காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் - உள்ளூர் அளவிலான - யுனைட்டெட் ஃபுட்பால் லீக் (UFL) கால்பந்து சுற்றுப்போட்டிகள், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான பொன்விழா சுற்றுப்போட்டிகளைத் தொடர்ந்து வரும் மே மாதம் 25ஆம் நாளன்று துவங்கி, ஜூன் 01 (நேற்று) வரை நடைபெற்று முடிந்துள்ளது. கடந்தாண்டு 8 அணிகள் பங்கேற்றிருக்க, நடப்பாண்டு, பின்வருமாறு 10 அணிகள் பங்கேற்றன.
01.06.2015 திங்கட்கிழமையன்று (நேற்று) நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஹார்டி பாய்ஸ் அணியும், யுனைட்டெட் அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் துவக்கத்திலேயே யுனைட்டெட் அணி ஒரு கோல் அடிக்க, ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருக்கையில், ஹார்டி பாய்ஸ் அணி ஒரு கோல் அடிக்கவே, 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர் சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில், 4-3 என்ற கோல் கணக்கில் ஹார்டி பாய்ஸ் அணி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) செயலாளர் பேராசிரியர் கேஎம்.எஸ்.சதக்கு தம்பி ஆகியோரும், அவர்களுடன் - ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் பீ.எஸ்.எம்.இல்யாஸ், துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், கேப்டன் ஹபீப், துணைச் செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத், நகரப் பிரமுகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா ஆகியோரும் கலந்துகொண்டனர். இடைவேளையின்போது அவர்களுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
ஆட்டம் நிறைவடைந்த பின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலாமீ யாஸர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.ஏ.சல்மான் ஃபாரிஸ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில்,
வெற்றிபெற்ற ஹார்டி பாய்ஸ் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பை,
இரண்டாமிடம் பெற்ற யுனைட்டெட் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை,
அரையிறுதி வரை முன்னேறிய சில்வர் மைனர்ஸ், காயல் மான்யு ஆகிய அணிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இச்சுற்றுப்போட்டியில் தனித்திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் விழாவின்போது வழங்கப்பட்டன.
தகவல்கள் & படங்கள்:
S.H.ஹபீப்
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ்
நடப்பாண்டு UFL கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2014) UFL கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |