எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நவம்பர் 29 (நேற்று) அன்று மாலை காயல்பட்டினம் பிரதான சாலையில் அமைந்துள்ள துஃபைல் வணிக வளாக அரங்கில், “ லீலாவதி “ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
திரையிடலுக்கு பிறகு எழுத்தாளரும், எழுத்து மேடை மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாளை பஷீர் - லீலாவதி ஆவணப்படத்தின் சுருக்கமான கருவையும் அதன் தற்போதைய நிலவரத்தையும் பற்றி பேசினார். அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:
இன்றிலிருந்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வின் பதிவுதான் இந்த ஆவணப்படம்.
மதுரையில் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் சௌராஷ்டிரா மொழி பேசும் சிறுபான்மை நெசவு சமூகத்தில் ஓர் எளிய குடும்பத்தில்
பிறந்தவர் லீலாவதி.
வறுமை காரணமாக பத்தாவது வரை மட்டுமே படித்தவர் இவர். தன் இருபதாவது வயதில் ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினரான குப்புசாமி
என்பவரைக் கைப்பிடித்தார்.
சராசரி குடும்ப பெண்மணியாக இருந்த லீலாவதியை மெல்ல பொதுவுடைமைப் பாதைக்குத் திருப்பினார் கணவர். அன்றாட வாழ்வின் தடத்திலிருந்து
புயலுக்கு எதிராக புறப்பட்ட சிறு தோணி போல பெருங்கடலில் அவர்களின் வாழ்க்கை நீந்தத் தொடங்கியது.
கணவரின் வழிகாட்டலால் கைநெசவுத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்றவற்றின் உறுப்பினராக மாறிய லீலாவதி, 1987-ல்
சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் ஆனார். அதன்பின் மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்,
மாவட்டப் பொருளாளர் என பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.
குப்புசாமி – லீலாவதி இணையருக்கு கலாவதி, துர்கா, டான்யா என மூன்று மகள்கள். மதுரை வில்லாபுரத்தில் 32 ஒண்டுக்குடித்தனங்கள் கொண்ட
வரிசைகுடியிருப்பில் (லைன் வீடு) ஒரே ஓர் அறையில் இந்த ஐவரைக் கொண்ட குடும்பம் வாழ்ந்தது. அறையின் நடுவே நெசவுத்தறி. அதைச் சுற்றி
பெட்டி படுக்கைகள், அடுப்பு, நான்கு பனங்கட்டை துண்டுகளினால் ஆன அலமாரி. அதில் அடுக்கப்பட்டுள்ள சமையல் பாத்திரங்கள், இரவில்
தறிக்குக் கீழே தூக்கம். லீலாவதி நெசவு செய்வார். குப்புசாமி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
லீலாவதி உள்ளிட்டோர் வசித்து வந்த இந்த குடியிருப்பில் இரவு படுக்கை மட்டுதான் நான்கு சுவர்களுக்குள் இருக்கும். அன்றாட வாழ்வின் மற்ற
செயல்பாடுகள் அனைத்தும் இரண்டு வரிசை வீடுகளுக்கு இடையே உள்ள நடைபாதையில்தான் நடைபெறும். இவர்களின் இந்த வாழ்க்கை முறையை
நாம் இன்று வாழும் வசதியான வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
இந்த நெருக்கடி மிகுந்த வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் இயல்பான குடும்ப வாழ்வின் மன நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக குப்புசாமி –
லீலா இணையர் தங்களது வாழ்க்கையை வாழ்ந்தனர்.
பொதுமக்களுக்கான பிரச்னைகளில் தலைமை ஏற்று போராடினாலும் கூட அதை முன் வைத்து தனக்கான எந்த முன்னுரிமையையும்
தனிச்சிறப்பையும் கோராமல் வாழ்ந்து நிறைந்தவர் . தனக்கு பரிசாக வந்த புடவையை கூட அன்புடன் மறுத்தவர். இத்தனைக்கும் உடுத்துவதற்கு
நல்லதொரு சேலை இல்லாத வாழ்க்கை அவருடையது. மக்களோடு மக்களாக ஒரு மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் லீலாவதி.
இந்த நிலையில்தான் வந்தது மதுரை மாநகராட்சித் தேர்தல். வில்லாபுரம் பகுதி வேட்பாளராக லீலாவதியை கட்சி நிறுத்தியது. மக்கள் செல்வாக்கால்
59-வது நகர் வட்டத்தில் (வார்டு) அமோக வெற்றி பெற்றார் லீலாவதி.
வில்லாபுரம் பகுதிக்கு எப்படியாவது குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று
அலுவலர்களுடன் மல்லுக்கட்டினார் லீலாவதி. அந்த நகர்வட்டத்தில் 58 இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கப்பட வேண்டும் என்றார். இது அந்தப்
பகுதியில் வண்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்த சிலரை கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.
அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. அவற்றை காலில் மிதிபடும் குப்பை காகிதம் போல ஒதுக்கி விட்டு தன் பணியில் தளராமல் செயல்பட்டார் .
வன்முறைக்கும் மிரட்டலுக்கும் விடையாக அவர் தனது சட்ட ரீதியான சன நாயக வழி போராட்ட முறை வாழ்வைத்தான் முன் வைத்தார். ஆனால்
அவரது காலைச்சுற்றியது குப்பைக்காகிதமல்ல கொடிய நச்சு பாம்புதான் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது.
1997-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அன்று காலை கொலைகாரக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு அரிவாள்களால் சரமாரியாக வெட்டியது.
நிகழ்விடத்திலேயே தான் வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவை எட்டினார் லீலாவதி.
அவரின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து கட்சியினரும் எல்லா சாதி, சமய பிரிவைச் சார்ந்த மக்களும் பங்கெடுத்தனர். இந்த இடத்தில்தான்
லீலாவதியின் வாழ்வு அவரின் வாழ்நாளையும் தாண்டிய பெரு வடிவம் எடுத்தது.
லீலாவதி என்ற பெண்ணிடத்தில் தங்கள் வீரத்தைக்காட்டிய மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகரில் வசிக்கும். தி.மு.க.வைச் சேர்ந்த முத்துராமலிங்கம்,
நல்லமருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகிய குற்றவாளிகள் கைதானார்கள். இவர்களுக்கு வாழ்நாள்
சிறைத் தண்டனை கிடைத்தது. இதில் முத்துராமலிங்கம் இறந்து விட்டார். பாம்பு முருகன் விடுதலையாகிவிட்டார்.
இந்த நிலையில்தான் கடந்த 2008 செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நன்னடத்தை விதிகளின்படி நல்ல மருது, சோங்கு
முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அன்றைய தி.மு.க. ஆட்சியினால் விடுதலை செய்யப்பட்டனர். சிறை விடுப்பில் சென்றபோது விதிகளை
மீறியதால் அண்ணாதுரை மட்டும் விடுதலை செய்யப்படவில்லை.
இதில் நன்னடத்தை விதிகளை மீறிய நல்லமருது இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளாட்சி
அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அதன்படி பொறுப்புக்கு வந்தவர்களில் ஒருவர் லீலாவதி. அப்படி பொறுப்புக்கு
வந்து இந்திய அளவில் முதலில் பலியானவரும் அவர்தான்.
அவர் தி.மு.கவைச் சார்ந்த கும்பலால் கொல்லப்பட்டிருந்தாலும் அவர் எதிர்த்து வந்த சமூக பகை கும்பலில் அ.தி.மு.கவினரும் அடக்கம். அத்துடன்
லீலாவதி சிறுபான்மை மொழி பேசும் சௌராஷ்டிரா சமூகத்தை சார்ந்தவர். ஆனால் அவர் எதிர்த்த சமூக பகை கும்பலில் உள்ள அனைவரும்
வன்முறையை வழிமுறையாக கொண்ட ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள்.
கொள்கை வழி வாழும் கணவர், நெஞ்சுரத்தை ஊட்டிய பொதுவுடைமை கோட்பாடு, எளிமையான வாழ்க்கை, சக மனிதர்களின் அன்பும் நம்பிக்கையும்
என்பனவற்றின் சரிவிகித கலவைதான் லீலாவதி.
நமதூர் தொடங்கி தேசீய மட்டம் வரை ஊழலுக்கு எதிரான வெகு மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. அதையொட்டித்தான் இந்த
ஆவணப்படத்தை இன்று இங்கு திரையிட்டுள்ளோம்.
‘ஊழலை எல்லாம் ஒழிக்க முடியாது “என்கின்ற எண்ணம் பொது மக்களின் புத்தியில் படிந்து போய் உள்ளது. இவ்வாறு நாம் பேசுவதற்கு காரணம்
நம்முடைய வசதியான வாழ்க்கைதான். ஊழலை முற்றிலும் ஒழித்து விடலாம் என யாரும் சொல்லவில்லை. மாறாக அதன் அளவையும்
தாக்கத்தையும் வெகுவாக குறைக்கலாம் என்றுதான் சொல்லப்படுகின்றது.
“ ஊழலை எல்லாம் ஒழிக்க முடியாது “ என்கின்ற நமது அலட்சிய மன நிலையின் காரணமாக எத்தனையோ பொருளாதார வசதியற்ற வறிய எளிய
மக்களின் வாழ்க்கையை நாம் சிக்கலுக்குள் தள்ளி விடும் குற்றத்தையும் செய்கின்றோம்.நமது இந்த அலட்சிய மன நிலையை விசாரணைக்கு
உட்படுத்தவே இந்த லீலாவதி ஆவணப்படத்தை இங்கு திரையிட்டுள்ளோம்.
இவ்வாறு சாளை பஷீர் பேசினார்.
|