மழலையர் நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியுள்ளது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கமம் - 2015 நிகழ்ச்சி. நகர்நலனுக்காக, உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 26.04.2015 அன்று Aloha Fairy Point Chalet – 2, Changi என்ற சிற்றுலாத் தலத்தில் இறையருளால் சிறப்புற நடைபெற்றது.
நீண்ட அரட்டை:
ஏற்கனவே திட்டமிட்ட படி, மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினர் - குழந்தை - குட்டிகளுடன், 14.30 மணியளவில் லெவண்டர், பிடோக் ஆகிய பகுதிகளில் காத்திருக்க, அங்கிருந்து பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், 30 நிமிடங்களில் நிகழ்விடம் சென்றடைந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால், நிகழ்விடத்திலும் - அதைச் சுற்றியும் காயலர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீண்ட நேரம் அரட்டையில் மூழ்கினர்.
விளையாட்டு:
உறுப்பினர்களுள் ஒரு பிரிவினர் க்ரிக்கெட் விளையாட, மற்றொரு சாரார், கடற்கரையோரத்தில் நடைபோடத் துவங்கினர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வடையுடன் தேனீர் பரிமாறப்பட்டது. பின்னர் அஸ்ர் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மீண்டும் துவங்கிய விளையாட்டும், அரட்டைகளும் மஃரிப் அதானுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக நிறைவுற்றது.
மழலையர் போட்டிகள்:
மழலையரின் கலைத்திறனை வெளிக்கொணர, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டன. மழலையரும், அவர்களின் பெற்றோரும், உறுப்பினர்களும் அதை வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.
தொழுகை:
மஃரிப் வேளை நெருங்கவே, மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்டது. அஸ்ர், மஃரிப் இருவேளைத் தொழுகைகளையும், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாமும், மன்ற உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ வழிநடத்தினார்.
ஒன்றுகூடல் நிகழ்ச்சி:
பின்னர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி துவங்கியது. ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகள் குறித்து மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
மழலையர் போட்டிகள்:
தொடர்ந்து, மழலையர் - சிறார் பங்கேற்ற பேச்சு, உரையாடல், திருமறை குர்ஆன் ஓதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோரால் கனகச்சிதமாக ஆயத்தம் செய்து பங்கேற்கச் செய்யப்பட்டிருந்த இம்மழலையரின் பங்கேற்பு அனைவரின் புருவங்களையும் விரியச் செய்தது.
பரிசளிப்பு:
பின்னர், 29.03.2015 அன்று நடைபெற்ற ஹிஃப்ழுல் குர்ஆன் - திருமறை குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றிபெற்ற ஹாஃபிழ்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மழலையருக்கும் பல்வேறு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
வழமை போல, மன்றத்தின் - உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை, அடைக்கப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்பட்டது.
அனைத்து உறுப்பினர்களின் மிகுந்த ஆர்வத்துடன் கூடிய பங்களிப்பின் நிறைவில், நகர்நலனுக்காக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் தொகை இவ்வாண்டின் நன்கொடையாக சேகரிக்கப்பட்டு, கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
இரவுணவு விருந்துபசரிப்பு:
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர் அனைவருக்கும் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி இரவுணவு பரிமாறப்பட்டது.
22.00 மணியளவில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
குடும்ப சங்கம நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்வுகளையும், https://drive.google.com/folderview?id=0B_n6BHxv4g4AfnNydHVTeDR4dVBfaTFVRjAtYVlVZWtfY1h2LUNwZ2JCZUhhMzBMbk1ZSEk&usp=sharing என்ற இணைப்பில் சொடுக்கி படங்களைத் தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
சிங்கை கா.ந.மன்றம் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 09:55 / 03.06.2015] |