காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 03ஆவது வார்டு, பிலால்நகர், நெய்னார் தெருவிலுள்ள கதிஜா நாயகி பெண்கள் தைக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் டி.சி.டபிள்யு. நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், இதையடுத்து டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பில் சுமார் இரண்டு லட்சம் செலவில் தளம் அமைத்தல் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
திறப்பு விழா நிகழ்ச்சியில், காயல்பட்டினம் பிலால் பள்ளி நிர்வாகி முஸ்தஃபாவும் கலந்துகொண்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, முஸ்தஃபா என்ற குளம் முஸ்தஃபா கமால் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்துள்ளதாவது:-
தைக்காவில் நடந்த நிகழ்ச்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நான் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுமில்லை. இன்று காலையில் செய்தித்தாளில் படித்தே நான் செய்தியை அறிந்துகொண்டேன்.
இது, முழுக்க முழுக்க 03ஆவது வார்டு கவுன்சிலர் சாரா உம்மாள் மற்றும் அவரது கணவரின் வேலையாகும். பிலால் பள்ளி அருகில்தான் எனது வீடு உள்ளது. எனவே, அந்த ஏரியாவில் இருக்கும் சில ஆட்களைப் பார்த்து பெயர்களை இவர்களாகவோ போட்டுக்கொண்டனர்.
இன்று காலை முதல் எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் தாங்க முடியாத அளவில் உள்ளது. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என - கேட்போரிடம் தெரிவித்து விடுமாறு, நான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கும் தகவல் தெரிவித்துவிட்டேன்.
இத்தகவலை தங்களது இணையதளத்திலும் தெளிவாக வெளியிட்டு, பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்...
இவ்வாறு அவர் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்துள்ளார். |