காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஏற்பாட்டில், வழமை போல இவ்வாண்டும் காயலர்கள் இன்பச் சிற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால், எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், கடந்த 03.05.2015 அன்று, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் விளையாட்டில் குதூகலிக்கச் செய்யும் இடங்களுள் ஒன்றான Po Leung Kuk Jockey Club Day Camp Centre, Tai Tong, Yuen long என்ற இடத்தில், இன்பச் சிற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சிற்றுலா செல்வதற்காக, அன்று காலை 08.30 மணிக்கு ஓரிடத்தில் ஒன்று கூடி, நான்கு பேருந்துகளில் சிற்றுலா இடத்தை அனைவரும் வந்தடைந்தனர். ஹாங்காங் வாழ் காயலர் குடும்பத்தினர் மற்றும் விடுமுறையில் ஹாங்காங் வந்துள்ள காயலர்கள் என மொத்தம் 240 பேரை உள்ளடக்கிய சிற்றுலாக் குழு காலை 9.30 மணியளவில் சிற்றுலா இடத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் தங்களது கட்டணத்தை பொறுப்பாளர்களிடம் செலுத்தி அதிர்ஷ்ட குலுக்கலுக்கான கூப்பன்களைப் பெற்றுக்கொண்டனர். மதிய உணவு முன்பதிவு செய்தவர்கள் அதற்கான கட்டணத்தையும் பொறுப்பாளர்களிடம் செலுத்தி கூப்பன்களைப் பெற்றுக்கொண்டனர்.
சிற்றுலா தலத்திலுள்ள விளையாட்டு வசதிகளைப் பற்றி சிற்றுலா குழு விளக்கிப் பேசினர். அதனைத் தொடர்ந்து, அவரவர் தமக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடக் களமிறங்கினர். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் - கால்பந்து, பூப்பந்து, வில்வித்தை, டென்னிஸ், ரோல்லர் ஸ்கேட்டிங், சைக்கிள் ஓட்டுதல், சுவர் ஏறுதல், குழந்தைகள் விளையாட்டுகள், உள்ளரங்க விளையாட்டுகள், நீச்சல் குளியல் இதர விளையாட்டுகளிலும் மகிழ்வுற பொழுதைக் கழித்தனர்.
லுஹர் தொழுகைக்குப் பின், மதிய உணவு முன்பதிவு செய்தவர்களுக்கு மதிய உணவாக சூடான - சுவையான கோழி மற்றும் மீன் பிரியாணி தருவிக்கப்பட்டு பரிமாறப்பட்டது. மற்றவர்கள், இல்லங்களிலிரிந்து சுவையான உணவுகளை சமைத்து வந்திருந்தனர். அனைவரும் கூட்டாக அமர்ந்து, ஆர்வமுடன் மதிய உணவு உண்டனர்.
மதிய உணவுக்குப் பின்னர், சிலர் ஓய்வு எடுத்தனர். மற்றவர்கள் மீண்டும் விளையாட்டுகளிலும் நீச்சல் குளியலிலும் ஈடுபட்டனர்.
அந்தந்த நேரங்களில் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
பின்னர், 3.30 மணிக்கு பேரவையின் செயல்பாடுகளை அனைவருக்கும் விளக்குவதற்காகவும் அதிர்ஷ்ட குலுக்கலுக்கும் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியை, ஹாஃபிழ் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
பிறகு காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ், பேரவை இந்த பருவத்தில் ஆற்றிய வழங்கிய உதவிகளை பற்றி விளக்கிப் பேசினார். சமுதாய நலனுக்காக பேரவை ஆற்றும் பணிகளுக்கு அனைவரும் எப்பொழுதும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஹாங்காங் மற்றும் சீனாவில் காயலர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் சார்பில் அப்பரிசுகளுக்கு அனுசரணையளிக்கப்பட்டிருந்தது.
ஹாஃபிழ் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் அவர்களின் துஆவுடன் மாலை 05.00 மணியளவில் சிற்றுலா நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் அனைவரும் மகிழ்ச்சியான நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவை சார்பில் இதற்கு முன் நடைபெற்ற இன்பச் சிற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |