காயல்பட்டினம் கடற்கரையை - உலக காயல் நல மன்றங்களின் வழிகாட்டலில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் துப்புரவு செய்யும் திட்டம் நேற்று (ஆகஸ்ட் 01 சனிக்கிழமை) துவக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியில் போதிய அளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமையைக் காரணங்காட்டி, கடற்கரையில் துப்புரவு செய்யும் பணி என்றாவது ஒரு நாளில் மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்களும் தம்மிடமுள்ள குப்பைகளை அங்கங்கேயே விட்டுச் செல்வதால், கடற்கரையின் மணற்பரப்பு முழுக்கவும் குப்பைகள் தேங்கி, பார்ப்பதற்கு மிகவும் அலங்கோலமாகக் காட்சியளித்தது.
கடற்கரையில் அன்றாடம் வந்து செல்லும் சமூக ஆர்வலர்களிடம், “என்னப்பா கடற்கரை இப்படி குப்பையாகக் கிடக்குது...? கவனிக்க மாட்டீங்களாப்பா...?” என்று “மிகுந்த அக்கறை”யுடன் கேட்கும் பொதுமக்களும், அங்கிருந்து எழுந்து செல்லும்போது, தாம் வாங்கி உட்கொண்ட தின்பண்டங்களைத் தாங்கிய காகிதத் தட்டுக்களையும், தேனீர் குவளைகளையும் அங்கங்கேயே விட்டுச் செல்வது அன்றாடம் எல்லா நேரமும் காணக்கிடைக்கும் காட்சிகள்.
இவ்வாறிருக்க, இனியும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு, ஊரை நாற விடக்கூடாது என்று கருதிய - ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றம், நகராட்சியுடன் இணைந்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை முன்வைத்தது. சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நல மன்றம், கத்தர் காயல் நல மன்றம், தாய்லாந்து காயல் நல மன்றம் ஆகிய மன்றங்கள் துவக்கமாக அத்திட்டத்தின் கீழ் இணைய முன்வந்ததையடுத்து, 19.07.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 19.30 மணியளவில், துபை காயல் நல மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஒருங்கிணைப்பில், அவரது இல்லத்தில், இம்மன்றங்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துபை காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரிவின் தலைவர் ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீம், அதன் மூத்த செயற்குழு உறுப்பினர் துணி உமர், அதன் பிரதிநிதி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், தம்மாம் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல், அதன் முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ், துணைத்தலைவர் எம்.ஐ.மெஹர் அலீ, அதன் அங்கத்தினரான ஷாதுலீ, என்.ஏ.முஹம்மத் நூஹ், பாங்காக் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹனீஃபா, ம.ஜஹாங்கீர், காயல்பட்டினம் நகரின் சமூக ஆர்வலர்களான எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம், எஸ்.கே.ஸாலிஹ், எம்.ஒய்.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் நகராட்சியின் ஒத்துழைப்புடன் - கடற்கரையை, மாத ஊதிய அடிப்படையில் - சீருடையணிந்த 3 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு அன்றாடம் துப்புரவு செய்வதென்றும், கடற்கரை மணற்பரப்பில் வணிகம் செய்பவர்களால் அங்கு குப்பைகள் சேராமலும் - மணற்பரப்பு மாசு படாமலும் காப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக பின்வருமாறு பிரசுரம் அச்சிடப்பட்டு, 31.07.2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் படி, கடற்கரை துப்புரவுத் திட்ட துவக்க நிகழ்ச்சி, கடற்கரை நுழைவாயில் அருகில், 01.08.2015 சனிக்கிழமையன்று 17.30 மணியளவில் நடைபெற்றது.
சமூக ஆர்வலர் ஏ.எம்.தவ்ஃபீக் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையுரையாற்றினார்.
வெளிநாடுகளில் வசிப்போர், அங்கு தம் கைகளிலிருக்கும் குப்பைகளைக் கண்ட இடங்களில் எறியாமல், தம் வசமே வைத்துக்கொண்டு, குப்பைத் தொட்டியைத் தேடிச் சென்று போடும் நிலை உள்ளபோதிலும், அதே மக்கள் இங்கு வந்ததும் தம் குணத்தை மாற்றிக்கொள்ளும் நிலை வருந்தத்தக்கது என்றார் அவர்.
நகராட்சியின் இயலாமை, பொதுமக்களின் அலட்சியம் ஆகிய காரணங்களால் கடற்கரையில் குப்பைகள் தேங்கி அலங்கோலமாகக் காட்சியளிக்கும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து விருந்தாளிகளைக் கடற்கரைக்கு அழைத்து வரவே வெட்கமாக உள்ளதாகக் கூறிய அவர், இனியும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு வாளாவிருக்காமல், களத்தில் இறங்க வேண்டும் என்று கருதியே துபை காயல் நல மன்றம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், சில மன்றங்கள் இணைந்து செயல்படுவது போல, இதர அமைப்புகளும் இத்திட்டத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ராவன்னா அபுல்ஹஸன், விளக்கு தாவூத் ஆகியோர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
தம்மாம் காயல் நல மன்ற தலைவர் எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக், அதன் துணைத்தலைவர் சாளை எஸ்.ஜியாஉத்தீன், முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய எஸ்.கே.ஸாலிஹ் திட்ட விளக்கவுரையாற்றினார்.
துபை, தம்மாம், கத்தர், தாய்லாந்து காயல் நல மன்றங்களின் வழிகாட்டலில், "CLEAN KAYAL - தூய்மை காயல்” எனும் தலைப்பின் கீழ் காயல்பட்டினம் கடற்கரையில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறினார்.
சீருடையணிந்த 3 துப்புரவுப் பணியாளர்கள் அன்றாடம் குப்பைகளைச் சேகரிப்பர் என்றும், பொதுமக்கள் வசதிக்காக, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே போதிய அளவுக்கு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவுள்ளதாகவும், வணிகர்கள் விறகு வைத்து அடுப்பு எரிப்பது தடுக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரை சுற்றுச்சுவருக்கு வெளியிலேயே அவர்கள் தமது வணிகத்தைச் செய்வர் என்றும், இதற்கு கண்காணிப்பாளர்களாக எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஜஹாங்கீர், எம்.ஏ.இப்றாஹீம், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இருப்பர் என்றும், நகராட்சி நிர்வாக ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதிகாரப்பூர்வமாக அவர்களின் கண்காணிப்பும் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் பேசினார்.
நகராட்சியில் போதிய அளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் அரசால் நியமிக்கப்படாததாலேயே - நகரையும், கடற்கரையையும் துப்புரவு செய்யும் பணியில் அவதிகள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என்றும் அவர் புகழ்ந்து பேசினார்.
இத்திட்டம் தொய்வின்றி செயல்படுத்தப்பட, காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் தன்னாலான அத்தனை ஒத்துழைப்புகளையும் செய்து தர ஆயத்தமாக உள்ளதாகக் கூறிய அவர், இத்திட்டத்தை முன்னெடுத்து செய்யும் தன்னார்வ அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் நகராட்சியின் சார்பில் நன்றி கூறினார்.
தனது விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையிலும், இந்நிகழ்ச்சிக்கு அழைத்தவுடன் வருகை தந்து உரையாற்றியமைக்காக அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கடற்கரை துப்புரவுப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள சீருடையணிந்த 3 துப்புரவுப் பணியாளர்களும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம், குப்பை சேகரிக்கும் தொட்டிகளை, துபை காயல் நல மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் துணி உமர், தம்மாம் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ், காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
துப்புரவுப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், துபை காயல் நல மன்றத் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ ஊக்கத்தொகையை - அவர்களின் பொறுப்பாளர் எம்.ஜஹாங்கீரிடம் வழங்கினார்.
இத்தி்ட்டத்திற்காக, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் போதுமான அளவுக்கு குப்பை சேகரிக்கும் ப்ளாஸ்டிக் வாளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் தேவைப்பட்டாலும் வழங்கப்படும் என்றும், கடற்கரை சுகாதாரப் பணிகளுக்காக, “தூய்மை காயல்” குழுமம் கேட்கும் அனைத்து வசதிகளும் நகராட்சியின் சக்திக்குட்பட்ட அளவுக்கு செய்து தரப்படும் என்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் - பொதுமக்களும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
“தூய்மை காயல்” குழுமத்திற்காக...
எஸ்.கே.ஸாலிஹ்
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |