ரூபாய் 7.75 கோடி செலவில் ஆறுமுகநேரியில் காவலர் குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
ஆறுமுகநேரியில் காவலர் குடியிருப்பு அமைப்பு பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தில் காவல்துறைக்கு சொந்தமான 1.55 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு காவலர் குடியிருப்பு அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
ஆறுமுகநேரி போலீஸ் சரகத்தில் காயல்பட்டினம் நகராட்சி, ஆறுமுகநேரி பேரூராட்சி, மூலக்கரை ஊராட்சி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக ஆறுமுகநேரி காவல் நிலையம் 80 போலீசாரைக் கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆறுமுகநேரியில் போலீஸ் குடியிருப்பு கட்ட நிதி ஒதிக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி இங்கு காவலர் குடியிருப்பு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 7.75 கோடி ரூபாய் மதிப்பில் மாடி வீடுகளைக் கொண்டதாக இந்த குடியிருப்பு அமைக்கப்படுகிறது. 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 73 போலீசார்களுக்கு என மொத்தம் 79 வீடுகள் கட்டப்படுகின்றன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா பெருமாள்புரம் நிலத்தில் நடைபெற்றது. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் புதிய கட்டிடப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்.
சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, தனிப்பிரிவு ஏட்டு ரகு, காவலர் வீட்டுவசதி வாரிய பொறியாளர் சரோஜா மற்றும் ஓப்பந்தக்காரர் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ச.பார்த்திபன் |