காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றம் குறித்து, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வின் நிறைவில், பெற்றோர் - ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தலைமையாசிரியர்களுடன் கலந்தாய்வு:
காயல்பட்டினம் நகரின் மாணவ-மாணவியரது கல்வி முன்னேற்றம் குறித்தும், அதில் காணப்படும் தடங்கல்களைக் களைவது குறித்தும் விரிவாக விவாதிப்பதற்காக, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட வேண்டும் என - இக்ராஃ தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் உள்ளிட்ட கத்தர் காயல் நல மன்றத்தினரின் தூண்டுதலைக் கருத்திற்கொண்டு, இக்ராஃ செயற்குழுவில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தலைமையாசிரியர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சியை நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், கடந்த 12.12.2015. சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவிலுள்ள, இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
பங்கேற்றோர்:
எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன், அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியை கலா ஆகியோரும்,
இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் மூத்த செயற்குழு உறுப்பினர்களான - பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான், எம்.ஏ.எஸ்.ஜரூக்,செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூத், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்முறை:
இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து, தலைமை தாங்கிய - இக்ராஃவின் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் ‘ஆசிரியர்’ எம்.ஏ.புகாரீ அறிமுகவுரையாற்றினார்.
கூட்டப் பொருட்கள்:
>>> 10 ஆம் , 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளை முன்னிட்டு மாணவ-மாணவியருக்கு எது மாதிரியான வழிகாட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்? எப்போது நடத்தலாம்?
>>> பொதுவாக மாணவ-மாணவியருக்கு எந்த மாதிரியான Career Guidance Programme தேவைப்படுகிறது? அதை எப்போதெல்லாம் நடத்தலாம்?
>>> ஆங்கில பேச்சுப் பயிற்சியை (Spoken English) எந்த விதத்தில் எல்லாம் நடைமுறைப் படுத்தலாம்? எந்த வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கலாம்?
>>> IAS, IPS, IFS போன்ற அரசு உயர் நிர்வாகப் பதவிகளுக்கான படிப்புகளுக்கு எப்படிப்பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, எந்த வகையில் அவர்களை ஆயத்தம் செய்யலாம்? இத்துறைகள் குறித்த மாணவ-மாணவியரின் பார்வைகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த விளக்கங்கள்....
>>> அரசுப் பணிகளுக்கான (TNPSC) போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை (Awareness programme) மாணவர்களுக்கு முற்கூட்டியே வழங்குவது குறித்த ஆலோசனை....
>>> மாணவ-மாணவியருக்கு, பெற்றோர்களுக்கு தேவைப்படும் கவுன்சிலிங் குறித்து....
>>> மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் தரப்பிலிருந்து பள்ளி ஆசிரியர்கள் சந்திக்கும் அசௌகரியங்கள் / நடைமுறைச் சிக்கல்கள் குறித்து....
>>> தற்போது மாணவ - மாணவிகள் கல்வியை இடைநிறுத்தம் செய்கின்றனரா? ஆம் எனில் அதன் எண்ணிக்கை, அதற்கான காரணங்கள் குறித்த விபரங்கள்.....
>>> மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான - சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்கள் (Cut Off Marks) குறித்து, மாணவ-மாணவியரிடையே எந்தளவுக்கு விழிப்புணர்வு உள்ளது? குறிப்பாக medical cut off குறித்து...
>>> Medical Cut off marks அதிகளவில் பெறச் செய்யும் அளவில் Biology / Physics / Chemistry பாடத்தில் ஆர்வமுள்ள குறிப்பிட்ட மாணவ-மாணவியரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி (special coaching) அளித்து Merit Quota வில் (பல இலட்சங்கள் செலவழிக்காமல்) குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும் முயற்சியை மேற்கொள்வது குறித்து....
