காயல்பட்டினம் நகரிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்கள் தவிர்த்து - இதர ஆளில்லா நேரங்களில், சந்தேகத்திற்கிடமானவர்கள் வந்து செல்வதும், அதன் தொடர்ச்சியாக பள்ளிவாசலில் உள்ள மைக், ஆம்ப்ளிஃபயர், மின் விசிறிகள், மின் விளக்குகள், சுவர்க்கடிகாரம் உள்ளிட்டவை திருடு போவதும் வாடிக்கை.
இதைத் தவிர்ப்பதற்காக, காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல்களிலேயே முதன்முறையாக குருவித்துறைப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பள்ளியின் உட்பகுதிகளிலும், வெளியில் நாற்புறங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
அத்துடன், 1987ஆம் ஆண்டில் பள்ளிவாசல் புதுப்பித்துக் கட்டப்பட்ட பின்னர் நிறுவப்பட்ட மைக், ஸ்பீக்கர், ஆம்ப்ளிஃபயர், அவற்றுக்கான கம்பிவடங்கள் உள்ளிட்டவை காலாவதியாகும் நிலையிலிருப்பதால், அவையும் முற்றிலுமாக அகற்றப்பட்டு, புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இப்பள்ளிவாசல் கோட்டைச் சுவர் பரந்து விரிந்திருப்பதால், தொழுகைக்கான அழைப்பொலி சுற்றுவட்டாரத்தில் தெளிவாகக் கேட்பதற்காக, கோட்டைச் சுவரின் நான்கு மூலைகளிலும் கூடுதலாக புதிய ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
உளூ செய்யும் ஹவுள் தொட்டி அமைந்துள்ள பகுதியில், ROS முறையிலான குடிநீர் சுத்திகரிப்புக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
இப்பணிகளும், பள்ளியின் வலுவான கட்டிடப் பகுதிகளிலுள்ள சில பழுதுகளை நீக்கும் பணிகளும், சுமார் 3.25 லட்சம் ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டலில், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷேக் அப்துல் காதிர், ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைப்பில் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாத கடைசி வாரத்தில் துவங்கி, டிசம்பர் மாத இரண்டாவது வாரத்தில் பணிகள் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 12:30 / 23.01.2016.]
|