காயல்பட்டினம் நகருக்கான - ஐவேளை தொழுகை நேர அட்டவணையைக் கொண்ட கைபேசி செயலி (Android Mobile Phone Application), காயல்பட்டினம் குத்புஸ் ஸமான் குழுமத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா, 08.11.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்தில் நடைபெற்றது.
1986ஆம் ஆண்டு, காயல்பட்டினத்திற்கான ஒருங்கிணைந்த தொழுகை கால அட்டவணை அறிமுகப்படுத்தப்படுவதற்குத் தேவையான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்த - எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (TM), நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன், எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், கே.எம்.செய்யித் அஹ்மத், மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கைபேசி செயலியை உருவாக்கிய குத்புஸ் ஸமான் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினத்திற்கான ஒருங்கிணைந்த - ஐவேளை தொழுகை கால அட்டவணை உருவான காலகட்டத்தில், ஊரில் நடைபெற்ற சர்ச்சைகள் குறித்தும், அந்த சர்ச்சைகளைக் களைந்து - ஒருங்கிணைந்த கால அட்டவணையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும், முன்னிலை வகித்த - குருவித்துறைப்பள்ளியின் இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் சுருக்கவுரையாற்றினார்.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி, மஹ்ழரா அரபிக் கல்லூரி ஆகியவற்றின் உலமாக்களை (மார்க்க அறிஞர்களை) ஒருங்கிணைத்து, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் - ஒருங்கிணைந்த தொழுகை கால அட்டவணை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நடைபெற்ற கூட்டத்தில் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள், நிறைவில் தொழுகை கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்ட விபரம் ஆகியன குறித்து, முன்னிலை வகித்த - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப்; முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ விளக்கிப் பேசினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய – குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், “காயல்பட்டினம் நகருக்கான ஐவேளை தொழுகை காலங்காட்டும் Mobile Phone Applicationஐ வெளியிட, முன்னிலை வகித்தோர், வெளியீட்டுத் திரையைப் பெற்றுக்கொண்டனர்.
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலியில் (Application) இடம்பெற்றுள்ள வசதிகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து, நிகழ்ச்சி நெறியாளர் விளக்கிப் பேசினார்.
1986ஆம் ஆண்டில் - நகருக்கான ஐவேளை தொழுகை கால அட்டவணை உருவாக முன்முயற்சிகளை மேற்கொண்ட - இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF) அப்போதைய செயலாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நன்றி கூற, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வரும் - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
விழாவில் முன்னிலை வகிக்க அழைக்கப்பட்டிருந்த - ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, உடல் நலன் குன்றியுள்ளமை காரணமாக வர இயலாமற்போன தகவல் விழாவின்போது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் நலனுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில், ஹாஃபிழ் எஸ்.எம்.ஐ.ஷாஹுல் ஹமீத், ஜாஃபர் ஸுலைமான், கம்பல்பக்ஷ் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ஈஸா ஃகைரீ, ஐ.எல்.முஹ்ஸின் காமில் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
விரும்பியோருக்கு, விழா நிகழ்விடத்திலேயே புதிய செயலி - அவரவர் கைபேசியில் பதிவேற்றிக் கொடுக்கப்பட்டதும், தமது Android கைபேசியில், இந்தப் புதிய செயலியை, Google Playstoreஇல் - kayal prayer times என்று தட்டச்சு செய்து, (https://play.google.com/store/apps/details?id=com.quthubuzaman.kayalPrayerTimings) செயலியைப் பதிவிறக்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |