இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் மீலாது விழாக்குழு சார்பில் ஆண்டுதோறும் மீலாத் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு விழா 24.12.2015. வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அன்று 07.30 மணியளவில், ஃபர்ஸன்ஜி மவ்லித் மஹ்ழரா வளாகத்தில் ஓதப்பட்டது.
16.30 மணிக்கு மீலாது பெருவிழா சிறப்புக் கூட்டம் மஹ்ழராவுக்கு வெளியே - அம்பல மரைக்காயர் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்றது.
மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓத, அதனைத் தொடர்ந்து ‘அஹ்மதுல்லாஹ்’ பைத் அனைவராலும் நின்று பாடப்பட்டது. மஹ்ழரா செயற்குழு உறுப்பினர் கே.எம்.டீ.சுலைமான் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வரும் - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ தலைமையுரையாற்றினார். அத்துடன் மாலை அமர்வு நிறைவுற்றது.
இரவு அமர்வு, 18.45 மணிக்கு, மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் கஸீதத்துல் முஹம்மதிய்யா உள்ளிட்ட சன்மார்க்கப் பாடல்களுடன் துவங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - கோயமுத்தூர் கரும்புக் கடை ஜும்ஆ பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஏ.அப்துல் அஜீஸ் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
on stg
இந்த மீலாத் விழாவை முன்னிட்டு, முந்தைய நாட்களில் நடைபெற்ற மகளிருக்கான பேச்சுப்போட்டி, மகளிருக்கான திருக்குர்ஆன் மனனப் போட்டி, மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டி, மஹ்ழரா அரபிக்கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, மஹ்ழரா மீலாதுர் ரஸூல் கமிட்டியின் சார்பில், அதன் தலைவர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
மஹ்ழரா செயற்குழு உறுப்பினர்களான எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஹாஃபிழ் ஊண்டி இசட்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் நெறிப்படுத்தினார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் ‘தபர்ருக்’ எனும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
மஹ்ழரா மீலாத் விழாவை முன்னிட்டு, நிகழ்வு நாளன்று - காயல்பட்டினம் மஹப்பத்திர் ரஸூல் மீலாத் குழுவினர் ஸெய்யிதினா பிலால் பள்ளியிலிருந்து மஹ்ழரா வரை பேரணியாகச் சென்று, பிரார்த்தனை செய்தனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
மஹ்ழரா மீலாதுர் ரஸூல் கமிட்டி சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட மீலாத் விழா குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |