காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசர கூட்டம் இம்மாதம் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 15.00 மணிக்கு என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நகராட்சி கட்டிடம் இடித்தகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், நுழைவாயிலுக்கருகில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, அதில் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வருகை தந்தோர்:
01ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப்,
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள்,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர், அன்று 15.15 மணியளவில் கூட்ட நிகழ்விடம் வந்து நாற்காலிகளில் அமர்ந்தனர். அவர்களுள், 07, 13, 15ஆவது வார்டு உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால் ஆகியோர் மட்டுமே வருகைப் பதிவேட்டில் கைச்சான்றிட்டனர்.
தமிழக முதல்வரை வாழ்த்தி சிறப்புத் தீர்மானம்:
கூட்டப்பொருட்கள் வாசிக்கத் துவங்குகையில், அண்மையில் தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெ.ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானத்தை மேசைப் பொருளாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாசித்தார்.
துணைத்தலைவர், பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு:
அவர் வாசித்துக்கொண்டிருந்தபோதே, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் எழுந்து, பின்வருமாறு அறிக்கையை வாசித்து, நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூற, அவரும், வருகைப் பதிவேட்டில் கைச்சான்றிட்ட உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களும் கூட்ட நிகழ்விடத்தை விட்டும் வெளியேறிச் சென்றனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்த அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!
நகர்மன்றத் தலைவர் பேட்டி:
பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். மீண்டும் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானம், நகருக்குச் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணிகளுக்கான கோரிக்கைகள் மீதான தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் பொறுப்பற்று வெளியேறிச் சென்றுவிட்டமையால், போதிய உறுப்பினர்கள் இல்லாத நிலையில் இக்கூட்டம் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
“மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏன் கூட்டம் நடத்தவில்லை?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“எந்த விபரமும் தெரிவிக்காமல் மொத்த செலவுத் தொகையை மட்டும் காண்பித்து, 2015-2016ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு நகர்மன்றத்தின் தீர்மானத்தை ஆணையர் கேட்டிருந்தார்... என்னென்ன செலவினங்கள் என்ற விபரம் தந்த பின், அதைக் கூட்டப்பொருளில் சேர்த்து ஒப்புதல் வழங்கலாம்... என்று நான் கூறியிருந்தேன். எனினும் நீண்ட நாட்களாக அது தரப்படவில்லை.
பின்னர், காயல்பட்டினத்தில் செய்ய வாய்ப்பேயில்லாத சில பணிகளுக்கெல்லாம் செலவுத்தொகையிட்டு பட்ஜெட்டை தயாரித்தளித்திருந்தார்... அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, இந்த ஊருக்கு எது தேவையோ அதை மட்டும் விபரத்தில் காண்பித்து மீண்டும் பட்ஜெட் தயாரித்துத் தருமாறு கேட்டிருந்தேன். ஆனால் இன்று வரை அவ்வாறு என்னிடம் தரப்படவில்லை.
குறைந்தபட்சம் (பின்வருமாறு) இப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களையாவது தாருங்கள்... என்று கேட்டும் இன்று வரை எனக்குத் தரப்படவில்லை.
ஒரு நகர்மன்றத் தலைவராக, இந்த நகராட்சியில் எத்தனை வங்கிக் கணக்குகள் எங்கெங்கு உள்ளன; அவற்றில் எவ்வளவு தொகை உள்ளன; செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகள் எவை; செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் எவை என்ற அடிப்படை. விபரம் கூட, நான் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் இன்று வரை எனக்குத் தரப்படவில்லை. இவ்வாறிருந்தால், எதை வைத்து எப்படி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது?
நேரில் பலமுறை கேட்டும் ஆணையர் இவ்விபரங்களைத் தராததால், பதிவுத் தபாலிலும், மின்னஞ்சல் மூலமும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் பலமுறை கேட்டும், இன்று வரை இந்த விபரம் எனக்குத் தரப்படவில்லை.
என் மேல் உள்ள குரோதங்களையெல்லாம் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, ஊர் நலன் கருதி உறுப்பினர்கள் இந்த விபரங்களையேனும் பெற்றுத் தரலாம்... ஆனால் அவர்களுக்கு இதிலெல்லாம் ஆர்வமே இல்லை...” என்று நகர்மன்றத் தலைவர் கூறினார்.
அரசுத் திட்டமான பயோகேஸ் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் நகர்மன்றத் தலைவர் தடுப்பதாக உறுப்பினர்கள் பலர் கூறும் குற்றச்சாட்டு குறித்து வினவியதற்கு,
90 லட்சம் ரூபாய் செலவில், தமிழக முதல்வர் காயல்பட்டினத்திற்கு அளித்துள்ள இத்திட்டம் மக்களுக்கு முழுப் பயனளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசுக்குச் சொந்தமான இடங்களுள் ஒன்றில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்... ஆனால், அதிகம் நீர் கட்டும் இடத்தில், அணுகுசாலை குறித்து இன்று வரை தெளிவான விளக்கம் இல்லாத ஓர் இடத்தில், இத்திட்டத்தைக் கொண்டு வந்து நாசமாக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்... இது ஒருபோதும் ஏற்க இயலாதது! மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு திட்டம் எந்த ஆய்வும் செய்யாமல் வீணடிக்கப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை...” என்றார்.
நகர்மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசியதன் அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!
உறுப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம்:
கூட்ட நிகழ்விடத்தை விட்டும் வெளியேறிய நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக நுழைவாயிலுக்கு முன் நின்றவாறு, தமிழக முதல்வருக்கு ‘வாழ்க’ முழக்கமும், நகர்மன்றத் தலைவருக்கு ‘ஒழிக’ முழக்கமும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
துணைத்தலைவர், உறுப்பினர் பேட்டி:
அவர்களின் சார்பில், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர், கூட்டம் துவங்குகையில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களைக் கூறினர்.
நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் செய்தியாளர்களிடம் பேசியதன் அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி செய்தியாளர்களிடம் பேசியதன் அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!
இதற்கு முன் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |