காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் இவ்வாண்டு மார்க்க விழாக்களை, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஜூன் மாதம் 06, 07, 08 (சனி, ஞாயிறு, திங்கள்) நாட்களுக்குப் பகரமாக, ஜூன் 13, 14, 15 (சனி, ஞாயிறு, திங்கள்) நாட்களில் நடத்திடுவதென - 24.05.2015 ஞாயிற்றுக்கிமையன்று நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளுக்கு, துறை வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கும் கலந்தாலோசனைக் கூட்டம், நேற்று (மே 31) ஞாயிற்றுக்கிழமையன்று 17.30 மணியளவில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மைதானத்தில் நடைபெற்றது. ஹாமிதிய்யா கவுரவ ஆசிரியர் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் கே.எம்.இஃப்திகாருத்தீன் ஷெய்க் அப்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் கூட்ட அறிமுகவுரையாற்ற, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ கலந்தாலோசனையை வழிநடத்தினார்.
இக்கூட்டத்தில், விழா ஏற்பாடுகளுக்கான பொறுப்புகள் துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
விழா நிகழ்வு நாள் மாற்றம் குறித்து விளக்குகையில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் 88ஆம் ஆண்டு வைபவ நிகழ்ச்சிகள் நிறைவுற்று, சில நாட்களே எஞ்சியிருந்தமையால், போதிய ஏற்பாடுகளை திருப்திகரமாக செய்யத் தோதுவாக விழா நிகழ்வு நாட்கள் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் விழாக்கள் முடிந்து - அடுத்து வரும் வியாழக்கிழமையில் நடத்தப்பட்டு வரும் சந்தாதாரர் உபசரிப்பு நிகழ்ச்சி, நடப்பாண்டு ரமழான் மாதம் நெருங்குவதால், விழாவிற்கு முன்பாகவே - ஜூன் 10ஆம் நாள் புதன்கிழமையன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன் மாணவர் நகர்வலம் நடத்தப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டில் மாணவர் முதற்கட்ட நகர்வலத்தை (பேரணியை) விழா முதல் நாள் அதிகாலைக்குப் பகரமாக, அதற்கு ஒரு நாள் முன்பாக (ஜூன் 12 வெள்ளிக்கிழமையன்று) மாலையில் துவக்கி, மஃரிப் - இஷா தொழுகைகளை முடித்த நிலையில் இரவு 08.30 மணியளவில் நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ உட்பட - மத்ரஸாவின் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மத்ரஸா ஹாமிதிய்யாவின் கடந்தாண்டு (2014) மார்க்க விழாக்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மத்ரஸா ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |