ஐக்கிய அரபு அமீரகம் - துபையில், இரண்டாயிரம் மாணவ-மாணவியர் பங்கேற்க நடைபெற்ற Abacus போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியைச் சேர்ந்த எம்.என்.ஷாஹுல் ஹமீத் – எஸ்.எச்.ஃபாத்திமா ஜுல்ஃபா தம்பதியின் 6 வயது மகன் மாணவர் மஹ்மூத். மஹ்மூத் நெய்னா என்பவரின் மகன் வழிப் பேரனும், ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகள் வழிப் பேரனுமான இவர், ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவிலுள்ள New Indian Model School பள்ளியில் 01ஆம் வகுப்பு பயின்று வருகிறார். (காயல்பட்டினத்தைச் சேர்ந்த நுஸ்கியார் அறக்கட்டளை நிறுவனர் மர்ஹூம் நுஸ்கீ ஹாஜியாரின் மகன் ஜமால் நாஸர் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.)
05.12.2015. சனிக்கிழமையன்று, துபை ஷேக் ராஷித் அரங்கத்தில், Brain O Brain நிறுவனத்தாரால் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட - அமீரக தேசிய அளவிலான 7ஆவது Abacus போட்டியில், சுமார் இரண்டாயிரம் மாணவ-மாணவியருடன் இவரும் கலந்துகொண்டார். முதலாம் நிலை பங்கேற்பாளர்களுக்கான போட்டியில் (1st level competition) இம்மாணவர் சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டார். சாதனை மாணவரை, அவர் பயின்ற பள்ளி நிர்வாகத்தினரும், காயலர்கள் பலரும் பாராட்டினர்.
உலகளவில் பல கிளைகளைக் கொண்ட Brain O Brain நிறுவனம், பள்ளிக்கல்வி பயிலும்மாணவர்கள் நுண்ணறிவுடனும், ஊக்கத்துடனும் பயில்வதற்காக – சிறப்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சியை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
துபையிலிருந்து...
சாளை ஸலீம்
[செய்தி சிறிது திருத்தப்பட்டு, கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 09:59 / 14.01.2016.] |