கடந்த பல மாதங்களாக மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருந்ததால் இக்ராஃவின் கட்டிட முயற்சியில் முழு முயற்சி எடுக்கவியலாமல் போய்விட்டதாகவும், அதற்காக தாம் வருந்துவதாகவும், இன்ஷா அல்லாஹ் இனி அதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்).
இவை, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் கூட்டத்தில் சமர்ப்பித்த ஆண்டறிக்கையின் சுருக்கமாகும்.
நிர்வாகி விளக்கவுரை:
செயலாளரின் ஆண்டறிக்கையை தொடர்ந்து, அது தொடர்பான கூடுதல் விபரங்கள் குறித்தும், இக்ராஃவின் வருங்காலத் திட்டங்கள் குறித்தும், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-
பிற கல்வி உதவித்தொகைகளைப் பெற வழிகாட்டல்:
இக்ராஃ மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை தவிர காயல் நல மன்றங்கள் ,மற்றும் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை குறித்தும், பல்வேறு தனியார் அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் குறித்த தகவல் மற்றும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அவற்றையும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் கணிசமான உதவித் தொகைகள் கிடைக்கப்பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இக்ராஃ மூலம் தேர்வு செய்து தரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்வி இலவசமாக வழங்குவதாகவும், கட்டணச் சலுகை அளிப்பதாகவும் ஒரு பொறியியல் கல்லூரியிலிருந்து வாக்குறுதி பெறப்பட்டு, தகுதியுள்ள ஒரு மாணவரை அத்திட்டத்தின் கீழ் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த மாணவர் ஒத்துழைக்காததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.அடுத்து கட்ஆஃப் மதிப்பெண் குறைவாகக் கொண்ட மாணவர் ஒருவருக்கு பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் ரூபாய் 3 லட்சம் வரை கேட்கப்பட்ட நிலையில், இக்ராஃவின் மூலம் அக்கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டு, மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார்.
“புதிய தலைமுறை” எனும் பத்திரிக்கையில் வெளியான மிக முக்கியமான கல்வி உதவித்தொகை அறிவிப்பின் அடிப்படையில், தகுதியுள்ள சில மாணவர்களுக்கு அக்கறையுடன் வழிகாட்டப்பட்டும், அவர்கள் அதற்கு ஆர்வம் காண்பிக்காததால், நல்ல பல வாய்ப்புகள் அம்மாணவர்களால் நழுவ விடப்பட்டுள்ளது.
திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியிலிருந்து ஏழை மாணவர்களுக்காக 3 இடங்கள் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் மூலம் கேட்கப்பட்டு இக்ராஃவுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.நமது மாணவர்கள் இதனை பயன் படுத்திக்கொள்ளவேண்டும்.
பொறியியல் கல்லூரியினர் வருகை:
சென்னை ஆலிம் முஹம்மத் ஸாலிஹ் (AMS) பொறியியல் கல்லூரி, டானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலிருந்து அதன் பேராசிரியர்கள், நிர்வாகிகள், இக்ராஃவுக்கு வந்து கலந்துரையாடிச் சென்ற விபரங்கள், டானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி மூலம் Engineering Spot Admission Camp இக்ராஃ அலுவலகத்தில் 25-05-2015 அன்று நடைபெற்ற விபரங்கள், அவர்களால் ஏழை மாணவர்களுக்கு எதிர்பார்க்கப்படும் பலன்கள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.
கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி:
ஆலிம் முஹம்மத் ஸாலிஹ் (AMS) கல்லூரியின் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை காயல்பட்டினத்தில் நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நடப்பாண்டு அரபி மொழி பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு, பொருளாதாரச் சிரமமின்றி அக்கல்லூரியில் சேர்க்கை பெற இக்ராஃ முயற்சித்து வருகிறது.
விண்ணப்பங்களைக் குறைத்து, உதவித்தொகையை அதிகரித்தல்:
நடப்பாண்டிலிருந்து, கல்வி உதவித்தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்களுள் தகுதி குறைவானவை அடிப்படையில் எண்ணிக்கையைக் குறைத்து, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு உதவித்தொகையை கூடுதலாக வழங்க திட்டமுள்ளது.
கல்வி நிகழ்ச்சிகள் குறித்து தலைமையாசிரியர்களிடம் கருத்து கேட்பு:
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி குறித்தும் - இன்றைய மாணவ சமுதாயத்திற்கு தேவைப்படும் கல்வி நிகழ்ச்சிகள், கல்வி வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவிக்குமாறு நகரின் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, அவர்களிடம் நேரடியாக கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. இதர பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடமிருந்து ஆலோசனைக் கடிதங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் கிடைக்கப் பெற்றதும் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பரிசீலித்து நமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவு:
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், ஆண் மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக உள்ளது கண்டு இக்ராஃ மிகுந்த கவலை கொண்டுள்ளது.
வருங்காலங்களில் இக்குறை களையப்படுவதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றிட, எல்லா பள்ளிகளிலும் பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டத்தை அடிக்கடி நடத்தத் தூண்டவும், அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தவும் திட்டமுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுகள்:
அரசுப் பணிகளை இலகுவாகப் பெற்றிட வழிவகுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் (TNPSC) குறித்து, ஆறுமுகநேரியில் இயங்கி வரும் Young Pioneer Association (YPA) - இளம் முன்னோடிகள் சங்கம் அமைப்பால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளவை. இந்த அமைப்பின் வழிகாட்டல் மூலம் ஏராளமானோர் அரசின் அதிகாரப்பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். அதன் முக்கியஸ்தர்களுடன் கடந்த 20-05-2015 அன்று இக்ராஃ நிர்வாகி, கத்தர் காயல் மன்ற துணைத் தலைவர் முஹம்மத் யூனுஸ், அதன் செயற்குழு உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை, காயல்பட்டினம் அரசு நூலகர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து பேசினர்.
விரைவில் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசவும், அதனைத் தொடர்ந்து அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும், அதனை அடைய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வரும் ஜூன் மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திடவும் திட்டமுள்ளது.
காயல்பட்டினத்தில் ஒரு மையம் அமைத்து, இங்கிருந்து அதன் செயல்பாடுகளைச் செய்து, அனைத்து சமுதாய மாணவ-மாணவியரும் அரசின் அதிகாரப் பணிகளைப் பெற்று பயன்பெறச் செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பைபாஸ் சாலையில் உள்ள நுஸ்கியார் முதியோர் இல்லக் கட்டிடத்தில் செயல்படுத்திட திட்டமிட்டு நுஸ்கியார் டிரஸ்ட் நிர்வாகிகளிடம் அனுமதி கேட்கப்பட்டது. உடனடியாக அதற்கு சம்மதமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ்! கூடிய விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படும்.
இனிவரும் காலங்களில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான திறனாய்வு நிகழ்ச்சிகள் (Aptitude Programme) மற்றும் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி (Spoken English Programme ), IAS, IPS போன்ற அரசு ஆட்சிப் படிப்பிற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தப்படும். இது போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திட உறுப்பினர்கள் எல்லோரும் ஆர்வத்துடன் பங்காற்ற வேண்டும் என்று நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் கூறி, தனதுரையை நிறைவு செய்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
2014 - 2015 பருவத்திற்கான இக்ராஃவின் வரவு - செலவு கணக்கு ஆண்டறிக்கையை இக்ராஃ பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் ஊரிலில்லாததால், அவர் சார்பாக இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது கூட்டத்தில் சமர்ப்பிக்க, சில விசாரணைகளுக்குத் தேவையான விளக்கங்கள் பெறப்பட்ட பின், அதற்கு கூட்டம் ஒப்புதல் வழங்கியது.
புதிய தலைவர் தேர்வு:
சுழற்சி முறையிலான 2015-16 வருடத்திற்கான இக்ராஃவின் புதிய தலைவராக, கத்தர் காயல் மன்றத்தின் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இக்ராஃவின் கடந்த பருவத்தில் (2014-2015) தலைமைப் பொறுப்பை ஏற்று சேவையாற்றிய - ரியாத் காயல் நல மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் அவர்களுக்கும், அவர்களுடன் இணைந்து உதவியும் - ஒத்துழைப்பும் நல்கிய அம்மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
புதிய துணைத்தலைவர்கள்:
இக்ராஃ சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் அங்கத்தினராக உள்ள மன்றங்களுள், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் புதிய தலைவராக எம்.ஆர்.ரஷீத் ஜமான் அவர்களும், தம்மாம் காயல் நல மன்றத் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக் அவர்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதையடுத்து, அவ்விருவரும் இக்ராஃவின் புதிய துணைத்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவரை அவர்களது இடங்களில் பொறுப்பு வகித்த ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் (சிங்கப்பூர்), ஹாஜி டாக்டர் இத்ரீஸ் (தம்மாம்) ஆகியோருக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
அடுத்து கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்து தெரிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்தவர்கள் - தெரிவித்த கருத்துக்களின் விபரம் வருமாறு:-
ஹாஜி சாளை ஸலீம் (துணைத்தலைவர், துபை கா.ந.மன்றம்)
கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு கல்வி உதவித்தொகை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவானது குறித்து கேள்வியெழுப்பினார்.
பெறப்படும் விண்ணப்பங்களுள் முழுத் தகுதியானவை மட்டும் ஏற்கப்பட்டு, இதர விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
“உள்ளூர் கல்லூரி மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை முன்பு போல கல்லூரியிலேயே நேரடியாகச் செலுத்தாமல், மாணவியரிடம் கொடுப்பது ஏன்?” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த நிர்வாகி, பல்லாண்டுகளாக அவ்வாறுதான் செய்யப்பட்டு வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன், இக்ராஃவால் 1.35 லட்சம் தொகைக்கு வங்கிக் காசோலை நேரடியாக கல்லூரியில் வழங்கப்பட்டு, அதற்கான சான்றும் பெற்று, மறுநாள் கல்லூரியின் சார்பில் இக்ராஃவின் காசோலை வங்கியில் செலுத்தப்பட்டு - கணக்கிலும் பணப்பரிமாற்றம் நடைபெற்ற பிறகும், 50 நாட்கள் கழித்து, “இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவியருக்கான scholarship payment பெறப்படவில்லை” என அக்கல்லூரி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. நன்கு சரிபார்க்குமாறு அவர்களிடம் கூறப்பட்டும் அதே பதில்தான் பெறப்பட்டது.
இவ்வளவு பெரிய தொகை அனுப்பப்பட்டும் கிடைக்கப்பெறவில்லை என்ற தகவல் இக்ராஃவுக்கு அதிர்ச்சியளித்த வேளையில், “50 நாட்களுக்கு முன்பு பணப்பரிமாற்றம் நடைபெற்றுவிட்டது” என்பது இக்ராஃவின் வங்கி பரிவர்த்தனை பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரே அத்தொகை பெறப்பட்டுவிட்டதாகவும், அது தொடர்புடைய அலுவலர் அளித்த தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அக்கல்லூரியிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன், இனி வருங்காலங்களில் மாணவிகளிடம் நேரடியாகவே கட்டணத்தை வழங்குமாறு அந்நிர்வாகம் கூறியதன் அடிப்படையிலேயே - இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்கவே, மாணவியரிடம் கல்வி உதவித்தொகை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது'' என்று விளக்கம் தெரிவித்தார்.
எஸ்.எச்.மக்பூல் (செயற்குழு உறுப்பினர், KSWA - ஹாங்காங்)
“ஆண் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை, கடன் அடிப்படையில் முழுமையாக வழங்கி, அவர்கள் பணிக்குச் சென்ற பின், அவற்றைக் கேட்டுப் பெறலாம். மாணவியருக்கு வழமை போல அப்படியே வழங்கலாம்...” என்றார்.
இது நல்லதொரு ஆலோசனை என்றும், அவ்வாறு கடனாக வழங்கி, அவற்றைத் திரும்பப் பெறும் விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கணக்குப்பதிவு முறைகள், நடைமுறை சாத்தியங்கள் குறித்து அடுத்த செயற்குழுவில் விவாதிக்க முயற்சிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
“காயல்பட்டினத்திலிருந்து ஹாஃபிழ் மாணவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் ஆவதைக் கண்டு, ஈரோட்டிலுள்ள சில சமூக ஆர்வலர்கள் வியப்புற்றுள்ளதாகவும், தங்கள் பகுதி மக்களுக்கும் அதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதற்காக, காயல்பட்டினத்தில் ஹிஃப்ழு மத்ரஸாக்களில் விடுதி வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும், அதற்கான செலவினங்களைச் செய்திட தாங்கள் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்...” என்றார்.
இது, ஹிஃப்ழு மத்ரஸாக்கள் தொடர்புடைய செயல்திட்டம் என்பதால், அந்த மத்ரஸாக்களிடம் இத்தகவலைத் தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (எ) ஹாஜி காக்கா (உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
“பல லட்சங்களை மாத ஊதியமாகப் பெறும் சில இளைஞர்களிடம், ஏழை மாணவர்கள் நலனுக்காக உதவித்தொகை கோரினால், ஏமாற்றமே ஏற்படுகிறது... இதுபோன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்...” என்றார்.
ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி (உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
“இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெற்று ஆளானவர்கள் இதுகுறித்து என்ன கூறுகின்றனர்?” என்று கேட்டார்.
ஓரிருவர் நல்ல தகவல்களை நன்றியுடன் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும், முறைப்படி அவர்களிடம் தகவல் சேகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கத்தீபு ஏ.ஆர்.எம்.எம்.மாமுனா லெப்பை (கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்)
இக்ராஃ நிர்வாகி தர்வேஷ் அவர்கள் கூறியது போல் அரசு வேலைவாய்ப்புகளில் (TNPSC), அது சார்ந்த பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தினால் மிகப்பெரிய பயன் நமது சமுதாயத்திற்கு ஏற்படும்.
ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் (முன்னாள் தலைவர், தம்மாம் கா.ந.மன்றம்)
“கல்வி உதவித்தொகை பெறுவோர், படித்து ஆளான பிறகு தாமும் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் துவக்கத்திலேயே விதைக்கப்பட வேண்டும்...
கல்வி உதவித்தொகை பெற்று படித்து முடித்தோரின் தற்போதைய நிலை குறித்து ஆய்ந்தறியப்பட வேண்டும்...
IAS, IPS படிப்புகளுக்கு பலர் முழு நிதியுதவி செய்ய ஆயத்தமாக இருந்தும் மாணவர்கள் அதில் ஆர்வப்படவில்லை என்றால், அதற்குக் காரணம் பெற்றோர்தான்! எனவே, மாணவர்கள் பள்ளிக்கல்வியின் நிறைவில் இருக்கும்போது இதுகுறித்து ஊக்கப்படுத்துவதைக் காட்டிலும், அவர்களின் பள்ளிக்கல்வியின் துவக்கத்திலேயே பெற்றோர் தொடர்ந்து ஊக்குவித்தால் மட்டுமே அது சாத்தியப்படும்” என்றார்.
தீர்மானங்கள்:
இறுதியாக கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
இக்ராஃ பொருளாளர் சார்பாக கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2014-2015ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 02 - 2015-2016 பருவத்திற்கான நிதிநிலையறிக்கைக்கு ஒப்புதல்:
2015-2016 பருவத்திற்கான இக்ராஃவின் - எதிர்பார்க்கப்படும் செலவினங்கள் குறித்த நிதிநிலையறிக்கைக்கு இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 03 - புதிய தலைவர் தேர்வு:
இக்ராஃவின் புதிய தலைவராக, கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் அவர்களை இக்கூட்டம் ஏக மனதாக தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 04 - கடந்த தலைமைக்கு நன்றி:
இக்ராஃவின் கடந்த பருவத்தில் (2014-2015) தலைமைப் பொறுப்பை ஏற்று ஒத்துழைப்பு நல்கிய ரியாத் காயல் நல மன்றத்திற்கும், அதன் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் அவர்களுக்கும், இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 05 - புதிய துணைத்தலைவர்கள் தேர்வு:
இக்ராஃவின் நடப்பு துணைத்தலைவர்களான ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத், ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் ஆகியோர் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஜனாப் எம்.ஆர்.ரஷீத் ஜமான், ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக் ஆகியோரை இக்கூட்டம் புதிய துணைத்தலைவர்களாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 06 - துணை அலுவலர் நியமனத்திற்கு ஒப்புதல்:
இக்ராஃ நிர்வாகியின் பணிப்பளுவைக் குறைப்பதற்காக, ரூபாய் 6 ஆயிரம் மாத ஊதிய அடிப்படையில் புதிதாக துணை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 07 - நிர்வாகச் செலவின அனுசரணையாளர்களுக்கு நன்றி:
இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்களுக்காகவும், மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காகவும் நன்கொடையளித்து ஆதரித்து வரும் காயல் நல மன்றங்களுக்கும், கல்வி ஆர்வலர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 08 - புதிய உறுப்பினர்களுக்கு ஒப்புதல்:
இக்ராஃவில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்து, புதிதாக விண்ணப்பித்துள்ள 22 பேரின் விண்ணப்பங்களை இக்கூட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கிறது.
தீர்மானம் 09 - கல்வி ஒளிபரப்புக்கு உதவியோருக்கு நன்றி:
இக்ராஃவால் நடத்தப்பட்ட தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்த ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்களுக்கும், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய ஐ.ஐ.எம். டீவி, சேனல் 7 டீவி ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 10 - வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்திட இடம் தந்தோருக்கு நன்றி:
இக்ராஃ மூலம் வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்திட பை பாஸ் சாலையிலுள்ள முஸ்லிம் முதியோர் இல்லத்தை தர முன்வந்துள்ள நுஸ்கியார் ட்ரஸ்ட் நிர்வாகத்திற்கும், அதற்கான முயற்சிகளைச் செய்த ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா அவர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக இக்ராஃ மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது நன்றி கூற, ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் அவர்கள் துஆ இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் மதியம் 01:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், இக்ராஃ பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
என்.எஸ்.இ.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம் - காயல்பட்டினம்
வருடாந்திர பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவருக்கும், இக்ராஃவின் ஆண்டறிக்கை, வரவு-செலவு கணக்கறிக்கை ஆகியவற்றை - அச்சுப் பிரதிகளாக, கூட்டம் துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் கடந்த (2014ஆம் ஆண்டு) வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |