அபூதபீ காயல் நல மன்றம், இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்புகள் இணைந்து, “தடைகளைத் தாண்டி...” எனும் தலைப்பில், பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை, இம்மாதம் 09ஆம் நாளன்று நடத்தவுள்ளன. இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இவ்வமைப்புகளின் சார்பில், இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்தில் காணப்படும் தடைகளைக் களைந்தெறிவதற்காக - நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கல்விச் சங்கம் கலந்தாய்வுக் கூட்டத்தை 12.12.2015. சனிக்கிழமையன்று நடத்தியது.
இது தொடர்பாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியே கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திடுவதென - அக்கூட்டத்தின் நிறைவில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள செயல்திட்டத்தின் படி, பெற்றோருக்கான மாபெரும் கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம், 09.01.2016. சனிக்கிழமையன்று ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம் வருமாறு:-
அன்பார்ந்த பெற்றோர்களே...! உங்கள் அருமைப் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காணவும், அவர்களது வருங்கால வாழ்வு ஒளிமயமாகவும் நீங்கள் யாவரும் படும் பாட்டை நாங்கள் நன்கு நன்கறிவோம்.
அத்தகைய தடைகளைத் தாண்டி நீங்கள் வெற்றி நிலையை அடைந்து, உங்கள் மக்களை முன்னேற்றம் கண்டவர்களாகக் காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், தாங்கள் யாவரும் தவறாமல் பங்கேற்றுப் பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வு நாளன்று ஊரிலில்லாத அல்லது வர இயலாத நிலையிலுள்ள பெற்றோர், இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, உங்கள் சார்பில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவரையேனும் அனுப்பி வைத்திடவும், இச்செய்தியைப் பார்க்கும் அனைவரும், உங்களுக்கு அறிமுகமான - ஊரில் பயிலும் மாணவ-மாணவியரின் பெற்றோருக்கு இத்தகவலை உடனடியாகத் தெரிவித்து, அவர்களை இக்கருத்தரங்கில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம்வல்ல இறைவன் நம் யாவரின் உளத்தூய்மையான நற்கருமங்களையும் தனதருளால் அங்கீகரித்து, அதன் முழுப் பலனையும் நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |