சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மூன்று பேச்சுப் போட்டிகளில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஏ.எச்.செய்யித் உமர் ஃபாரூக் - ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் கவுரவ ஆசிரியை ஏ.சித்தீ லரீஃபா ஸித்தீக்கிய்யா தம்பதியின் மகள் எஸ்.ஓ.எஃப்.ஆயிஷா நுஸைரா. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள க்ரஸென்ட் மகளிர் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடங்களைப் பெறுவதை வழமையாகக் கொண்டவர்.
நாகூர் க்ரஸென்ட் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் நாகூரில் 17.10.2015 அன்று நடத்தப்பட்ட – 15 பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவியர் பங்கேற்ற பேச்சுப் போட்டியில், “பெண் நலம் பேணுவோம்” எனும் தலைப்பில் உரையாற்றி, முதற்பரிசை வென்றுள்ளார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் மாணவர் பிரிவான இஸ்லாமிய மாணவர் அமைப்பின் (Students Islamic Organization - SIO) சார்பில், கடந்த 20.10.2015 அன்று - Scholastic ’15 எனும் தலைப்பில் நடைபெற்ற பல்சுவைப் போட்டிகளில், பேச்சுப் போட்டியில் பங்கேற்று, “மதுவிலக்கு” எனும் தலைப்பில் உரையாற்றி, பங்கேற்ற 25 மாணவியருள் முதலிடத்தை வென்றுள்ளார்.
அதுபோல, சென்னை வண்டலூர் க்ரஸென்ட் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில், 29.10.2015 அன்று நடத்தப்பட்ட - இமாம் மாப்பிள்ளை ஆலிம் பேச்சுப் போட்டியிலும் இம்மாணவி பங்கேற்று, “குற்றங்கள் குறைய அவசியமானது கடுமையான தண்டனைகளா அல்லது கருணையான உள்ளங்களா?” எனும் தலைப்பில் உரையாற்றி, 17 பள்ளிக்கூடங்களின் மாணவ-மாணவியருள் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவருக்கு பயனுள்ள தலைப்புகளில் நூல்களும், கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இம்மாணவி, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ - ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் கண்காணிப்பாளர் செய்யித் கதீஜா ஆகியோரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 17:31 / 11.11.2015] |