>>> பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக (PTA) கூட்டங்கள் நடத்தப் படுகிறதா? எவ்வளவு கால இடைவெளியில் நடத்தப்படுகிறது? அதன் நிறை-குறைகள் குறித்து...
>>> மாணவ-மாணவியரின் ஒழுக்க மேம்பாடுகள் குறித்த கருத்துக்கள்....
- இவ்வாறாக, தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கூட்ட அழைப்புக் கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, இவை குறித்த கருத்துக்களை ஆயத்தம் செய்து வருமாறு முன்னரே கேட்டுக்கொள்ளப்பட்டிருந்ததன் அடிப்படையில், அவ்வாறே விவாதிக்கப்பட்டது.
கருத்துப் பரிமாற்றங்கள்:
இக்கூட்டப் பொருட்களின் அடிப்படையில் பின்வருமாறு தலைமையாசிரியர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன:-
மாணவர்களை வகைப்படுத்தி வழிகாட்ட வேண்டும்...
>>> 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியரை, முதல்நிலை, நடுநிலை, தாழ்நிலை (Above average, Average, Below average) என மூன்று வகைகளாகப் பிரித்தறிந்து, அவர்களுக்கு தனித்தனியே பயிற்சிகள் (Special coaching) வழங்கப்பட வேண்டும். இந்தப்பயிற்சிக்காக மிகவும் தேர்ந்த ஆசிரியர்களைக்கொண்டு நடத்தப்படவேண்டும். இதனால் தாழ்நிலை (Below average) மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல்நிலை (Above average) மாணவர்களும் கூடுதல் பயன்பெறுவர்.
>>> தாழ்நிலை மாணவர்களுக்கு, குறைந்தபட்சம் அவர்கள் ஃபெயில் ஆகாதிருப்பதற்குத் தேவையான materials வழங்கப்பட வேண்டும்...
உயர் படிப்புகளி்ல் ஆர்வமின்மை:
>>> Medical Cut off marks குறித்த விபரங்கள் அனைத்து மாணவ-மாணவியருக்கும் தெரிந்துள்ளது. ஆனால் சமீப காலமாக மாணவ-மாணவிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை.
>>> IAS, IPS, IFS போன்ற அரசு உயர்பதவிகளுக்கான படிப்புகள் எந்தக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகின்றன?” என்று கேட்கும் நிலையில்தான் பெரும்பாலான மாணவர்களின் நிலையுள்ளது. இது கல்லூரியில் சேர்ந்து படிக்கும் படிப்பல்ல என்பது கூட அவர்களுக்கு விளங்கவில்லை. எனவே, இது குறித்து மாணவ- மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தலாம். இதற்கு அனுபவம் வாய்ந்த IAS, IPS அதிகாரிகளை வரவழைத்து அவர்களின் வெற்றி, தோல்வி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கினால் அது மிகவும் பயன் தரத்தக்கதாக அமையும்.
இந்த நிகழ்ச்சிக்கு பொறியியல், மருத்துவம் படிக்கவிருக்கும் மாணவர்கள் மட்டுமல்ல commerce பயிலும் மாணவர்களுக்கும் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஏனெனில் அவர்களாலும் இதில் சாதிக்க முடியும். இதை ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.
மாணவ-மாணவியரின் அலட்சியம் போக்கப்பட வேண்டும்...
>>> மாணவர்களுள் தாழ்நிலை மற்றும் நடுநிலையிலுள்ளவர்களும், மாணவியருள் முதல் நிலையிலுள்ளவர்களும் தம் மேற்படிப்பு விஷயத்தில் மிகவும் அலட்சியமாகவே உள்ளனர். இத்தகையவர்கள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை.காரணம் கேட்டால் பொய்யான காரணங்களை கூறுகிறார்கள்.
மொழிப்பாடங்களில் மந்தம்:
>>> மொழிப்பாடங்களில் - குறிப்பாக தமிழ் மொழிப்பாடத்தில் ஒரு மதிப்பெண் கூட பெறாத நிலையிலும் மாணவர்கள் உள்ளனர்... அதுவும் அவசியம் என்ற எண்ணம் இல்லை...
ஒழுக்க முன்னேற்றத்திற்கு வழிகாட்டல்:
>>> மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்க முன்னேற்றத்திற்கு பெற்றோரின் சார்பில் தேவையான வழிகாட்டல்கள் முறையாக வழங்கப்படுவதில்லை...
பெற்றோர் தம் கருத்து வேறுபாடுகளைப் பிள்ளைகள் முன் நிகழ்த்தல்:
>>> தாய் - தந்தைக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் குழந்தைகள் முன் வெளிப்படுத்தி, தமது பிரச்சினையின் காரணமாக ஒருவருக்கொருவர் பேசாதிருப்பதும், அவர்களின் தகவல் தொடர்புக்கு (Mediator ஆக) பள்ளிக்கூடம் செல்லும் அவர்களது மக்களைப் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளதன் காரணமாக, பல மாணவ-மாணவியரின் கல்வி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது...
உள்ளூரில் மட்டுமே அலட்சியம்:
>>> உள்ளூர் பள்ளிகளில் பயிலும் உள்ளூர் மாணவர்கள், மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை.மேலும் பள்ளியின் சட்ட விதிகளை மதிப்பதேயில்லை... அதுவே வெளியூர் பள்ளிகளில் பயில்கிறார்களெனில், முழு மனதுடன் மதிக்கும் நிலை உள்ளது...
சுத்தக் குறைவு:
>>> மாணவ -மாணவியரில் பலர் பள்ளிக்கு வரும்போது குளித்து சுத்தமாக வருவதில்லை; அழுக்கு படிந்த சீருடையுடன் வருகின்றனர்.
புகைப் பழக்கம்:
>>> மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் (Smoking) பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
வகுப்பில் உறங்குதல்:
>>> பல மாணவ- மாணவியர்கள் இரவு வீட்டில் சரிவரத் தூங்காமல் பள்ளியில் பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தூங்குகின்றனர்.
உணவுட்கொள்ளாமல் வகுப்பிற்கு வரல்:
>>> மாணவ-மாணவியர் பலர் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து Assembly நடந்து கொண்டிருக்கும் போதோ அல்லது அதன் பின்பு பள்ளிப் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதோ மயக்கமடைந்து விழுகின்றனர்.
மாணவியரின் குறைகள்:
>>> மாணவிகளில் சிலர் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது, தாம் அணிந்துள்ள முக்காடுக்குள் (Scarf ) ear phoneஐ மறைத்து வைத்திருந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருகிறார்கள். சில மாணவிகள் பல வண்ணத்தில் முக்காடு (colour scarf) அணிந்து வருகின்றனர்.
>>> மாணவிகள் பள்ளிக்கு வரும்போது தங்க ஆபரணங்கள் அணிந்து வர வேண்டாம் என்று கூறினாலும் சிலர் அதையே அணிந்து வருகின்றனர்.
பிள்ளைகளின் பேச்சை நம்பி ஆசிரியரை நிந்திக்கும் பெற்றோர்...
>>> பள்ளியில் மாணவரை எதற்காக ஆசிரியர்கள் கண்டித்தனர் என்பதைக் கூட அறிய முயற்சிக்காமல், பிள்ளைகள் சொல்லும் தகவல்களை அப்படியே நம்பிக்கொண்டு, அவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியர்களைப் பெற்றோர் வசைமொழியால் பேசுவது பரவலாக நடைபெறுகிறது. இது வேதனையளிக்கக் கூடியது.
பிள்ளைகளின் தேர்ச்சி தொடர்பாக பெற்றோரின் அக்கறையின்மை:
>>> பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் Rank Card சம்பந்தமாக பள்ளிக்கு வந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டாலும் பள்ளிக்கு வருவதே இல்லை.
பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் கவனமின்மை:
>>> பல மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் தேர்ந்தெடுக்க வேண்டிய Group ஐ தங்களுக்கு முடிந்தது, பிடித்தமானது அல்லது விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிவது என்பதை விடுத்து நண்பர்களின் பேச்சைக் கேட்டு தேர்வு செய்கிறார்கள். இதன் விளைவு? காலப்போக்கில் அந்த மாணவரால் அந்த படிப்பை சரிவர படிக்கவியலாமல் எதிர்காலக் கல்வி தோல்வியில் முடிவதைக் காண முடிகிறது.
சிறப்பு வகுப்புகளில் அலட்சியம்:
>>> மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றம் கருதி, வகுப்புகள் இல்லாத இதர நேரங்களில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில் (Special classes) ஆசிரியர்கள் அனைவரும் இருக்க, மாணவர்கள் வருகையோ மிக மோசமாக இருந்து வருகிறது. எந்த weak studentகளுக்காக நடத்தப் படுகிறதோ அந்த மாணவ-மாணவியர் குடும்பத்தில் நிகழ்ச்சி இருப்பதாக அல்லது ஏதேனும் காரணம் கூறி வருவதில்லை. இதற்கு சில பெற்றோர்களும் உடந்தையாக உள்ளனர்.
“பாஸ் பண்ணினால் போதும்” எனக் கூறும் மாணவியர்:
அது மட்டுமல்ல மாணவிகளில் ஏராளமானோர், ''எங்களை ஏன் பாடாய் படுத்துகிறீர்கள்? நாங்கள் பாஸ் பண்ணினால் போதும். எங்களுக்கு எதற்கு 200 மதிப்பெண்கள்? என்ன படித்தாலும் அருகிலுள்ள பெண்கள் கல்லூரிக்குதான் படிக்கப் போகிறோம்.எங்களுக்கு சீட் கிடைத்து விடும்.அப்படியிருக்க ஏன் ரொம்பவும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் ?'' என்று கேட்கின்றனர். இதைவிட வேதனையான விசயம் சில பெற்றோர்களே தம் பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது, ''காலை Study வைக்கக் கூடாது.மாலை 6 மணிக்குப் பிறகு study வைக்கக் கூடாது'' என்று நிபந்தனையிட்டே சேர்க்கின்றனர். இந்த நிலையில் நாம் எப்படி கல்வி முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும்.இது காயல்பட்டினத்திற்கே உரிய தனித்தன்மையாக, தலையெழுத்தாக ஆகிவிட்டது.
பிள்ளைகளின் உடல்நலக் குறைபாடுகளை முற்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்...
>>> பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது, பிள்ளைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருந்தால் முற்கூட்டியே தெரியப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவல்களை முற்கூட்டியே தெரிவிக்காததால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.
கவனச் சிதறலுக்கான முதன்மைக் காரணங்கள்:
>>> பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன் மற்றும் பைக் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். (பல மாணவ- மாணவியர்கள் தங்களது அல்லது பெற்றோர்களது மொபைல் போனில் ஆபாசப் படங்கள் சேகரித்து வைத்து பார்க்கின்றனர்.) இதனால் பிள்ளைகளின் கவனங்கள் சிதறடிக்கப்பட்டு படிப்பு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் ஒழுக்கக் கேட்டிற்கும் தள்ளப்படுகிறார்கள்.
>>>09ஆம், 10ஆம் வகுப்பு மாணவ-மாணவியரின் பெற்றோருக்குத் தனியாகவும், 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியரின் பெற்றோருக்குத் தனியாகவும் கருத்துப் பரிமாற்றக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.குறிப்பாக மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்தப் படவேண்டும்.சில தந்தைகளுக்கு தன் பிள்ளை எத்தனை படிக்கிறது என்பது கூட சரியாகத் தெரியவில்லை.
ஆசிரியர்களுக்கு உளவள வழிகாட்டல்:
>>> ஆசிரியர்களுக்கும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் (கவுன்சிலிங்) வைக்க வேண்டும். முன்பெல்லாம் ஆசிரியர் பணிக்கு வருபவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் தற்போது வேறு வேலை ஏதும் கிடைக்கவில்லையா? B.Ed படித்தால் வேலை கிடைத்து விடும் என்ற ரீதியில் ஆசிரியர் பணிக்கு வருபவர்கள் ஏராளம். எனவே அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கினால் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு ஏராளமான கருத்துக்கள் தலைமையாசிரியர்களால் முன்வைக்கப்பட்டன.
ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி:
அடுத்து ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி (spoken english) குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒன்றிரண்டு பள்ளிகளில் அதற்கென சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இதர பள்ளியில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.
'ஏராளமான மாணவர்களுக்கு திறமைகள் இருந்தும் அதை வெளிப்படுத்திட முடியாமலும், பணிகளுக்கான நேர்காணலின்(Interview)போது தோல்வியடைவதற்கும் இது ஒரு தடையாக இருந்து வருவதையும், பள்ளிக் கோடை விடுமுறையின்போது, தம்மாம் காயல் நல மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து நடத்திய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியில் ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வமுடன் பயிற்சி பெற்றதையும்' சுட்டிக்காட்டி, இந்த ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி (spoken English class) வருடத்திற்கு ஒரு மாதம் என்றில்லாமல், தொடர்ச்சியாக நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்கான ஒத்துழைப்பை இக்ராஃ அளிக்கத் ஆயத்தமாக உள்ளதாகவும் இக்ராஃ நிர்வாகிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இக்ராஃ / இக்ராஃ மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் காலம் குறிதத கலந்தாலோசனை:
அதனைத் தொடர்ந்து இக்ராஃவின் மூலம் நடத்தப்பட்டு வரும் கல்வி நிகழ்ச்சிகள், இனி நடத்தப் படவேண்டிய, தேவையான கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், அதற்கான கால நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இக்ராஃ & KCGC அமைப்புகள் இணைந்து சமீபத்தில் நடத்திய ''வெற்றியை நோக்கி....'' கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ- மாணவியரின் விருப்பப் படிவம் பூர்த்தி செய்து பெறப்பட்டதில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் விருப்பம் தெரிவித்து விட்டு, நிகழ்ச்சிக்கோ 75 மாணவர்களும், 125 மானவியர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், நிகழ்ச்சிக்கான பல்வேறு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகவே இது குறித்து முற்கூட்டியே வினவப்படுவதாகவும், ஆனால் இது ஒரு கேலிக் கூத்து போன்று ஆகி விட்டது என்றும், பல்வேறு சிரமங்கள், பொருட்செலவுக்கு மத்தியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திடும் எங்களுக்கு மிகுந்த மன வேதனையாக இருப்பதாகவும் இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
இடைநிறுத்தம்:
அடுத்து, பள்ளியில் இடைநிறுத்தம் (Drop out) குறித்து கூறும்போது, அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் மட்டும் சில மாணவிகள் இடை நிறுத்தம் செய்வதாகவும், இதர பள்ளிகளில் Drop out இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இடை நிறுத்தம் செய்துள்ள மாணவிகளின் விபரம் தருமாறும், அவர்களை இக்ராஃ தொடர்பு கொண்டு, அதற்கான காரணங்களை அறிந்து வாய்ப்பிருப்பின் அவர்கள் தொடர்ந்து கல்வி பயில இக்ராஃ மூலம் தேவையான உதவி, ஒத்துழைப்புகள் வழங்கிடமுயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி இடைநிறுத்தம் செய்துள்ள மாணவிகளின் விபரம் தருவதாக அப்பள்ளியின் தலைமையாசிரியை கூறினார்.
அபூதபீ கா.ந.மன்றம் மூலம் கல்வி விழிப்புணர்வு உளவள வழிகாட்டு நிகழ்ச்சி:
அடுத்து எதிர்வரும் 09-01-2016 சனிக்கிழமையன்று காலையில் அனைத்துப்பள்ளி ஆசிரியர்களுக்கும், மாலையில் பெற்றோர்களுக்கும், மனோதத்துவ நிபுணர் மூலம் மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கத்தை, அபூதபீ காயல் நல மன்றமும், இக்ராஃவும் இணைந்து நடத்திட தீர்மானித்திருப்பதாகவும், இதுகுறித்த கருத்தைத் தெரிவிக்குமாறும் தலைமையாசிரியர்களிடம் இக்ராஃ நிர்வாகிகள் எடுத்துரைத்தபோது, அதனை அனைவரும் வரவேற்று, அப்படியானால் அந்நாளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்றாலும் - பள்ளிக்கு விடுமுறையளித்து அனைத்து ஆசிரியர்களையும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி 09-01-2016 சனிக்கிழமை அன்று நடத்துவதை அந்தக் கூட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டது. அது மட்டுமல்ல இது போன்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கை வருடந்தோறும் நடத்தினால் பயனுள்ளதாக அமையும் என்றும் இக்ராஃ நிர்வாகத்தை கேட்டுக்கொண்டனர். இது ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி அடிக்கடி நடத்தப்பட வேண்டும்...
பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்குமிடையே கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். இது நல்ல பலனைத் தரக்கூடும் என்பதை இக்கலந்தாய்வின்போது இக்ராஃ தரப்பில் தலைமையாசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இக்ராஃ - தலைமையாசிரியர் கலந்தாய்வுக் கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை நடத்தலாம்...
அத்துடன் இதுபோன்ற தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தை குறைந்தது வருடத்திற்கு இரு முறையாவது கூட்டி, தற்போது விவாதிக்கப்பட்ட விசயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்தும், அவ்வப்போது காணும் நிறை-குறைகள் குறித்தும் , மாணவ சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கலாம் என்றும் இக்ராஃ தரப்பில் கேட்டுக் கொள்ளப் பட்டது.அதை தலைமையாசிரியர்கள் ஆமோதித்தனர்.
பேசப்பட்டவை பரப்புரைக்கப்படும்...
மேலும் இதுவரை தலைமையாசிரியர்களால் எடுத்துரைக்கப்பட்ட விபரங்கள் யாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பிலான குறைகள் மற்றும் அதனை நிவர்த்தி செய்திட தேவையான ஆலோசனைகளையும், அடுத்து நடைபெறவிருக்கும் பெற்றோர்களுக்கான கல்வி விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டத்தின் மூலமும், இணையதளம் மற்றும் பிரசுரங்கள் மூலமும் அவர்களுக்கு எத்தி வைக்கப்படும் என்றும் இக்ராஃ தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. கலந்துகொண்ட தலைமையாசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கூட்ட நிறைவு:
வந்திருந்த அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், இக்ராஃ பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் நன்றி கூற, ஆசிரியர் எம்.ஏ.புகாரீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத், கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
அனைவருக்கும் வேண்டுகோள்:
இதைக்காணும் சகோதர, சகோதரிகள், பெற்றோர்கள், நமதூர் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ள அனைத்து விசயங்களையும் கவனத்திற் கொண்டு, இந்த அவல நிலையை மாற்றிட தம்மால் இயன்ற பணிகளை (இதர பெற்றோர்களுக்கு, மாணவ-மாணவியருக்கு, குடும்பத்தினர்களுக்கு அறிவுரை) மேற்கொள்ளுமாறும், நமது சமூகத்தை ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய அறிவார்ந்த சமுதாயமாக மாற்றிட உதவிடுமாறும் இக்ராஃ கல்விச் சங்கம் மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறது.'
இவ்வாறு இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம்.
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |