இந்திய நாட்டின் தலைசிறந்த விஞ்ஞாணியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய மாணவர்களின் தலைசிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம், 27.07.2015 திங்கட்கிழமையன்று 19.30 மணியளவில் காலமானார். அவரது உடல், 30.07.2015 வியாழக்கிழமையன்று - அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் - இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி ஆகிய ஜும்ஆ பள்ளிகளில் ஙாயிப் ஜனாஸா தொழுகை (மறைந்தவரின் உடல் இல்லாத இடங்களில் நடத்தப்படும் ஜனாஸா - பிரார்த்தனைத் தொழுகை) நடத்தப்பட்டது.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில், அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ தொழுகையை வழிநடத்தினார். முன்னதாக அவர் நிகழ்த்திய உரையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜெ.அப்துல் கலாமின் வாழ்க்கையிலுள்ள நல்ல அம்சங்களை நினைவுகூர்ந்து, புகழ்ந்து பேசினார்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மனித சமூகத்திடம் தானும் கடைப்பிடித்து, மற்றவர்களையும் கடைப்பிடிக்கத் தூண்டிய நேர்மை, உண்மை, நீதி தவறாமை, பிறரைப் பாதிக்கும் சுயநலமின்மை, சமய நல்லிணக்கம், மனிதநேயம் உள்ளிட்டவற்றை தன் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் கலாம் அவர்கள் கடைப்பிடித்ததாக வரலாற்று நிகழ்வுகளுடன் விளக்கிப் பேசினார்.
பள்ளிவாசல்களில் அவர் மக்களோடு மக்களாக நின்று தொழுததையும் குறிப்பிட்டுப் பேசிய அவர், முஸ்லிம் சமூகம் மீது திட்டமிட்டு வெறுப்பேற்படுத்தப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், அந்த சமுதாயத்தில் ஒருவராக இருந்து, நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பை வகித்து, அனைத்து சமுதாயத்தவர்களாலும் விரும்பப்பட்ட நிலையில் வாழ்ந்து மறைந்துள்ளது, முஸ்லிம்கள் மீதான தவறான பரப்புரைகளுக்கு சரியான மறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறினார். இப்படி அவர் வாழ்ந்திருக்க, “இறந்தவர்களின் நல்லவற்றையே நினைவுகூருங்கள்” என்ற கருத்திலான நபிகள் நாயகத்தின் வழிகாட்டலுக்கு மாற்றமாக, அவரது சில செயல்பாடுகளை மட்டும் மேற்கோள் காட்டி சர்ச்சை செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில், மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ ஙாயிப் ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார்.
தகவல்:
காரீ A.T.முஹம்மத் அப்துல் காதிர் (AT ஹாஜியார்) - (மகுதூம் ஜும்ஆ பள்ளி)
ஹாஜி வாவு ஸித்தீக் - (பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி)
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|