தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் ஸஹர் கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் கடற்கரை துப்புரவு செயல்திட்டத்திற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட வருடாந்திர 3ஆவது ஸஹர் கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் கடற்கரை துப்புரவு செயல்திட்டத்திற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டம், ரமழான் 17ஆம் நாளன்று (04.07.2015) 23.00 மணியளவில், பாங்காக்கிலுள்ள பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில், மன்றத் தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் ஹஸன் (சன் மூன் ஸ்டார் நிறுவனம்), குளவி புகாரீ (கல்கத்தா) ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். உறுப்பினர் இப்றாஹீம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்நலன் குறித்து விவாதிக்கப்பட்டு, நிறைவில் - கடற்கரை துப்புரவு செயல்திட்டத்திற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
பாங்காக் நகருக்குப் புதிதாக வந்துள்ள - காயல்பட்டினம் கோமான் தெருவைச் சேர்ந்த அர்ஷத், கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த பாதுல் அஸ்ஹப் ஆகியோர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக இணைந்திருந்தனர். அவர்கள் இக்கூட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டனர்.
‘ஹோலி ஜெம் ஹவுஸ்’ கோனா இப்றாஹீம் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பல வருடங்களாகப் பிரிந்திருந்த நண்பர்களான - மன்ற உறுப்பினர்கள் தீவுத்தெரு சதக் - ஆறாம்பள்ளித் தெரு எம்.பி.ஷேக் ஆகியோர் இக்கூட்டத்தின் வாயிலாக கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமது உறவைப் புதுப்பித்துக்கொண்டனர்.
ஸஹர் உணவு - காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாட்டுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
வழமை போல இவ்வாண்டும் - தக்வா அங்கத்தினரும் அங்கம் வகிக்கும் பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கம் சார்பாக காயல்பட்டினம் பாரம்பரிய கறிகஞ்சி - கடந்த ரமழான் மாதம் முழுவதும், பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது 600 பேருக்கு அன்றாடம் பரிமாறப்பட்டது. ரமழான் கடைசி பத்து நாட்களில் கியாமுல் லைல் தொழுகை நடத்தப்பட்டு, நிறைவில் அன்றாடம் தொழுகையில் பங்கேற்ற சுமார் 800 பேருக்கு ஸஹர் உணவு பரிமாறப்பட்டது.
இதற்காக, காயல்பட்டினத்திலிருந்து தருவை செய்மீன், ஸாலிஹ், நஸ்ருத்தீன் ஆகிய சமையல் கலை வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
உலகில், காயல்பட்டினம் பாரம்பரிய கறிகஞ்சியுடன் கூடிய இஃப்தார் நிகழ்ச்சியில், ஹாங்காங்கையடுத்து அதிகம் பேர் பங்கேற்பது பாங்காக் நகரில் நடைபெறும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
Soccer புகாரீ
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |